Saturday Jan 18, 2025

பெரியப்பாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில், பெரியப்பாளையம், திருவள்ளூர் மாவட்டம் – 600089, தமிழ்நாடு 044-27927177 / +91 9444487487

இறைவன்

இறைவி: ஸ்ரீ பவானி அம்மன்

அறிமுகம்

பாளையம் என்றால் படை வீடு என்ற பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து செங்குன்றம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் பெரியபாளையம் உள்ளது. சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம். பவானி அம்மன் தனது முன்புற வலது கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம் ஏந்தியுள்ளது. இந்தக் கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

புராண முக்கியத்துவம்

கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி, “கம்சா.. உன் தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்” என்றது. அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும், பிறந்த மறுகணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார். தங்கை தேவகியையும், வசுதேவரையும் சிறை யில் அடைத்தான், கம்சன். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் கொன்றான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி, “வசுதேவரே.. உங்கள் மகனை கோகுலத் தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதை யிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்” என்றது. மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதை யிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந் தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. அதோடு ‘உன்னைக் கொல்லப்போகிறவன், வேறு ஒரு இடத்தில் வளர்ந்துவருகிறான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே, பெரிய பாளையத்தில் பவானி அம்மனாக வந்தமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது. முற்காலத்தில் ஆந்திரப் பகுதியில் இருந்து வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமம் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரிய பாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் ஓய்வெடுத் தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில் பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், “நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந் திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்பு வாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா” என்று கூறி மறைந்தாள். மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப் பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

நம்பிக்கைகள்

இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

சிறப்பு அம்சங்கள்

கோவில் கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். ஓங்கார வடிவ மாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத் துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக் கிறாள். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறாள். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. மங்களத் தாலி: பெரியபாளையத்தமன்னை குல தெய்வமாக கருதும் பக்தர்கள் தங்கள் திருமணத்தில் ஒரு புதிய சடங்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி திருமணநாள் அன்று கட்டிய தாலியை அம்பிகைக்கு காணிக்கையாக்குகின்றனர். பிரதியாக அன்னையின் அருள்மிகு மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்று அதை அம்பிகையின் வரப்பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். இன்றும் இதைக் காணலாம். இப்படிச் செய்தால் அந்தக் குடும்பம் செழித்து, தழைத்து, ஓங்குவதுடன் கட்டிய கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பவானி வழங்குவாள் என்பது நம்பிக்கை. அம்மனை வழிபடும் சூரியன்: பெரிய பாளையத்து அன்னையை ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி காணவேண்டிய ஒன்று. ஆடிப்பெருவிழா ஆடி முதல் ஞாயிறு அன்று தொடங்கி 14 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பத்தாவது ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை அன்னையின் சிரசிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் படுகின்றது. அன்றைய தினம் சூரியபகவான் அன்னையை பத்தாவது வாரம் பூஜிப்பதை பக்தர்கள் காணலாம். இப்பூஜையை கண்டால் இம்மையில் இன்பமும், மறுமையில் பிறவா நெறியும் உண்டு என்பது வேதங்கள் கூறும் விளக்கமாகும்.

திருவிழாக்கள்

குறிப்பாக ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் இந்த கோவில் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. வார இறுதி நாட்களில். புனிதமான தமிழ் மாதமான ஆடியின் முதல் வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 4வது வாரத்தில் உற்சவ மூர்த்திக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். ஆடி மாதத்தில் காலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரத்தெட்டு சஹஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது. சித்திரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, அனுமன் ஜெயந்தி, பொங்கல், தை பூசம் மற்றும் பௌர்ணமி உற்சவம் ஆகியவை இக்கோயிலில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் மற்ற விழாக்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியபாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவள்ளூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top