பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், பாடகச்சேரி போஸ்ட், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம் – 612 804. போன்: +91 97517 3486
இறைவன்
இறைவன்: கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
அறிமுகம்
கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடகச்சேரியில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இறைவி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. வெட்டாறு ஆறு இந்த குக்கிராமத்தில் வடதெற்கு திசையில் ஓடுகிறது. மேலும் இங்கு பாடகச்சேரியில் பழமையான சிவன் கோயிலும், பெருமாள் கோயிலின் இருபுறமும் பால தண்டாயுதபாணி கோயிலும் உள்ளன.
புராண முக்கியத்துவம்
இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று சீதாதேவி ராவணனிடம் கதறினாள். தன்னை விடுவிக்குமாறு வேண்டினாள். ஆனால், அவளது பேச்சை லட்சியம் செய்யாமல், புஷ்பக விமானத்தில் அவளுடன் இலங்கையை நோக்கிப் பறந்தான் ராவணன், அப்போதுதான் சீதாதேவிக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதாவது, ராவணன் தன்னை எங்கே கடத்திச் சென்று வைத்திருக்கிறான் என்பதை தன்னைத் தேடி வரும் ஸ்ரீராமபிரான் அறிந்து கொள்வதற்கு வசதியாக, கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். இறுதியில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். சிறையில் இருந்து தன்னை மீட்கச் செல்ல ஸ்ரீராமபிரான் வர மாட்டாரா என்று ஏங்கித் தவிக்க ஆரம்பித்தாள். குடிலில் சீதாதேவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி, அவளைத் தேடிப் புறப்பட்டனர் ராமனும் லட்சுமணனும். சீதாதேவி அணியும் ஆபரணங்களை ஆங்காங்கே தரையில் கண்டார் ஸ்ரீராமபிரான். அந்த ஆபரணங்கள் கிடைத்த வழியைத் தொடர்ந்தே தன் தேடுதல் யாத்திரையை நடத்தினார். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ஸ்ரீராமபிரான், தம்பி லட்சுமணா… இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம். அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ஸ்ரீராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை – ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்ததாகச் சொல்கிறார்கள் (மாறுபட்ட கருத்தும் உண்டு).
நம்பிக்கைகள்
இந்த பெருமாளை தரிசித்த, மனதால் நினைத்த அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் என்பது உறுதி. இந்த பெருமாளை வேண்டியவருக்கு சந்தான பாக்கியமும் கொடுத்த கடன்களும் வசூலாகும் என்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
ஸ்ரீ தேவி, பூதேவி உடனாய தாயார்களுடன் நெகிழ்வான – மகிழ்வான – திவ்யமான தரிசனம் தருகிறார் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள். மூலவர்களான இந்தக் கல் திருமேனிகள் தவிர கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற புதுமையான திருநாமம். பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறு பல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர்.
திருவிழாக்கள்
ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாடகச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி