மடத்துப்பாளையம் வள்ளியம்மன் திருக்கோயில், திருப்பூர்
முகவரி :
மடத்துப்பாளையம் வள்ளியம்மன் திருக்கோயில்,
மடத்துப்பாளையம், தாராபுரம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம் – 638110.
இறைவி:
வள்ளியம்மன் / கன்னிமாரம்மன்
அறிமுகம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மடத்துப்பாளையம் என்னும்கிராமத்தில் வள்ளியம்மன் கோய்ல் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள அம்மனை கன்னிமாரம்மன் என்றும் அழைக்கின்றனர். ஊரின் கிழக்கு எல்லையில் வடக்கு நோக்கி மேற்கூரையுடன் அமைந்த கொட்டகையில் அம்மனுடன் பரிவார தெய்வங்களும் காட்சி தருகின்றனர்.
புராண முக்கியத்துவம் :
எட்டு தலை முறைக்கு முன் கவுண்டரய்யனும், அவர் தங்கை வள்ளி அம்மாளும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் இறைவன் திருவிளையாடலால் வள்ளியம்மாள் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இந்த நிலையில் ஒருநாள், கவுண்டரய்யனின் கனவில் அம்மன் தோன்றி ஊர் நன்மைக்காகவும், உமது முன்னோர் வேண்டுதலாலும் அந்த ஈஸ்வரனின் கட்டளையின்படி நானே உன் தங்கையாக பிறந்து; இறக்க நேரிட்டது; யாமே ஊஞ்ச வனச்சோலையில் இச்சி மர நிழலில் ஏழு கன்னியராக அடக்கமாகி இருக்கிறோம். எனவே எனக்கு கோவில் அமைத்து வருடத்தில் ஒரு நாள் என்னை வழிபடுங்கள். இந்த ஊரையே செழிக்க வைக்கிறேன். இந்த ஊர் வளமான பூமியாக இருக்கும். இது என் பொறுப்பு” என்று கூறி மறைந்தாள் அன்னை பராசக்தி!
உடனே கவுண்டரய்யன் ஊஞ்சவனச் சோலைக்கு ஓடினார். அங்கே, இச்சி மரத்தடியில் இருந்த கல்லின் மீது, காராம்பசு ஒன்று பால் சொரிந்தபடி இருந்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த கவுண்டரய்யன்,
ஊருக்குள் ஓடி தகவலைச் சொன்னார். அதிசயித்து வியந்த ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். ஏழு கன்னிமார்களுக்கும் சிலைகள் பிரதிஷ்டை செய்து கன்னிமாரம்மன் எனப் பெயரிட்டனர்.
ஊரின் நுழைவாயிலில் கிழக்கு எல்லையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரம்மாண்டமான ஆலயம். திறந்தவெளி கோயிலுக்குள் அம்மனும் பரிவார தெய்வங்களும் இச்சிமர நிழலில் காட்சி தருகின்றனர்.
நம்பிக்கைகள்:
இந்த அம்மனை வணங்கி வழிபட்டால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதன் பலன் கிடைக்கும், அமோக விளைச்சல் பெருகும்; குழந்தைச் செல்வம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும் என்கின்றனர் பக்தர்கள்.
சிறப்பு அம்சங்கள்:
மாசி மாதம்– மகா சிவராத்திரி நாளில், கன்னிமார் அம்மனுக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு துவங்கும் விழா, இரண்டு தினங்கள் நடை பெருகிறது.
திருவிழா அன்று மாலை 6 மணிக்கு, ஊருக்குள் இருக்கிற கோயில் வீட்டில் இருந்து உற்சவமூர்த்தியை மேளதாளத்துடன் கோயிலுக்கு எடுத்து வருவார்கள்; பிறகு,
கோயில் வாசலில் ஊர்மக்கள் ஒன்றுகூடிப் பொங்கல் படையலிடுவர். நள்ளிரவு சுமார் 2 மணிக்கு, கன்னிமார் அம்மனின் அருமை பெருமைகளையும் அவளின் வரலாறையும் பாட்டாகப் பாடுவார்கள். அப்போது, அங்கேயுள்ள ஆண்கள் பலரும் அருள் வந்து மயங்கி விழுவார்களாம்.
பிறகு அருகில் உள்ள கோவில் கிணற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனிடம் வைத்து பூசைகள் செய்வர். இதையடுத்து, மயங்கிக் கிடக்கும் ஆண்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்படும் அதன் பின்னரே சுயநினைவிற்கு வருவர். இதனை “படுகளம் போடுதல்” என்கின்றனர். இதையடுத்து கன்னிமாரம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும்சிறப்பு பூஜைகள் நடத்தி, விழாவை நிறைவு செய்கின்றனர். இதன் பிறகு, அடுத்த வருடத்தில்தான் கன்னிமாரம்மனுக்கு பூசைகள் நடைபெறுமாம்!
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மடத்துப்பாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்