Saturday Jan 18, 2025

பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெரியபாளையம், திருவள்ளூர் – 601102

இறைவன்

இறைவன்: ஐமுக்தீஸ்வரர் இறைவி: அன்னபூர்ணாம்பாள்

அறிமுகம்

சென்னையில் இருந்து பவானி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் முன்பாக, பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூரணி சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். இந்தத் தலத்து இறைவனைப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர். ஆரணி நதிக்கு அந்தப் பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்; இந்தப் பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில். ஆலயம் சிறியது என்றும் சொல்ல முடியாது; பெரியது என்றும் சொல்ல முடியாது. ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள், ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவத் தலம். வடக்கு நோக்கி ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விஷேச நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

ஐமுக்தீஸ்வரர் இலிங்க வடிவத்தை மாபெரும் தவமுனி வால்மீகி முனிவர் நிறுவி வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. இந்திய தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார். பொங்கிப் பிரவேசிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைத்து தவம் புரிந்தார். மாமுனியின் கடும் தவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார். வால்மீகி முனிவர் மிக மகிழ்ந்தார். ”யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவா… எனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். எம்பெருமானும் மனம் கனிந்தார். இலிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, ‘வால்மீகி ஆசிரமம்‘ என்ற பெயரும் இருப்பதாகத் தல புராணம் சொல்கிறது. தவிர, பஞ்சபூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் ‘ஐமுக்தீஸ்வரர்‘ என இறைவன் அழைக்கப்பட்டதாக ஊரார் கூறுகின்றனர். மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமானை நேரில் கண்டு வணங்குவதற்காக ஒரு முறை கயிலாயம் சென்றனர். அப்போது, கயிலயங்கிரியைக் காவல் காத்து வரும் நந்திதேவரின் முறையான அனுமதி பெறாமலேயே ஐந்து பேரும் உள்ளே நுழைந்து விட்டார்கள். நந்திதேவரின் கோபத்துக்கு ஆளான தங்களுக்கு உள்ளே சாபம் காத்திருக்கிறது என்பது தெரியாமலேயே கயிலைவாசனின் முன்னால் போய் பயபக்தியுடன் நின்றார்கள். அது கயிலை வாசன் கடும் தவத்தில் இருக்கும் நேரம். அந்த வேளையில் எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதை மறந்த பஞ்சபூதங்கள் ”இறைவா! கயிலைவாசா! நீலகண்டா! எம் பெருமானே! உன்னைத் துதித்து உன் அருள் பெற வேண்டியே, பஞ்சபூதங்களாகிய நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். எங்களுக்கு இரங்கி, அருள் புரிந்து எங்களைக் காத்தருள்வாய் காலகண்டா” என்று தொழுதார்கள். சில விநாடிகள் கழித்துக் கயிலை வாசன் கண் திறக்கும்போது, அந்த உக்கிரத்தை பஞ்சபூதங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவனின் கோபமான முகத்தைப் பார்த்து மிகவும் நடுங்கி விட்டனர். தாங்கள் ஏதோ தவறு இழைத்து விட்டோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது. இறைவன் அவர்களைப் பார்த்து திருவாய் மலர்ந்தருளினார்: ”பஞ்சபூதங்களே. தவறு புரிந்து விட்டீர்கள். நந்திதேவரை அலட்சியம் செய்து, அவரின் அனுமதி இல்லாமல் என்னைத் தரிசிக்க வந்ததே தவறு. என்னைத் தரிசிக்க வேண்டிய காலம் அல்லாத வேளையில் உள்ளே புகுந்து என் தவத்துக்கு இடையூறு விளைவித்து விட்டீர்கள். அனுமதி இல்லாமல் குரங்குகள் போல் கயிலாயத்தில் நுழைந்த நீங்கள் குரங்கு வடிவிலேயே பூலோகத்தில் அலைவீர்கள்” என்று சபித்தார். பஞ்சபூதங்கள் நடுங்கிப் போனார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த குரலில், ”இறைவா! எங்களின் தவறை நாங்கள் உணர்ந்து விட்டோம். நந்தி தேவரின் அனுமதி இல்லாமல் முறை தவறிய வேளையில் கயிலாயத்துக்குள் புகுந்தது எங்களின் பிழை. இதற்காக வருந்துகிறோம். எங்களின் விதிப்படி தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொள்கிறோம். பூலோகத்தில் குரங்குகளாகவே திரிகிறோம். என்றாலும், இந்த சாபம் எங்களுக்குச் சற்று கடுமையாக இருக்கிறது. எனவே, குறுகிய காலத்திலேயே நாங்கள் பழைய உருவை அடைய ஒரு விமோசனத்தையும் தந்தால் நன்றி உடையவர்களாக இருப்போம்” என்றனர். பஞ்சபூதங்களின் நிலை கண்டு மனம் இரங்கினார் இறைவனார். ”தொண்டை நாட்டிலே வடக்கு நோக்கி ஆரணி நதி பாயும் பிரதேசத்தில், வால்மீகி முனிவர் பூஜித்த சுயம்பு இலிங்க வடிவம் தாங்கிய திருக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு வந்து என்னை வழிபடுங்கள். சாபம் நீங்கும்!” என்றருளினார். சாப விமோசனம் பெற்ற திருப்தியில் கயிலாயத்தை விட்டுப் புறப்பட்ட பஞ்சபூதங்கள் பூலோகத்துக்கு வந்தனர். இறைவனார் அருளியபடி, ஆரணி நதிக் கரை வந்து, அங்கு வால்மீகி முனிவர் வணங்கிய சுயம்பு வடிவத்தை வணங்கி, சாபம் நீங்கப் பெற்றனர். பஞ்சபூதங்கள் இங்கு குரங்கு வடிவில் தங்கி இருந்து, இறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட நிகழ்வை விளக்கும் சுதைச் சிற்பம் ஒன்று ஆலயத்துக்குள் காணப்படுகிறது. அதாவது, இலிங்க பாணத்தில் நெற்றிப் பகுதியில் ஐந்து குரங்குகள் காணப்படுகின்றன. இதே நிகழ்வை விளக்கும் விதமாக ஒரு இலிங்க வடிவமும் (சிலா) ஆலயத்துக்குள், அம்பாள் சந்நிதிக்கு அருகில் தரிசனம் தருகிறது. கிழக்கு வாயில் வழியாக ஆலயத்துக்குள் நுழைந்ததும் சுவரிலேயே சூரியன், சந்திரன், பைரவர், வீரபத்திரர் ஆகிய சிலா வடிவங்களைக் காணலாம். சற்று நடந்ததும் இடப் பக்கம் ஆலய அலுவலகம். அடுத்து, நவக்கிரக சந்நிதி. அம்மனின் திருநாமம் – அன்னபூர்ணாம்பாள்! இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு கதை உண்டு. வால்மீகி முனிவரின் சீடர்களுள் ஒருவராக இருந்தவன் சித்திரவர்மன் என்னும் மன்னன். காம ரூபம் என்ற நாட்டை ஆண்டு வந்தான். இறை பக்தியில் சிறந்து விளங்கினான் இந்த மன்னன். நாட்டு மக்கள் நன்றாகத்தான் இருந்தனர். திடீரென நாட்டில் மழை நின்று போனது. விளைச்சல் இல்லை. குடிமக்கள் பெரிதும் அல்லலுற்றனர். சிவபக்தனான சித்திரவர்மன், தன் குரு வால்மீகி முனிவர் நிறுவிய இலிங்க வடிவைத் தினமும் வணங்கினான். மலர்களால் பூஜித்தான். இதே நேரத்தில் மன்னனின் பக்திக்கு இரங்கிய அன்னை உமை, மோகினி வடிவம் எடுத்தாள். கையில் பாத்திரம் சுமந்தாள். பசியாலும் பஞ்சத்தாலும் வாடிநிற்கும் அனைவரின் வயிறும் நிறையும்படி அன்னதானம் செய்தாள். பசியும் பஞ்சமும் பறந்து போயிற்று. இதனால் இந்த அன்னை, அன்னபூர்ணாம்பா எனப்பட்டாள். நாடு சுபிட்சம் அடைந்ததால் மனம் மகிழ்ந்த மன்னன் சித்திரவர்மன், இந்தப் பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரருக்கு ஆலயம் கட்டி, விமானங்களை எழுப்பியதாகத் தல வரலாறு சொல்கிறது. இந்த மன்னனின் திருவடிவை சுதையாகவும் ஆலய முகப்பில் காணலாம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியபாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவள்ளூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top