புனவாசல் மாதவபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
புனவாசல் மாதவபுரீஸ்வரர் சிவன்கோயில்,
புனவாசல், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்
இறைவன்:
மாதவபுரீஸ்வரர்
இறைவி:
மங்களாம்பாள்
அறிமுகம்:
திருவாரூர் –மன்னார்குடி சாலையில் எட்டு கிமீ சென்றால் கிழக்கு நோக்கி ஓடும் பாண்டவை ஆற்று பாலத்தை தாண்டியவுடன் இடது புறம் செல்லும் சாலையில் அரை கிமீ தூரம் சென்றால் உள்ளது புனவாசல் கிராமம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் தென்கரையோரம் உள்ளது. சாலையின் இடதுபுறம் ஒரு ஏக்கருக்கும் அதிகமான பெரிய கோயிலாக கிழக்கு நோக்கி சுற்று மதில் சுவருடன் உள்ளது சிவன்கோயில். கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றும் தென்புறம் ஒரு குளமொன்றும் உள்ளது.
கிழக்கு நோக்கிய கோயில் முகப்பில் ஒரு சிறிய வாயில் உள்ளது. பெருங் கதவுகள் தன்னிலையில் இருந்து மாறியுள்ளது அதனை ஒரு நூல் கயிறால் கட்டப்பட்டுள்ளதை பார்க்கும்போதே கோயிலின் நிலை நமக்கு புரிகிறது. கிழக்கு நோக்கிய கருவறையில் இறைவனும், தெற்கு நோக்கிய கருவறையில் இறைவியும் உள்ளனர். இரு கருவறைகளையும் ஒரு கூம்பு வடிவ மண்டபம் இணைக்கிறது. அதன் வெளியில் ஒரு பெரிய கூடம் அதனை தகர கூரை கொண்டு வேய்ந்துள்ளனர், முன்னர் கூம்பு வடிவத்தில் இது இருந்திருக்கலாம். கருவறை வாயிலில் ஒரு புறம் அழகிய விநாயகரும், மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகனும் உள்ளனர். இன்றைக்கு நாம் பார்க்கும் கட்டுமானங்கள் யாவும் 150 வருடங்கள் ஆனவை. 12 ம் நூற்றாண்டின் கல்வெட்டுக்கள் படி ஆயிரம் ஆண்டுகளை நெருங்கிய தலப்பெருமை கொண்டது இது என சொல்லலாம்.
இறைவன் மாதவபுரீஸ்வரர் இறைவி மங்களாம்பாள் மகாலட்சுமி தவமிருந்து வழிபட்டதால், மா-தவ-புரி-ஈஸ்வரர் என வழங்கப்பட்டு இருக்கலாம். இவ்வூருக்கு மாதவபுரி என பழம்பெயரும் இருந்திருக்கலாம். கோயில் பராமரிப்பின்றி சிதைவடைய தொடங்கி உள்ளது. கோயிலின் மதில் சுவர்கள் கருவறை அர்த்தமண்டப சுவர்கள் என எங்கு காணினும் விரிசல்கள். இறைவன் இறைவி பிரகார சிற்ற்றாலயங்கள் என எதிலும் கலசங்கள் இல்லை, செடி கொடிகள் வளர்ந்து நிற்கின்றன. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார் அவரின் மேலுள்ள விமான பகுதி ஓட்டை விழுந்து வானம் தெரிகிறது. தென்மேற்கில் விநாயகர் சன்னதி உள்ளது. அக்கோயிலும் சிதைவுகளுக்கு தப்பவில்லை. ஒரு பெரிய வில்வ மரம் ஒன்று விநாயகர் விமானத்தின் மேல் சாய்ந்துள்ளது. வடகிழக்கில் ஒரு கிணறும், பைரவர் மண்டபமும் உள்ளது. அதில் சனிபகவான் பைரவர் சூரியன் மற்றும் ஒரு நாகர் சிலையும் உள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயிலின் சிறப்பே தெற்கு நோக்கிய கட்டுமலை முருகன் தான். ஒரு உயர்ந்த தரை தளத்தின் மேல் தெற்கு நோக்கிய முருகன் வள்ளி தெய்வானையுடன் கோயில் கொண்டுள்ளார். தெற்கு நோக்கி உள்ளதால் இவர் குரு ஸ்தானம் என்கின்றனர், அதனால் மிகவும் சக்தி வாய்ந்தவர் அஞ்ஞான இருள் நீக்கி, உயர் பதவிகள் அளிக்க வல்லவர், குருதோஷம் மற்றும் கல்வி, கேள்விகளில் உயர இவரை வேண்டி அருள் பெறலாம். சிறு கிராமத்தில் இருப்பதால் இவரின் பெருமை அறியாமல் வைத்துள்ளனர். தெற்கு நோக்கும் முருகன் மிக விசேஷம், எண்கண், பொரவாச்சேரி போன்ற தலங்கள் போல தெற்கு நோக்கிய இந்த தலமும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலின் நிலை சரியில்லை என்ற போதிலும், இக்கோயிலுக்கு பல தலைமுறையாக பூஜை செய்யும் ஒரு சிவாச்சாரியார் உள்ளார், அதனால் இறைவன் இரு கால பூஜையும் , சிறப்பு நாள் பூஜைகளும் ஏற்றவண்ணம் உள்ளார். அவர் வீடும் அருகிலேயே உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புனவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி