Thursday Dec 26, 2024

மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி :

அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோயில்,

மகேந்திரவாடி,

வேலூர் மாவட்டம் – 632502.

இறைவன்:

சோமநாதேஸ்வரர்

இறைவி:

காமாட்சி

அறிமுகம்:

 சந்திரனை மனோகாரகன் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். ஒருவருக்குச் சந்திரனின் பூரண அருள் இருந்தால் அவர்கள், எடுத்துக் கொண்ட காரியங்களில் மனத் திண்மையுடன் செயலாற்றி வெற்றி பெறுவார்கள் என்பது பெரியோர் வாக்கு. அத்தகைய சந்திரனே ஒருமுறை சாபத்துக்கும் சஞ்சலத்துக்கும் ஆளானான்.  தன்னுடைய இந்தக் குறைகள் நீங்கிட சிவபெருமானைச் சரணடைந்து வழிபட்டு அருள்பெற்றான் என்கின்றன புராணங்கள். சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. இந்தத் தலங்களின் வரிசையில் வேலூர் மாவட்டத்திலும் சந்திரன் வழிபட்ட சிவத்தலம் ஒன்று உண்டு. அதன் பெயர் மகேந்திரவாடி. இங்கே அருளும் இறைவனின் திருநாமம் அருள்மிகு சோமநாதேஸ்வரர்.

சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மகேந்திரவாடி. பாலா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் நெமிலியில் இருந்து, சுமார் 7 கி.மீ. தொலைவு; காஞ்சிபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள், மகேந்திரவாடி வழியாகச் செல்லும்.

புராண முக்கியத்துவம் :

இங்கு இந்த இறைவனாருக்குக் கோயில் எழுப்பியவர், மாமன்னன் மகேந்திரவர்மப் பல்லவன். அவன் பெயராலேயே இந்த ஊர் மகேந்திர பாடி என்று அழைக்கப்பட்டது. தற்போது மகேந்திரவாடி என்று அழைக்கப்படுகிறது. இங்கே சிவாலயம் மட்டுமன்றி, மகாவிஷ்ணுவுக்கும் குடைவரைக் கோயில் எழுப்பியுள்ளார் மகேந்திரவர்மப் பல்லவன்

மகேந்திரவாடியில் பெரியதொரு ஏரியை உண்டாக்கிய மன்னன், பாலாற்றில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டி, அந்த ஏரியுடன் இணைத்தானாம். இதற்கு மகேந்திர தடாகம் எனப் பெயரிட்டான். ஒருகாலத்தில், இந்தத் தலத்தில் பெரியதொரு கோட்டை இருந்ததாம். இப்போது கோட்டை இருந்த இடத்தில் சிறியதொரு பாறையும், அதன் மீது விநாயகர் கோயிலும் உள்ளன.


அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள். இவர்களைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார் தட்சன். இந்தப் பெண்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டுமே அன்பு பாராட்டினான் சந்திரன். இதனால், ஏனைய மனைவிகள் வருத்தம் அடைந்தனர்; தட்சனிடம் சென்று முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனைச் சபித்தார்.

சாபத்தின் காரணமாக சந்திரனின் அழகு தொலைந்தது; ரோக நோயால் வாடினான். சாப விமோசனத்துக்கு சிவனாரைச் சரணடைவதே உத்தமம் எனப் புரிந்துகொண்டு, தவம் செய்து அவரைத் தரிசித்து வணங்கினான்.

சந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவனார், மூன்றாம் பிறையளவு இருந்த அவனைத் தன் தலையில் சூடிக் கொண்டார். இதனால் அவருக்குச் சந்திரசேகரர் எனும் பெயர் அமைந்தது. அவரின் திருவருளால், இழந்த அழகை மீண்டும் பெற்றான் சந்திரன். தட்சனின் சாபத்தின் காரணமாகத் தேய்பிறையும், ஈசனின் அருளால் வளர்பிறையும் அமைந்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.


“அற்புதமான இந்த ஆலயத்தில் சில வருடங்களுக்குமுன் காஞ்சி சங்கரமடத்தின் ஆதரவுடனும் ஆசியுடனும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, சந்திர புஷ்கரணி திருக்குளம் மற்றும் சில சந்நிதிகள் திருப்பணி, உற்சவர் திருமேனிகள் செய்வது, ஆலய வழிபாடுகள் ஆகியவற்றுக்கு நிதித் தேவை உள்ளது. அதேபோல், கோட்டை விநாயகர் சந்நிதிக்கும் திருப்பணி செய்ய வேண்டியுள்ளது. சிவ பக்தர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி இறையருள் பெறலாம்’’ என்கிறார்கள், ஆலயம் சார்ந்த பக்தர்கள்.

நம்பிக்கைகள்:

கோயிலின் வடக்குப் பகுதியில், சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. திங்கள்கிழமை அன்று அதில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சந்திர தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும் என்பது ஐதீகம்!

சிறப்பு அம்சங்கள்:

அற்புதமான இந்த ஊரின் நடுநாயகமாக, அருள்மிகு சோமநாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கருங்கல் திருப்பணியால் அமைக்கப்பட்ட, சிறிய ஆலயம்; ஆனால், இறைவன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவனார் கிழக்கு நோக்கியும், அம்பிகை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.


ஆலயப் பிராகாரத்தில், ஆறுமுகனுக்கும் சந்நிதி உள்ளது. ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த கோலத்தில், தேவியருடன் காட்சி தருகிறார் இந்த ஆறுமுகப் பெருமான். சஷ்டி, கார்த்திகை, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திர தினம் ஆகிய நாள்களில் இவரை வழிபடுவது விசேஷம். லட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மகேந்திரவாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோளிங்கர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top