மணக்கால் ஐயம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில், மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல், திருவாரூர் – 610104. போன்: +91 9788040397
இறைவன்
இறைவன்: வைகுண்ட நாராயண பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி
அறிமுகம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ள வைகுண்ட நாராயணப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சோழர் ஆட்சிக் காலத்தில் இத்தலம் திருப்பெருவேலூர் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள மணக்கல் அபிமுக்தீஸ்வரர் கோயிலை திருஞானசம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் போற்றியுள்ளார். இக்கோயில் சுக்ர தோஷ பரிகார ஸ்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
புதை பொருளாக கிடைத்த விக்ரஹங்களை கொண்டு கோயில் கடப்பட்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் புதுப்பித்து கட்டி இந்த ஊரை சதுர்வேதிமங்கலம் என அழைத்துள்ளனர். கி.பி.14 ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது கோயில் சேதமடைந்துள்ளது. அதன்பின் நாயக்கர் காலத்தில் வடிவம் பெற்றுள்ளது. பின்னாளில் கோயில் இடிந்து சேதமடைந்து முட்புதற்கள் மண்டி இருந்தது. சென்னையில் உள்ள டாக்டர் சிவராமன் கனவில்தோன்றிய பெருமாள் தனக்கு கோயில் கட்டி புதுப்பிக்க கூறியுள்ளார். அவர் சென்னையில் இருந்து இங்கு வந்து கிராம பிரமுகர்களை அழைத்து விபரத்தை கூறி கோயில் கட்டி கடந்த 2002 கும்பாபிஷேகம் நடத்தி பராமரித்துவந்தார். இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது.
நம்பிக்கைகள்
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் முன்னேற்றம் அடைய, சுக்கிர நிவர்த்தியடையவும், தோஷங்கள் நீங்கவும், சக்கரதாழ்வாருக்கு தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகளில் காலை 6-8 மணிக்குள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
கோயில் கட்ட பள்ளம் தோண்டிய போது பல்வேறு புதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 12 ஆம் நூற்றாண்டில் சைவ நெறி தழைத்த நிலையில் அப்பர் பெருமானால் பாடல்பெற்ற அபிமுக்தீஸ்வரர் கோயில் உருவான நிலையில் இக்கோயிலும் பிரபலமாகியுள்ளது. இங்கு ஆதி மூலவர் நான்கு கரத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த நிலையில் சிரித்த கோலத்தில், இடதுகையில் சங்கு, அபய முத்திரையும், வலது கையில் அபய சக்கரம் மற்றும் அபய அஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். சோழ மண்டல வம்சத்தினர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
திருவிழாக்கள்
ராமநவமி, அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்கால் ஐயம்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி