Wednesday Dec 18, 2024

பி.அக்ராகரம் முனியப்பன் திருக்கோயில், தர்மபுரி

முகவரி

அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், பி.அக்ராகரம், தர்மபுரி மாவட்டம் . 636813

இறைவன்

இறைவன்: முனியப்பன்

அறிமுகம்

பி.அக்ராகரம் முனியப்பன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தெய்வக் கோயிலாகும். இக்கோயில் தருமபுரியில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அல்லது பென்னகரம் செல்லும் சாலையில் பி.அக்ராகரம் என்னும் சிற்றூரில் உள்ளது. இக்கோயில் இம்மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோயிலாகும். ஒரு காலத்தில் அந்தணர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில் பிளியனூர் அக்ரகாரம் என வழங்கப்பட்டு, தற்போது பி.அக்ரகாரம் என அழைக்கப்படுகிறது. துஷ்ட சக்திகளை விரட்டி இஷ்ட சக்திகளை அருளும் எளிய தெய்வம் முனியப்பன் கோவிலின் மூலவராவார். ஏரிக்கரையின் ஓரத்தில் ஆறு அடி உயரம் உள்ள மேடையில் 25 அடி உயரமும்,12 அடி அகலத்திலும் அமர்ந்த நிலையில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். சுதை வடிவிலான மூலவர் திருமேனியின் இரு புறமும் குதிரை, சிப்பாய் மற்றும் குதிரை வீரன் சிலைகள் அழகுற அமைந்துள்ளன.

புராண முக்கியத்துவம்

முனியப்ப சுவாமிக்கு இங்கு கோவில் அமைந்ததின் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக இக்கிராமத்து மக்களில் சிலர் சுமார் 12 மைல் தொலைவில் உள்ள கும்பரசன் கோட்டை என்ற மலைப்பகுதியில் இருந்து மூங்கிலை வெட்டி எடுத்து வந்தனர். ஒரு நாள் காட்டின் உள்ளே தனியாக சென்று மரம் வெட்டிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தார். அந்த நொடி அங்கு வந்த ஒருவர் பாதிக்கப்பட்டவரை தூக்கி தன்னோடு குதிரையில் அமர்த்தியவாறு காட்டு எல்லையை கடந்து வந்து ஊருக்குள் இறக்கி விட்டுச் சென்றார். பாதிக்கப்பட்டவர் ஊர் எல்லையை அடைந்தவுடன் இயல்பான நிலைக்கு வந்தார். அதன் பின் அந்த நிகழ்வை கிராம மக்களிடம் தெரிவித்தார். குதிரையில் வந்தவர் காவல் தெய்வமான முனியப்ப சுவாமி என்பதை உணர்ந்தனர். ஊர் மக்கள் அதை தொடர்ந்து பி.அக்ரகாரத்தில் ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார்கள்.

நம்பிக்கைகள்

அமாவாசை நாட்களில் 108 போற்றிகள் சொல்லி சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.அன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கி 11.00 மணி வரையில் 12 விதமான அபிஷேகங்கள் முனியப்ப சுவாமிக்கு நடைபெறுகிறது.அப்போது சுவாமியின் மடியில் தேங்குமபிஷேக தீர்த்தத்தை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். அதை உட்கொண்டாலோ தலை மீது தெளித்துக்கொண்டாலோ சகல தோஷங்களும் நீங்கி, சர்வ ஐசுவரியங்களும் கிட்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

திருவிழாக்கள்

செவ்வாய் மற்றும் ஆடிப்பெருக்கு, தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இத்தல முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை நடைபெறும் விழா மிகப் பிரசித்திப்பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு திருவிழாவில் பங்குகொள்கிறார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தர்மபுரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தர்மபுரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top