மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர் மகாசக்தி ஹெத்தையம்மன் கோயில், நீலகிரி
முகவரி
மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர் மகாசக்தி ஹெத்தையம்மன் கோயில், மஞ்சக்கம்பை, குண்டா தாலுகா, நீலகிரி மாவட்டம் – 643221. தொலைபேசி எண்: 0423-2286258 / 9486904422.
இறைவன்
இறைவன்: நாகராஜர் இறைவி: ஹெத்தையம்மன்
அறிமுகம்
இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர் மகாசக்தி ஹெத்தையம்மன் கோவில். பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில், குன்னூர் அருகே உள்ள மஞ்சக்கம்பையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மஞ்சக்கம்பை பஸ் நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை காணலாம். கோவிலுக்கு செல்வதற்கு முன்பு அங்கு நுழைவு வாசல் நம்மை வரவேற்கும் வகையில் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நடந்து சென்றால், ஒரு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடை வற்றாத நீரோடை ஆகும். எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓடையில் கால் கழுவி விட்டு செல்லலாம். முன்னதாக விநாய கரை வணங்கி விட்டு, இடது புறம் பூக்குண்டம் இறங்கும் இடத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீசத்தியநாகராஜர் சன்னிதிக்கு சென்று நாகராஜரை வழிபட வேண்டும். தொடர்ந்து மேல் பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை தரிசிக்கலாம். இந்தக் கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்தும், ஊட்டியில் இருந்தும் 20 கிலோமீட்டர் தூரத்தில் மஞ்சக்கம்பை உள்ளது. 2 மணி நேரத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் குன்னூர், ஊட்டியில் இருந்து மஞ்சூர், அறையட்டி செல்லும் பஸ்களில் சென்று கைக்காட்டி என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து வாடகை வாகனங்கள் மூலமும் கோவிலுக்குச் செல்லலாம். திருவிழா நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
புராண முக்கியத்துவம்
சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்கம்பையில் ஆறு ஓடியது (தற்போது ஓடையாக உள்ளது). ஒரு முறை இந்த ஆற்றை தூர்வாரும் பணி நடந்த போது திடீரென்று பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும், இந்த ஆலயத்தை ஸ்தாபித்தவரும் சத்தம் கேட்ட இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே 2 குகை ஏற்பட்டிருந்தன. அவற்றில் நாகராஜர் சிலை இருப்பது தெரிய வந்தது. அந்த சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அனுதினமும் அந்த சிலைக்கு வழிபாடு தொடர்ந்தது. மேலும் நாகராஜர் சன்னிதிக்கு அருகில் ஹெத்தையம்மன் கோவில் அமைக்கப்பட்டது. கடந்த 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் சத்தியநாக ராஜர் கோவிலில் நாகம் ஒன்று தென்பட்டிருக்கிறது. சில நிமிடங்களில் அந்த நாகம், ஹெத்தையம்மன் சன்னிதியிலும் காணப்பட்டிருக்கிறது. அப்போது தான் சத்தியநாகராஜர் சன்னிதிக்கும், ஹெத்தையம்மன் சன்னிதிக்கும் இடையே சுரங்கப்பாதை இருப்பதே ஊர் மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது. 1970-ம் ஆண்டு சத்தியநாகராஜர் கோவிலுக்கும், 1973-ம் ஆண்டு ஹெத்தையம்மன் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நம்பிக்கைகள்
திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகள், இந்த ஆலயத்திற்கு வந்து சத்தியநாகராஜரையும், ஹெத்தையம்மனையும் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதியர் சத்தியநாகராஜர் கோவிலில் பூஜை செய்து விட்டு தொட்டில் கட்டினால், குழந்தை வரம் கிடைப்பது உறுதி என்கிறார்கள். மேலும் திருமணம் ஆகாத பெண்கள், கன்னி பூஜை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்கள் கண்ட உண்மை. குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடவும் இந்த ஆலயத்தில் பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது. இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பலர், தங்களது தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டுள்ளனர்.
சிறப்பு அம்சங்கள்
மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர், ஹெத்தையம்மன் கோவிலில் மேலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது என்னவென்றால் இந்த ஆலயத்திற்கு 300 மீட்டர் தொலைவில் ராமர் பாதம் உள்ளது. ராமர் பாதம் உள்ள இடத்துக்கு செல்லும் வழியில் ஓடை ஓடுவதால் தண்ணீரின் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அங்கு செல்லும் பாதையில் முதலில் சந்தானலட்சுமி சன்னிதி இருக்கிறது. அதன் எதிரே உள்ள மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வழிபாடு நடத்துகிறார்கள். ஓடைக்கு அருகில் பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சில அடி தூரம் சென்றதும் ராமர் சன்னிதியையும், அதன் அருகில் ஒரு ராட்சத பாறைக்கு அடியில் ராமர் பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அருள் வாக்கு கூறிய பக்தர் ஒருவர், ஹெத்தையம்மன் கோவிலுக்கு அருகில் ராமர் பாதம் இருப்பதாக தெரிவித்தார். ராமர் வனவாசம் சென்ற போது, இந்த வழியாக சென்றதாகவும், அப்போது அவரது பாதம் இங்குள்ள பாதையில் பதிந்ததாகவும் கூறப்படுகிறது. அன்று முதல் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராமர் பாதம் எங்கு இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அங்கு சென்று தரிசனம் செய்து செல்கிறார்கள்.
திருவிழாக்கள்
கோவிலில் ஆண்டு தோறும் மே 1-ந் தேதி பூக்குண்ட திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது, 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவார்கள். இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரு கிறார்கள். கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அது போல செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குண்டா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஊட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்