மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி
முகவரி :
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில்,
மண்டைக்காடு பிரதான சாலை, மண்டைக்காடு,
கன்னியாகுமரி மாவட்டம்,
தமிழ்நாடு 629252
இறைவி:
பகவதி அம்மன்
அறிமுகம்:
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள கொளச்சேலுக்கு அருகிலுள்ள மண்டைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், பார்வதி தேவிக்கு (பகவதி என்று அழைக்கப்படும்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடலோரத்தில் உள்ள இக்கோயில் தமிழகம் மற்றும் கேரள மக்கள் விரும்பிச் செல்லும் புனித யாத்திரை தலமாகும். மண்டைக்காடு பகுதியில் நாகர்கோவில் – கொளச்சல் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கேரள பாரம்பரியத்தில் மிகவும் எளிமையான முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித மரங்கள் அரச மரம் மற்றும் வேம்பு. தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. இக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை. இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது. இத்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.
நம்பிக்கைகள்:
‘விழி மூடாத பகவதி’ இவள் என்கிறார்கள். தீயவர்களைத் அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் எப்போதும் விழித்திருப்பவள் என்பதால் இந்தப் பெயராம். இவளை வேண்டிக்கொண்டு தொடங்கும் எந்தக் காரியமும் தடையில்லாமல் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இங்கு அமைத்த ஸ்ரீசக்கரமும் அம்மனின் வடிவமாக இருந்து பக்தர்களைக் காத்து வருகிறதாம்.
மண்டைக்காடு பகவதிக்கு அப்பம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மண்டையிடி குணமாகும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து மண் சோறு உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்றும், தாலி காணிக்கை செலுத்தினால் திருமண வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. உடல் உபாதைகள் கொண்டவர்கள், குறை உள்ளவர்கள் இங்கு வந்து உலோகத்தால் ஆன சின்ன சின்ன உறுப்புகளை அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி நிவாரணம் பெற வேண்டிக் கொள்கிறார்கள்.
மேலும் இங்குள்ள கிணறுக்கு தோண்டியும், கயிறும் வாங்கிக் கொடுத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள் என்பதும் சிறப்பு. 27 தீபங்கள் ஏற்றி, அம்மனை 9 முறை சுற்றி வந்தால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பதும் இங்குள்ள வழக்கம்.
சிறப்பு அம்சங்கள்:
சேரர்கள் காலத்தில் இந்தப் பகுதி பனங்காடாக இருந்து வந்துள்ளது. இந்த பனங்காட்டில் புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். அப்போது பனங்காட்டு காளியாக வழிபடப்பட்டவள், பிறகு கேரள மக்களின் வழக்கப்படி ‘பகவதி அம்மன்’ என்றானாளாம். மேய்ச்சல் வெளியாக இந்த பகுதி இருந்ததால் முன்பு ‘மந்தைக்காடு’ என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, ‘மண்டைக்காடு’ என்று மாறியதாக கூறுகிறார்கள்.
அம்மன் இங்கு சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய புற்றாக வணங்கப்படுகிறாள். இந்த புற்று வடிவம் கொண்ட அம்மன் வளர்ந்து கொண்டே வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். பிரமாண்டப் புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் பகவதி அம்மனுக்கு முன்பாக வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும், மற்றுமொரு வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும் அம்மன் இங்கு வீற்றிருக்கிறாள்.
மாசி மாத கொடை விழா இங்கு சிறப்பானது. மாசிக் கொடை விழாவின் நிறைவு நாள், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறும். இது பகவதி அம்மனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி. இந்த ஒடுக்கு பூஜைக்காக, பகவதி கோயிலுக்கு அருகே உள்ள சாஸ்தா கோயிலில் உணவுகளைத் தயாரித்து, நீளமான வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அப்போது, லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்து இருந்தாலும் ஒரு சின்ன சத்தம்கூட கேட்காது என்பது சிறப்பு. அம்மனுக்குப் படையல் போடும்போது எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதே இதன் ஐதீகம்.
இந்த விழாவைக்காண சபரிமலைக்கு விரதமிருந்து ஆண் பக்தர்கள் வருவதைப்போல 41 நாள்கள் விரதமிருந்து பெண் பக்தர்கள் இருமுடிகட்டி இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். மாசி மாத விழாவைப் போல, ஆவணி மாத அஸ்வதி பொங்காலை விழாவும் இங்கு சிறப்பானது. அதேபோல் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் இங்கு விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படும்.
திருவிழாக்கள்:
மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா – 10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மண்டைக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகர்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்