மரக்காணம் பூமீஸ்வரர் சிவன்கோயில், விழுப்புரம்
முகவரி :
மரக்காணம் பூமீஸ்வரர் சிவன்கோயில்,
மரக்காணம், மரக்காணம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 604303.
இறைவன்:
பூமீஸ்வரர்
அறிமுகம்:
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இவ்வூரிலுள்ள தொன்மையான ‘பூமீசுவரர் கோயில்’ எனும் இக்கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜனால் கட்டப்பட்டது. சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சிறப்புடன் திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில். சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. `எயில்’ என்பதும் `சோ’ என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்’ என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.
பல்லவ மன்னா்களும் மாமன்னா் ராஜராஜ சோழனும், பாண்டிய மன்னா்களும் வந்து வழிபாடு செய்து, பல கொடைகளை அளித்த இந்தத் திருக்கோயில் பிரதான சாலையில் இருந்தாலும் தற்போது பக்தா்களின் வருகை அதிகமின்றி உள்ளது. திருக்கோயில் கல்வெட்டுகள் பல சிதைவுற்ற நிலையில் உள்ளன. சிதைவடையாத கல்வெட்டுகளும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு, படிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளன. இத்திருக்கோயிலின் கல்வெட்டுகளைப் பாதுகாக்க, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் தொல்லியல் துறையும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட திருக் கோயிலின் புனித தீா்த்தமான `பிரம்ம தீா்த்தம்’ மாசடைந்து, பராமரிக்கப்படாமல் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
சிவபக்தா் ஒருவா் இத்தலத்தில் வாழ்ந்து வந்தார் அவரிடம் தனது திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்ட ஈசன், முனிவராக உருவெடுத்து அந்த பக்தரின் வீட்டிருக்கு சென்றார். முனிவரை வரவேற்று உபசரித்த சிவனடியார் அவருக்காக உணவு தயாரித்தார். பின்னர் முனிவரைப் பசியாற அழைக்க உணவருந்துவதற்குமுன் சிவாலய தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம் என்று அடியாரிடம் கூற அருகில் சிவத்தலம் இல்ல்லாமையால் ஒரு மரக்காலை குப்புற கவிழ்த்து வைத்து லிங்க பூஜை செய்யுமாறு கூற முனிவரும் சிவபூஜையை இனிதே முடித்து, உணவருந்தி மகிழ்ந்து, அடியாரை ஆசீா்வதித்து விடைபெற்றார்.
அவர் சென்றதும், சிவபக்தர் மரக்கால்படியை எடுக்க முயற்சி செய்ய, அதை அசைக்கக்கூட முடியவில்லை அடியவரால். மரக்கால் படியைத் தரையிலிருந்து பெயா்த்தெடுப்பதற்காக கடப்பாரை எடுக்கச் சென்ற அடியார் திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் மரக்காலை காணவில்லை.. சிவபக்தா் வைத்த மரக்கால் சிவலிங்கமாகப் புதைந்திருப்பதைக் கண்டார். பூமியிலிருந்து சுயம்புத் திருமேனியாக வெளிப்பட்ட இந்த ஈசனைத் தொழுது வழிபட்டால், நிலம் தொடா்பான பிரச்னை களில் விரைவில் தீா்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்களின் வேண்டுதல் பலித்ததும், ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
கோயிலின் வடக்கில் அழகிய கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய குளம் ஒன்றும் உள்ளது. தமிழா்களின் தொன்மையான நாகரீகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமாக பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆழிப்பேரலையின் சீற்றம் காரணமாக மரக்காணம் கடற்கரையில் இருந்த சங்ககாலத்துத் துறைமுகம் அழிந்துவிட்டதற்குச் சான்றாக, உயா்ந்த மண்மேடுகள் பல இன்றும் கடற்கரைக்கு அருகே காணப்படுகின்றன.
மரக்காணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமீஸ்வரா், சோழர்கள் காலத்தில் ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனார் என்று பல பெயர்களால் வணங்கப் பட்டதைக் கல்வெட்டு தகவல்களிலிருந்து அறிய முடிகிறது. விஜயநகர மன்னா்களின் ஆட்சிக்காலத்தில், இத்தலத்து ஈசன் `பூமீஸ்வரமுடைய தம்பிரான்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.
கோஷ்டத்திலும் பிராகாரச் சுற்றிலும் அருளும் இறை மூா்த்தங்கள் சோழா்கால சிற்பி களின் கலைத்திறனுக்குச் சான்றாக திகழ்கின்றன. கோஷ்டத்தில், விநாயகா் இருக்கவேண்டிய இடத்தில், பிட்சாடன மூர்த்தி அருள்கிறார். திருக்கோயிலை சுற்றி உயரமான மதில் சுவர் கட்டப்பட்டு கோயில் ஒரு கோட்டை போல காட்சியளிக்கிறது, இறைவன் பூமிஸ்வரர் எதிரில் உயர்ந்த கொடிமரம் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை எதிரில் சாளரம் உள்ளது இதன் வழி மட்டுமே தரிசிக்க இயலும் இதன் இருபுறமும் விநாயகர்கள் உள்ளார்கள். இறைவன் கருவறைக்கு செல்ல தென்புறம் வழியாக செல்ல வேண்டும். இறைவன் பூமீஸ்வரர் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவி தென்புறம் நோக்கியவராக உள்ளார். பிரகாரத்தின் தென்புறம் பல விநாயகர் சிலைகளும், நால்வர் சிலைகளும் உள்ளன. பின் புறம் முருகன் சன்னதி உள்ளது. மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உள்ளார்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மரக்காணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மரக்காணம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை