புலிமடு மத்யந்தனீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
புலிமடு மத்யந்தனீஸ்வரர் சிவன்கோயில்,
விபீஷ்ணபுரம்-புலிமடு, சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்:
மத்யந்தனீஸ்வரர்
இறைவி:
மங்கள நாயகி
அறிமுகம்:
வியாக்ரபாதர் குடில் அமைத்து தங்கிய இடம் தில்லையின் தெற்கில் உள்ள புலிமேடு என்ற இடம், புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் தவம் செய்த பகுதி என்பதால் அந்த இடத்துக்கு புலிமேடு என பெயர் பெற்றதாக தில்லை தலபுராணத்தில் உள்ளது. இங்கு புலிக்கால் முனிவர் மற்றும் அவரது தந்தை மத்யந்தனர் வழிபட்ட மத்யந்தனீஸ்வரர் கோயில் உள்ளது. கிழக்குநோக்கிய சிறிய கோயில், முகப்பில் வாயில் மேல் அம்பிகையும், வியாக்ரபாதரும் இறைவனை வணங்கும் சுதை சிற்பம் உள்ளது. இறைவன் இறைவி கருவறைகள் மட்டுமே உள்ளன. இறைவன் மத்யந்தனீஸ்வரர் இறைவி மங்கள நாயகி
கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். கருவறை சுற்றில் சில கல்வெட்டுக்கள் உள்ளன. வடகிழக்கில் ஒரு கிணறும், நவகிரகமும் உள்ளன. கோயில் எதிரில் புலிமடு தீர்த்தம் எனும் பெரிய குளம் உள்ளது. கோயிலில் காலை மாலை என இருவேளை பூஜைகள் நடைபெறுகின்றன. முன்னர் நடராஜர் சார்பாக சந்திரசேகர மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தீர்த்தவாரி உற்சவம் நடக்கும். தற்போது குளம் பராமரிப்பு இல்லாததால் துார்ந்து கழிவு நீர் தேங்கி நிற்கிறது. தீர்த்த குளத்தினை சுற்றி உள்ள ஆக்கரமிப்புகளை முழுமையாக அகற்றி, குளம் துார்வாரி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இக்கோயில் அருகில் ஒரு கல்வெட்டு ஒன்று எல்லை தடுப்பு கல்லாக உள்ளது. கல்வெட்டில் திருபூமண்டபம் என்ற சொல்லும் வருகிறது இது புலிக்கால் முனிவர் கோயில் அருகில் இருந்த மண்டபம் ஆகும் இது முற்றிலும் அழிந்து சில பகுதிகள் புலிமேடு தீர்த்தகுளத்தில் புதையுண்டு கிடக்கிறது. இந்த தீர்த்த குளம் காந்திஜி அஸ்தி கரைக்கப்பட்ட சிறப்பு கொண்டது. சிதம்பரம் சீர்காழி சாலையில் நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளியை தாண்டியவுடன் வலதுபுறம் சக்தி நகர் என்ற சிமென்ட் போர்டு உள்ளது அதன் வழி சென்றால் கோயிலை அடையலாம்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புலிமடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி