பூதலூர் நாகநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
பூதலூர் நாகநாதர் திருக்கோயில்,
பூதலூர், பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613602.
இறைவன்:
நாகநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
தஞ்சாவூருக்கு மேற்கே 17 கிமீ தொலைவில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியின் தெற்கில் 7 கிமி தூரத்தில் உள்ளது. இவ்வூருக்கு கல்லணை கால்வாய் வெண்ணாறு என இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது, வெண்ணாற்றில் இருந்து பிரித்து கள்ளப்பெரம்பூர் ஏரியை நிரப்ப செல்லும் ஆனந்தகாவேரி ஓடை இவ்வூரை ஊடறுத்து செல்கிறது. இவ்வூரில் இரு சிவன் கோயில்களும், ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. இன்று நாம் காண செல்வது நாகநாதர் கோயில். திருக்காட்டுப்பள்ளி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
மேற்கு நோக்கிய திருக்கோயில், கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. இறைவன் – நாகநாதர் இறைவி விசாலாட்சி நாகங்களால் வழிபடப்பட்டதால் இறைவன் நாக நாதர் என அழைக்கப்பட்டார். இன்றும் குளத்திலுள்ள நாகங்கள் அவ்வப்போது வந்து வழிபட்டு செல்வதை காணலாம். இறைவன் மேற்கு நோக்கிய கருவறையும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். ராஹு – கேது தோஷங்களால் பீடிக்கப்பட்டவர்களும், சர்ப்ப தோஷங்களால் பாதிப்புக்கு உள்ளானவர்களும், பாம்புகளை கொன்ற பாவத்தை உடையவர்களும் வணங்க வேண்டிய கோயில்.
மார்கழியின் முப்பது நாட்களும் மாலை அஸ்தமன சூரிய ஒளி வீழ்ந்து வணங்குவது சிறப்பாகும். தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் கொண்டுள்ளார், வடமேற்கில் முருகன் தண்டாயுதபாணியாக உள்ளார். இரு கருவறைகளையும் ஒரு இணைப்பு மண்டபம் இணைக்கிறது. இந்த மண்டபத்தில் பைரவர், சூரியன் ஒரு லிங்கபாணன் உள்ளன. அதன் வெளியில் ஒரு சிறிய நந்தி மண்டபம் உள்ளது. அதே போல் அம்பிகையின் எதிரில் சிறிய நந்தி உள்ளது. இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை, நவக்கிரக தோஷங்களையும் இறைவனே போக்கியருள்வார் என்பதால் இங்கு நவகிரகங்கள் இல்லை.
சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார், தென்கிழக்கில் ஒரு கிணறும் உள்ளது. கருவறையும் முகப்பு மண்டபமும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளன. சோழர்கால கட்டுமானம் துவிதள விமானம் கொண்டுள்ளது. கருவறை கோட்டங்களில் தக்ஷணமூர்த்திகள் இல்லை. கோயில் சற்று ஒதுக்குபுறமான இடமாதலால் பாதுகாப்பு இல்லை. ஒரு கால பூஜை கோயில் தான், விசேஷ நாட்களில் மாலை நேர பூஜைகளும் நடக்கின்றன. கோயில் குடமுழுக்கு நடந்து 22 வருஷமாச்சு, இக்கோயில் பற்றி அதிகம் அறியப்படாமல் போனதால் அதிக மக்கள் வரத்து இல்லை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூதலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி