பாக்கம்கோட்டூர் சிகாநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பாக்கம்கோட்டூர் சிகாநாதர் சிவன்கோயில்,
நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609701.
இறைவன்:
சிகாநாதர் / ஜடாதரர்
அறிமுகம்:
பாக்கம் கோட்டூர் ஒரு விவசாயக் கிராமம். இது திருவாரூர் – மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குருமானங்கோட்டூர் எனவும் சொல்கின்றனர். பாக்கம் என்பதற்கு அரசன் இருப்பிடம் என ஒரு பொருளும் உண்டு. அவ்வகையில் இவ்வூர் ஒரு சிறப்பான ஊராகும். சோழர் காலத்தில் பெருங்கோயில் ஒன்றும் அரண்மனை ஒன்றும் இருந்திருக்கலாம். தற்போது சிவன் கோயில் மற்றும் ஒரு பெரிய திடல் பரப்பை சுற்றி அகழி அமைப்பு பெரும்பகுதி தூர்ந்த நிலையில் உள்ளது. கோயில் ஒருகால பூஜையில் உள்ளது. பல சிரமங்களுக்கிடையில் யாராலோ திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில் முறையான பூஜையில்லை
புராண முக்கியத்துவம் :
கடந்த நூறாண்டுகளில் கோயில் பராமரிப்பின்றி சிதைவுற்றது. சமீப காலத்தில் கோயில் திருப்பணிகள் கண்டுள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் கோயிலின் பின்புரம் தற்போது தெரு செல்வதால் வழி பின்புறம் ஆகிவிட்டது. கம்பீரமாக ஒரு தேர் போல உயர்ந்து நிற்கிறது, சோழ கட்டுமானம், இறைவன் குடுமிநாதர் என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிகாநாதர் எனவும் ஜடாதரர் எனவும் அழைக்கப்படுகிறார். கருவறை இடைநாழி அர்த்தமண்டபம் என உள்ளது, முன்னர் ஒரு மகாமண்டபம் இருந்திருத்தல் கூடும். அர்த்தமண்டபம் முடிந்த பின் அதற்க்கு வெளியில் தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை கொண்டுள்ளார். இவரது முன்னர் ஒரு அர்த்தமண்டபம் உள்ளது. மகாமண்டப பகுதியின் வெளியில் ஒரு கருங்கல் மண்டபத்தில் ரிஷபம் உள்ளது. அதன் பின்னர் ஒரு பலிபீடமும் உள்ளது.
பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். கருவறை வாயிலில் ஒரு விநாயகரும், வள்ளி தெய்வானை சமேத முருகனும் உள்ளனர். அழகான உருளை வடிவ தூண்கள் கொண்ட அர்த்தமண்டபத்தில் மேற்கு நோக்கிய ஒரு லிங்கமாக முக்தீஸ்வரர் உள்ளார் அவருக்கு எதிரில் சிறிய நந்தி உள்ளது. கருவறை சுவர்களில் கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன. கோஷ்ட தெய்வங்களாக தென்முகன், பின்புறம் மகாவிஷ்ணு துர்க்கை உள்ளனர். சீராட்டி பாராட்டி வழிபடப்பட்ட பழைய அம்பிகையின் சிலை உடைந்து போய் வெளியில் கிடக்கிறது. இந்த பாவமும் இதே காலத்தில் வாழும் நம்மையே சாரும். பல மூர்த்திகளை காணவில்லை, இருக்கும் சிலவும் புதிது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாக்கம்கோட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி