பூரி ஸ்ரீ ஜெகநாதர் கோவில், ஒடிசா
முகவரி
பூரி ஸ்ரீ ஜெகநாதர் கோவில், கிராண்ட் சாலை, பூரி, ஒடிசா 752001
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஜெகநாதர்
அறிமுகம்
ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில், இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும். இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்.
புராண முக்கியத்துவம்
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார். இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.
நம்பிக்கைகள்
இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் இந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்துவுிடுவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறையே சற்று வித்தியாசமானது. தனித்தனி பாத்திரமாக இல்லாமல் ஐந்து பாத்திரங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஐந்திலும் சமையல் செய்கிறார்கள். பொதுவாக அடியில் தீ எரிந்து கொண்டிருந்தால் அடியில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவு தான் முதலில் ரெடியாகும். ஆனால் இங்கு இதிலும் சில அதிசயம் நடக்கிறது. மேலே முதலில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவு தான் முதலில் வெந்து தயார் நிலைக்கு வருமாம். அதேபோல் எவ்வளவு சமைத்தாலும் துளி கூட வீணாகாமல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
கடற்கரையை ஒட்டி தான் இந்த கோவில் அமைந்திருக்கிறது. ஆனால் மிக ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கோவிலுக்குள் நுழைந்து விட்டால், எவ்வளவு அமைதியாக இருந்தாலும் வெளியே இருக்கும் கடலின் அலை சத்தம் கொஞ்சம் கூட கேட்காதாம். பொதுவாக கொடிகள் காற்று வீசும் திசையை நோக்கிப் பறக்கும். ஆனால் இந்த கோவில் கொடிமரத்தில் உள்ள கொடி காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் வீசுகிறது. பொதுவாக கோவில் கோபுரங்களைச் சுற்றி புறாக்கள், கழுகு போன்ற பறவைகள் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த கோவில் கோபுரங்களைச் சுற்றி எந்த பறவைகளும் பறப்பதில்லையாம். அதேபோல் இந்த கோபுரத்தின் மீது எந்த பறவைகளும் அமருவதே கிடையாதாம். தஞ்சை பெரிய கோவிலை நாம் மெச்சுகின்ற ஒரு விஷயம் அதன் கோபுர நிழல் கீழே விழாமல் இருப்பது தான். அதை சோழர் கால கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லுவோம். அதேபோல தான் இந்த பூரி ஜெகந்நாதர் கோவிலின் கோபுர நிழலும் எப்படி சூரியன் சுட்டெரித்தாலும் தரையில் விழுவதில்லை. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் நவகலே பரா என்ற பெயரில் மிக பிரமாண்டமாக திருவிழா நடத்தப்படும். அதில் ஒவ்வொரு திருவிழாவின் போது, இந்த மூலவர் சிலைகள் புதிதாக செய்யப்படுகின்றன.
திருவிழாக்கள்
பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர். பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும். குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.
காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பூரி
அருகிலுள்ள விமான நிலையம்
புவனேஸ்வரர்