பாதிராப்புலியூர் கயிலாசநாதர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி
பாதிராப்புலியூர் கயிலாசநாதர் திருக்கோயில், பாதிராப்புலியூர் , விழுப்புரம் மாவட்டம் – 604302.
இறைவன்
இறைவன்: கயிலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன்
அறிமுகம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 21 கி.மீ தொலைவில் உள்ளது பாதிராப்புலியூர். இங்குதான் அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை கயிலாசநாதர் திருக்கோயில் உள்ளது. புராணச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இன்று செடி, கொடிகள் நிறைந்து சிதிலமடைந்து கிடக்கிறது. ஈசன் மேல் நேசம் கொண்டவர் புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர், மழன்), இறைவனை பூஜித்த தலம் இது. அவரின் பெயர்கொண்டே இத்தலம் `பாதிராப்புலியூர்’ என்று வழங்கப்படுகிறது. ஊரின் நடுவே கோட்டையைப் போன்று காட்சி அளிக்கிறது இந்த ஆலயம். வடக்கு திசை வாயிலைக் கொண்ட ஆலயத்தில், பெரிய அளவிலான மகாமண்டபமும் அம்மண்டபத்துக்கு இணையான அர்த்த மண்டபமும் காணப்படுவதோடு, கிழக்கு திசை நோக்கிய சதுர வடிவக் கருவறை, கருவறைக்கு முன் இரு துவாரபாலகர்கள் என அழகிய வடிவம் கொண்டுள்ளது. அடித்தளத்தைக் கருங்கற்களைக் கொண்டும், ஆலயத்தை சுண்ணாம்பு, சுதைபொருளைக் கொண்டும் மிகுதியான சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற வடிவமைத்துள்ளனர் மன்னர்கள். இவ்வளவு பிரமாண்டமாக அழகுறு வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த நாயக்கர்களால் கட்டப்பட்டது. சுமார் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், இன்று மாடுகள் கட்டும் கொட்டகையாக மாறியிருக்கிறது. வௌவால் குடியேறி புதர் மண்டிக்கிடக்கிறது. கோபுரங்கள் முழுவதும் செடிகொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து கிடக்கிறது. இத்தனைக்கும் இந்த ஆலயம் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது..
புராண முக்கியத்துவம்
எப்படியெல்லாம் வழிபாடுகள் நடைபெற்ற கோயில் இன்று இப்படி பூஜைகள் இன்றி இருண்டுகிடக்கிறது. முறையாக தீபாராதனை நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. 20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஆறுகால பூஜைகள் நடைபெற்று வந்தன. பிரதோஷ தினங்கள் என்றால் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து வணங்குவார்கள். ஒவ்வோர் ஆண்டும் 9 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும். தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவார். அந்த வாகனங்களை வைப்பதற்கெனவே தனியே இந்தக் கோயிலில் பெரிய வாகனக் கொட்டகை இருந்தது. தற்போது அது இருந்த இடமே இல்லாமல் போய்விட்டது. ஆலயத்தின் பின்புறம் கிழக்கு திசை நோக்கியபடி இருந்த விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளும் சிதிலமடைந்து போனதால், தற்போது அவை இல்லை. சிலைகள் மட்டும் ஆலயத்தில் உள்ளன. சிதம்பரம் தலத்தைப்போலவே இங்கிருக்கும் நடராஜர் நடன சபையும் சிறப்புக்குரியது. இந்த ஆலயத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி சிலை எங்கு போனதென்றே தெரியவில்லை. மீதமுள்ள சிலைகளும் பாதுகாப்பின்றி இருக்கின்றன. செப்புத்திருமேனிகள் சிலவற்றை பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பகவான் ஆலயத்தில் வைத்துள்ளனர். கோயில் மற்றும் குளம் இரண்டும் சேர்த்து 6 ஏக்கர் பரப்பளவு இருக்கும். கோயிலுக்கென 25 குழி நஞ்சை நிலம் மட்டுமே சொத்தாக உள்ளது. சுவர்களில் வேர் புகுந்து இடிந்துவிழத் தொடங்கிவிட்டன. இதனால் சிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மூன்று வருடத்துக்கு முன்பாக தகுந்த யாகங்கள் செய்து, ஓடுகளைக் கொண்டு தனியாகக் கூரை அமைத்து மூலவரையும் அம்மனையும் வைத்துள்ளோம். புதிதாக ஆலயத்தைப் புனரமைக்க முற்பட்டபோதுதான் அறநிலைத்துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். அதனால் புனரமைப்பு இன்றுவரை தடைபட்டுள்ளது” என்கிறார்கள் பூசாரிகள். வருமானம் ஏதும் இல்லாத நிலையிலும் ஈசனுக்குத் தங்களால் ஆன திருத்தொண்டாகக் கருதி இங்கு பூஜை செய்துவருகின்றனர்.
நம்பிக்கைகள்
நாகதோஷ பரிகாரம் செய்ய விரும்புவோர் இந்தத் தலத்தை ஒருமுறை சுற்றி வந்து கயிலாசநாதரை வழிபட தோஷம் நீங்கும். பிரதோஷ தினங்களில் வழிபட கல்விச்செல்வம் பெருகும். திருமணப் பிரச்னை, நிலம் சார்ந்த பிரச்னைகள் நீங்கும். கருணை வடிவான அன்னை காமாட்சியை வணங்க நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாதிராப்புலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி