மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்
முகவரி :
அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோவில்,
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் – 603104.
இறைவன்:
மல்லிகேஸ்வரர்
இறைவி:
மல்லிகேஸ்வரி
அறிமுகம்:
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில். சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சீபுரம், திருப்பதி, பெங்களூரு, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும் அரசு பேருந்துகள் மாமல்ல புரத்திற்கு இயக்கப்படுகின்றன.
புராண முக்கியத்துவம் :
7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி செய்தனர். அப்போது பல்லவ மன்னனின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி என்பவர், இக்கோவிலை கட்டி ஒரு காலை பூஜை நடத்தி வந்ததாக கல்வெட்டுகளில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். இக்கோவிலுக்கு வடக்கு திசையில் தாயார் மல்லிகேஸ்வரி அம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. அதேபோல் எதிர் திசையில் நவக்கிரகங்களுக்கும் சன்னிதி உள்ளது.
ஆலயத்தின் தென் திசையில் வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னிதி, வட திசையில் விநாயகர் சன்னிதியும், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னிதியும் இருக்கிறது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என நாயன்மார்கள் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் எதிர்முனையில் வெள்ளியால் வேயப்பட்ட கொடி மரமும், நந்தி சிலையும் காணப்படுகிறது. தூண்களில் அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. சுதை சிற்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்பிக்கைகள்:
ஆடிப்பெருக்கு தினத்தன்று மல்லிகேஸ்வரி அம்மனுக்கு வளையல் காப்பு அபிஷேகம் நடக்கும். அப்போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர் களுக்கு வளையல்கள் வழங்கப்படும். இக்கோவிலில் உள்ள வில்வ மரத்தை சுற்றிவந்து வழிபட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
திருவிழாக்கள்:
பிரதோஷ நாள் அன்று மல்லிகேஸ்வரர், மல்லிகேஸ்வரி மற்றும் நவக்கிரகங்கள், விநாயகர், முருகர், நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு மாலை 4 மணிக்கு தொடங்கும் பால், தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணை உள்ளிட்ட பஞ்சகவ்ய திருமஞ்சன அபிஷேகம் 5 மணி வரை 1 மணி நேரத்திற்கு மேலாகவும் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். அப்போது நடக்கும் ஊஞ்சல் சேவையில் சிவபெருமான் பார்வதியுடன் அலங்கார கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
காலம்
7 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மகாபலிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சீபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை