Wednesday Dec 18, 2024

மருதவஞ்சேரி மனுநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு மனுநாதேஸ்வரர் திருக்கோயில், மருதவஞ்சேரி, மருதவஞ்சேரி (போஸ்ட்), பூந்தோட்டம் (வழி), நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம் – 609 503. போன்: +91 94439 73346, 99432 28987, 96774 86180

இறைவன்

இறைவன்: மனுநாதேஸ்வரர் இறைவி: மாணிக்க சிவகாம சுந்தரி

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் அருகே உள்ள மருதவாஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மனுநாதேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் மனுநாதேஸ்வரர் என்றும், தாயார் மாணிக்க சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய சிவன் கோயில். இத்தலத்தை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு பார்த்த சிவாலயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.

புராண முக்கியத்துவம்

மநுநீதிசோழனுக்கு வீதிவிடங்கன் என்ற அழகான ஒரு மகன் இருந்தான். தேரேறி வீதியுலா கிளம்பினான். அப்பொழுது அவனையே அறியாது அவனது தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்துவிட்டது. இதைக்கண்ட தாய்ப்பசு அரண்மனை சென்று, ஆராய்ச்சி மணியின் கயிற்றை தனது வாயால் அடித்து நீதி கேட்டது. மன்னனும் பசுவின் பின்னால் சென்று பார்த்தபோது, வீதிவிடங்கன் வந்த பாதையில் பசுவின் கன்று இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். பசுவின் துயரறிந்த மன்னன், தானும் தன் மகனை இழத்தலே தகுமென்று, மந்திரியிடம் இளவரசனைத் தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்திற்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் மகனைத் தேரேற்றிக் கொன்றான் அவ்வாறு தன் மகனைத் தேரேற்றிக் கொன்ற பாவத்தால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியதஅதிலிருந்து விடுபட சோழமன்னன் தென்திசை நாடி திருவீழிமிழலையை அடைந்து, அரிசில் நதியிலும் தீர்த்தப் புஷ்கரணியிலும் நீராடி, விதிப்படி இறைவனைப் பூஜித்தான். பின்னர் தென்கீழ்த்திசையில் ஐங்குரோச தூரத்தில் ஒரு தவச்சாலையை அமைத்து அங்கே அருந்தவங்கள் புரிந்தான். அவ்விடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தீர்த்தமும் உண்டாக்கி, நித்திய நிவேதனங்களையும் செய்தான். மநுதவம் செய்த இடம் மநுதவஞ்சேரி எனப்பட்டு, தற்போது அது மருதவஞ்சேரி என்று வழங்கப்படுகிறது. சோழமன்னன் மருதவஞ்சேரியில் மிகப்பெரிய யாகம் ஒன்றினையும் செய்தான். அதன் முடிவில் அந்தணர் நூற்றுவர்க்கு வீடும், நிலமும், பொன், பொருள், ஆடைகளும் தானமாகக் கொடுக்க எண்ணம் கொண்டான். அவ்வாறு செய்யும்போது அந்தணர் இருவர் குறையவே, தம் வேள்விக்கு தடை நேரிடுமோ என்று வருந்திய மன்னன், மருதவஞ்சேரியிலிருந்தே திருவீழிமிழலையில் உறையும் வீழிநாதரை மனமுருகத் துதித்துத் தம் குறையைத் தீர்க்குமாறு வேண்டினான். அன்றிரவு மநுவின் கனவில் வீழிநாதர் தோன்றி, அஞ்சேல் நாளை உம் குறை தீர்ப்போம் எனக் கூறியருளினார். மறுநாள் திருவீழிமிழலையிலிருந்து வீழிநாதப் பெருமானும், வரதராஜபெருமாளும் அந்தணர் வடிவில் வந்தனர். அவர்களை ஒரு சிறுவன் மருதவஞ்சேரிக்கு யாகம் நடக்குமிடத்திற்கு அழைத்துவந்தான். பிராமணர் வடிவில் வீழிநாதரும், வரதராஜ பெருமாளும், சிறுவனாக வந்த விநாயகரும் மநுவின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி, குறைதீர்த்து மறைந்தருளினர். மநுநீதிசோழன் ஸ்தாபித்த லிங்கத்தை வைத்து பின்னாளில் கோயில் எழுப்பப்பட்டது. அதன்பின் பிற்காலச் சோழர்கள் வழிபட்டதாக ஸ்தலபுராணம் சொல்கிறது.

நம்பிக்கைகள்

மாத சிவராத்திரியன்று விரதமிருந்து வழிபாடுகள் மேற்கொண்டால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்கின்றனர் பக்தர்கள்.

சிறப்பு அம்சங்கள்

மேற்கு நோக்கிய சிவன்கோயில். ராஜகோபுரம் இல்லை. மேற்கே உள்ளே நுழைவாயிலைக் கடந்ததும் நிருதிமூலையில் சித்தி விநாயகர் க்ஷேத்திர விநாயகராக அருள்புரிகிறார். நந்தி தேவர், பலிபீடத்தையடுத்து மகாமண்டபம் உள்ளது. தெற்கே சுதை வடிவில் ஒரு மேடையில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. அதனையடுத்து அர்த்தமண்டபத்தின் உட்புறம் வீழிநாதரையும் வரதராஜபெருமாளையும் அழைத்துவந்த பாலவிநாயகர் சிலை உள்ளது. தெற்குநோக்கிய வண்ணம் நடராஜரும் சிவகாமியம்மையும் அருள்புரிகிறார்கள். சுதை வடிவில் துவார பாலகர்கள் டிண்டி, முண்டி சிலைகள் உள்ளன.

திருவிழாக்கள்

இங்கு மகாசிவராத்திரி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மருதவஞ்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பூந்தோட்டம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top