Saturday Nov 23, 2024

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004. போன்: +91- 44 – 2464 1670.

இறைவன்

இறைவன்: கபாலீஸ்வரர் இறைவி: கற்பகாம்பாள்

அறிமுகம்

கபாலீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள கோவில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

புராண முக்கியத்துவம்

உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்’ என சாபமிட்டார். “சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்’ எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, “மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக’ என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி “மயிலை’ என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை – ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம் ஹை லைட்ஸ் மயிலாப்பூர் : 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார்.மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது. கபாலீசுவரம் : பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. இலக்கிய சிறப்பு : திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய “மட்டிட்ட புன்னையங் கானல்…’ எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி, “”மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்” என்று பதிகம் பாடினார். “”மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,” என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார். யானையில் தேவியர்: சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். சிறப்பம்சம்: கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு பவுர்ணமியிலும் விசேஷ பூஜை நடக்கிறது. அம்பிகை மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால், “மயிலாப்பூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் “கற்பகாம்பிகை’ எனப்பட்டாள். பங்குனியில் அறுபத்துமூவர் விழா நடக்கும்போது நாயன்மார்கள் வீதியுலா செல்வது சிறப்பு. இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில், ஏழு நிலைகள்,ஒன்பது கலசங்கள் அமைந்துள்ளது. கோபுரத்தின் வடக்கில் பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கோபுரத்தை சுற்றி புராணகால சிற்பங்களும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் நர்த்தன விநாயகரும், அவருக்கு இடது பக்க சன்னதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையாளும் உள்ளனர். வலது பக்கம் ஜகதீஸ்வரர், நவக்கிரகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. கோயிலின் தெற்கு பிரகாரத்திலிருந்து பார்த்தால் ராஜகோபுரத்தின் முழுமையான தரிசனம் கிடைக்கும். ராஜகோபுரத்தை அடுத்து தேர் மண்டபமும், பிரகாரத்தின் தென்பகுதியில் மடப்பள்ளி, அன்னதான மண்டபம், பூங்காவனம், பழநி ஆண்டவர் சன்னதி, இத்தலத்தில் அவதரித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயன்மாரின் சன்னதி , நூல்நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. பிரகாரத்தின் நடுவில் 16 கால் நவராத்திரி மண்டபமும், நால்வர் மண்டபமும் உள்ளது. இங்குள்ள சிங்கார வேலர் மயில் வாகனத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியில் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்கள், பிரமாண்டமான விமானத்துடன் கூடிய இந்த சன்னதியில் இவருக்கென தனி கொடி மரம் உள்ளது. இந்த முருகனைப்புகழ்ந்து அருணகிரி நாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கான தனி சன்னதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்திற்காக, நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தான் கபாலீஸ்வரரின் மேற்கு நோக்கிய சன்னதியும், கற்பகாம்பாளின் தெற்கு நோக்கிய சன்னதியும் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். சிவனுக்கு எதிரில் நந்தி மண்டபம், பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மேற்கு வாசலின் அருகே சிவனைபார்த்தபடி திருஞானசம்பந்தரும், அங்கம்பூம்பாவையும் தனி சன்னதியில் உள்ளனர். இந்த வாசலுக்கு எதிரில் தான் கபாலீஸ்வரர் தெப்பக்குளம் அமைந்துள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கேற்ப, இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோயிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர்,ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது. கோயிலின் வட கிழக்கு பிரகாரத்தின் தெற்கு பக்கம் தல விருட்சம் புன்னை மரமும், கோசாலையும் அமைந்துள்ளது. பெண்கள் தல விருட்சத்தில் குழந்தைபாக்கியம், தாலிபாக்கியம் வேண்டி வழிபாடு செய்கின்றனர். கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பஞ்சாட்சர மந்திரம் கூறும் போது, கவனிக்காமல் அருகிலிருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் பெற்றாள். அவள் மீண்டும் சிவனை அடைய இங்கு வழிபாடு செய்த காட்சி இங்கு புன்னைவன நாதர் சன்னதியில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் இத்தலத்திற்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்தது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர… அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண சிலிர்த்துப் போவோம். சிவ – பார்வதி தரிசனம் ஒருபக்கம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில்… அடியவர்களும் ஆண்டவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றுகிற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள். மயிலாப்பூரின் ஒவ்வொரு தெருவிலும் கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் தண்ணீர்ப்பந்தலும் மோர்ப்பந்தலும் களைகட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் அன்னதானம் சிறப்புற நடைபெறும். மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்! அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிற விழா எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

திருவிழாக்கள்

பங்குனிப் பெருவிழா – பங்குனி -10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மயிலாப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top