பாப்பாகோயில் கடம்பநாதர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பாப்பாகோயில் கடம்பநாதர் சிவன் கோயில்,
பாப்பாகோயில், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611106.
இறைவன்:
கடம்பநாதர்
இறைவி:
பாலகுஜாம்பாள்
அறிமுகம்:
நாகை நகரத்தின் மேற்கில் நெடுஞ்சாலை NH83- NH32 இரண்டும் சந்திக்கும் சாலையில் வேதாரண்யம் நோக்கி திரும்பி இரண்டு கிமீ சென்றால் பாப்பாகோயில் உள்ளது. இக்கோயிலை சொக்கப்ப முதலியார் என்பவர் நிர்வகித்து 1928ல் குடமுழுக்கும் செய்தார். இதன் பின்னர் இந்து அறநிலையதுறை பொதுமக்கள் பங்களிப்புடன் 2013 ம் ஆண்டு நவ.14 ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கிழக்கு நோக்கிய கோயில்; ஐந்து ஏக்கர் பரப்பில் கோயில் வளாகமும் நடுவில் கோயிலும் உள்ளது. கோயிலின் ஈசான்ய திக்கில் பெரிய தீர்த்த குளம் உள்ளது; பஞ்சகுரோச தீர்த்தம் எனும் இக்குளத்தில் பௌர்ணமி தினத்தில் நீராடி கடம்பநாதரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
இறைவன்-கடம்பநாதர் இவர் சுயம்பு லிங்கமூர்த்தி எனப்படுகிறார்.
இறைவி-பாலகுஜாம்பாள்
கி.பி.12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இக்கோயில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த இக்கோயில் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 6.15 மணி வரை சூரிய பூஜை நடைபெறுகிறது.
புராண முக்கியத்துவம் :
முருகப் பெருமான் தேவர்களை காக்க திருச்செந்தூரில் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் பீடித்தது. முதலில் தேவூர் அருகில் உள்ள மஞ்சவாடிக்கு வந்த முருகப்பெருமான், மஞ்சளால் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட பின், பஞ்சகடம்ப ஸ்தலங்களான ஆதிகடம்பனூர், அகரகடம்பனூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பரவாழ்க்கை பகுதிகளில் அமைந்துள்ள சிவதலங்களை வழிபட்டு பின்னர், சிக்கலின் தென்புறம் உள்ள இந்த கடம்பவனத்தில் இருந்த சுயம்பு லிங்க மூர்த்தியையும் அதனை நித்தம் வழிபடும் கடம்ப ரிஷியிடமும் ஆசி பெற்று தேவலோகம் திரும்பினார். அது ஒரு பங்குனி உத்திர நாளாகும். அதனால் ஒவ்வொரு பங்குனி உத்திர தினத்திலும் சூரிய ஒளியாக முருகன் இங்கு வழிபடுவதாக கூறுகின்றனர். மேலும் இந்த தலம் முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்ட சிறப்புடையது.
நம்பிக்கைகள்:
மூன்று பவுர்ணமி இத்தலத்தின் பஞ்ச குரோச தீர்த்தகுளத்தில் நீராடி, கடம்ப வனநாதரை அர்ச்சித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும். திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
பாலாம்பாள் கோயில் என அழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் பாப்பாகோயில் என மாறியது. உயர்ந்த மதில் சுவற்றுடன் கூடிய திருக்கோயில். முகப்பு வாயில் தாண்டியவுடன் கொடிமர விநாயகரும் கருங்கல் மண்டபத்தில் நந்தியும் உள்ளார். கொடிமரம் இல்லை. அடுத்து மொட்டை கோபுர வாயில் வழி உள்ளே சென்றால் இறைவன் முன்னர் ஒரு நீண்டு அகன்ற 16 கால் கருங்கல் மண்டபமும் இறைவன் கருவறையை சுற்றி சுற்றாலை மண்டபமும் உள்ளது, இதனை பார்த்தால் நகரத்தார் திருப்பணி போல் முற்றிலும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. கடம்பவனநாதர் கருவறை வாயிலில் ஒரு லிங்கமும் எதிரில் சிறிய நந்தியும், விநாயகரும் மறுபுறம் முருகனும் உள்ளனர். உற்சவர்கள் மேடை காலியாக உள்ளது. அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார்.
பிரகாரத்தில் சித்திவிநாயகர் சன்னதியும் கடம்பவன நாதருக்கு நேர் பின்புறத்தில் ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். வெளிப்புறத்தில் கடம்பசித்தர் சன்னதி உள்ளது கஜலட்சுமி சன்னதியும் உள்ளது இறைவி சன்னதியை ஒட்டியபடி நவகிரகங்கள் உள்ளன. வடகிழக்கில் பைரவர், மற்றும் சனிபகவான் உள்ளனர். தென்மேற்கில் ஒரு சன்னதி கட்டப்பட்டு அதில் கிழக்கு நோக்கிய ஒரு லிங்கமூர்த்தியும், அம்பிகையும் சிறிய விநாயகரும் உள்ளனர். காலை மாலை என இருவேளை பூஜை நடக்கிறது.
காலம்
கி.பி.12 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாப்பாகோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி