பாதுகாப்பு மையங்களில் போலி சிலைகள்: முன்னாள் ஐ.ஜி., திடுக் தகவல்
புதுக்கோட்டை: ”ஹிந்து சமய அறநிலையத்துறை சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள பெரும்பாலான சிலைகள் போலியானவை,” என, சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவின் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பில், சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மீது எந்த விதமான பழியையும் சுமத்த வேண்டாம். அவர்கள் நன்றாக தான் பணியாற்றி வருகின்றனர்.
நடராஜர் சிலையை, ஏலத்தில் விட சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பாராட்டத்தக்கது. அதோடு அந்தப் பணிகள் முடிவது கிடையாது. சிலைகளை மீட்டு, தமிழகத்திற்கு கொண்டு வந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
என் நோக்கம், 2,500 சிலைகளை அந்தந்த கோவில்களுக்கு சேர்ப்பது தான். மூன்று லட்சத்து 50 ஆயிரம் சிலைகளில், அவற்றின் பழமையை கணக்கீடு செய்து, அவற்றை ஆவணப்படுத்தி பதிவு செய்யும் பணியை துவங்கி உள்ளேன்.
கோவில்கள் மற்றும் சிலைகளை பாதுகாக்கும் முயற்சியில், சிவனடியாளர்களும் ஈடுபட வேண்டும். அதற்காகத் தான் இந்த அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. அதனால் தான் சிவனடியார்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில்களை சொந்த சொத்துக்களாக எடுத்துக் கொள்கின்றனர்.
வீர சோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் இடியும் தருவாயில் உள்ளது. அந்த கோவிலில் திருப்பணி செய்வதற்கு, அரசு நிதியை ஒதுக்கவில்லை. ஆனால், அந்த கோவிலின் சொத்து, 35 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துள்ளது.
அறநிலையத்துறை சார்பில் உள்ள சிலை பாதுகாப்பு மையங்களில், பெரும்பாலான சிலைகள் உண்மையானவை அல்ல. திருவாரூர் மாவட்டத்தில், 813 சிலைகளை ஆய்வு செய்ததில், 197க்கு மேற்பட்டவை போலியானவை என்று கண்டறியப்பட்டன.
அதே போல, ஒவ்வொரு சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகளில், போலியானவை இருக்கும். இது குறித்த அறிக்கையை, நான் அதிகாரியாக இருந்த போது, போலீஸ் உயர் அதிகாரிகளிடமும், அரசிடமும் அளித்து விட்டேன். ஆனால், போலீஸ் துறை, அறநிலையத் துறை, மாநில தொல்லியல் துறை ஆகியவை, போட்டி போட்டு, விசாரிக்காமல் உள்ளனர்.
மேலும், பழமையான ஆதீனங்கள் ஐந்து உள்ளன. அதற்கு ஏதாவது ஆபத்து என்றால், நாங்கள் முன் நிற்போம். அதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளோம். ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது. ஆன்மிகம் புனிதமானது; அரசியல் ஒரு சாக்கடை. இவ்வாறு அவர் கூறினார்.