பாரிமுனை கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்) திருக்கோயில், சென்னை
முகவரி
அருள்மிகு கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்) திருக்கோயில், பாரிமுனை, சென்னை மாவட்டன் – 600 001 . போன்: +91- 44 – 2522 7177
இறைவன்
இறைவன்: கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்) இறைவி: அழகாம்பிகை
அறிமுகம்
கச்சாலீஸ்வரர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயில் கிரேட் கச்சாலி பகோடா என்றும் அழைக்கப்பட்டது. பாரிஸ் கார்னருக்கு அருகில் உள்ள ஆர்மேனியன் தெருவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலை மாதிரியாகக் கொண்டது. 1725 ஆம் ஆண்டு துபாஷ் கலவாய் செட்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. மூலவர் கச்சாலீஸ்வரர் / கச்சபேஸ்வரர் என்றும், தாயார் சௌந்தராம்பிகை / அழகாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.
புராண முக்கியத்துவம்
பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. “என்ன செய்வேன் இறைவா!’ என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது. பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம்! அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர். காலப்போக்கில் அங்கு கோயிலும் எழுப்பப்பட்டது. பஞ்சவாகன சிவன்: பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், “கச்சபேஸ்வரர்’ என்றும், “கச்சாலீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். “கச்சபம்’ என்றால் “ஆமை’ என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நம்பிக்கைகள்
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய தலம். சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணதோஷம் நீங்கும், நினைத்த செயல்கள் நடக்கும், அம்பாளுக்கு தைலக்காப்பு செய்து வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
அம்பாள் அழகாம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் உள்ளனர். ஒரேநேரத்தில் இம்மூன்று சக்திகளையும் வணங்கினால் கல்வி, செல்வம், ஆற்றல் பெறலாம். சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னதி தீக்கிரையான போது, தமிழகத்தில் இருந்து புதிய சிலை எடுத்துச் செல்லப்பட்டது. அந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின்போது, இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது. கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். இங்கு 63 நாயன்மார் மண்டபம், தத்தாத்ரேயர், துர்க்கை, ஆதிசங்கரர், மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
திருவிழாக்கள்
சித்திரையில் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
காலம்
1725
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாரிமுனை
அருகிலுள்ள இரயில் நிலையம்
சென்னை கடற்கரை
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை