மடப்புரம் பத்திர காளியம்மன் திருக்கோயில், சிவகங்கை
முகவரி :
அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்,
மடப்புரம்.
சிவகங்கை மாவட்டம் – 630611.
போன்: +91 – 4575 272411
இறைவி:
பத்திர காளியம்மன்
அறிமுகம்:
பத்ரகாளி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மதுரையை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 49 மற்றும் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மடப்புரம் என்பது இந்தியாவின் ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம் மதுரையிலிருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மதுரைக்கு அருகில் மடப்புரம் இருந்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது.
மடப்புரம் காளி மதுரை பாண்டிய மன்னனின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. கோயிலுக்கு மேற்கூரை இல்லை. மடப்புரம் காளி கூரையின்றி சுமார் 12 அடி (3.7 மீ) உயரத்தில் நிற்கிறாள். அமாவாசை நாட்களில் எலுமிச்சம்பழ மாலையும் அர்ச்சனையும் வைத்து மக்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள். இன்று இந்த கோவில் தமிழ்நாடு அரசின் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார். மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கேதிருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள். அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார். இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார். மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.
நம்பிக்கைகள்:
செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர். பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.
சிறப்பு அம்சங்கள்:
பத்ரகாளியம்மன் தோற்றம் : சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது. காளி நிற்கும் பீடபீ ம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.
அடைக்கலம் காத்த அய்யனார் : மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும். இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்.
தலபெருமைகள் : அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு. ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில். தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
திருவிழாக்கள்:
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம். தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மடப்புரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருப்புவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை