Wednesday Dec 18, 2024

பரமேக்காவு ஸ்ரீ பகவதி திருக்கோயில், கேரளா

முகவரி

பரமேக்காவு ஸ்ரீ பகவதி திருக்கோயில், பரமேக்காவு, திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680001.

இறைவன்

இறைவி: பகவதி

அறிமுகம்

கேரள பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் பகவதி ஆலயங்கள்! இந்த பகவதி ஆலயங்களில் பெரியதும், சிறப்புகள் பல கொண்டதுமாக விளங்குவது, பரமேக்காவு ஸ்ரீபகவதி ஆலயம். கேரளாவில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்று இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஆகும். ஆயிரம் வருடங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் இக்கோயில் துர்க்கா மாதாவின் அவதாரமான பகவதி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகவதி அம்மன் தெய்வம் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பூரம் திருவிழாவின் போது வடக்கும்நாதன் கோயிலுக்கு விஜயம் செய்து சிவபெருமானை சந்திப்பதாக ஒரு ஐதீகமும் நிலவுகிறது. பூரம் திருவிழாவில் பங்கு கொள்ளும் இரண்டு முக்கியமான கோயில்களில் இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பூரம் திருவிழா பிரம்மாண்ட கோலாகல யானை ஊர்வலங்களோடு கொண்டாடப்படுவதோடு திரிசூர் நகரின் பாரம்பரிய அடையாளமாகவும் அறியப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

புராண தகவல்படி, இங்குள்ள தேவியின் திருவுருவச் சிலை, அந்தப் பகுதியில் புகழ்பெற்று விளங்கிய நாயர் குடும்பத்துத் தலைவரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, ‘திருமதம்குன்னு’ கோயிலில் (திருச்சூரில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் மலப்புறம் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற சப்த மாதா கோயில்தான் இது) இருந்து, அந்தச் சிலையைக் குடை நிழலில் பாதுகாப்பாகக் கொண்டு வந்தார், அந்த நாயர் குடும்பங்களின் தலைவர். இவர் கொண்டு வந்த தேவி, முதலில் திருச்சூர் வடக்குநாதன் கோயிலில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பத்ரகாளிதான் இங்கு பகவதியாக இருக்கிறாள். ‘உக்கிரமூர்த்தி’ என்பது அவள் இயல்பு காரணமாகக் கூறப்படும் பெயர். ஆனால், இங்கு பகவதி சாந்த வடிவில் காட்சியளிக்கிறாள். இவள் வடக்குநாதன் கோயிலில் ஆரம்பத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும், பிறகு பரமேக்காவுக்கு கொண்டுவந்து மறு பிரதிஷ்டை செய்யப்பட்டாள். சுமார் 200 பேர் பயிலும் ஜோதிடப்பள்ளி ஒன்றும் ஆலயம் சார்பில் நடந்து வருகிறது. செண்டை முதலான கேரள பாரம்பரிய வாத்தியங்கள் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் வருடம்தோறும் 150 முதல் 200 பேர் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இவைதவிர, தகன மேடை (crematorium) ஒன்றையும் ஆலயம் சார்பில் நடத்தி வருகிறது.

சிறப்பு அம்சங்கள்

மத்திய கேரளாவின் புகழ்பெற்ற இந்த ஆலயம் திருச்சூரின் மத்தியில் உள்ள பிரபலமான ஸ்ரீவடக்குநாதன் கோயிலுக்குக் கிழக்கில் ஒரு பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற திருச்சூர் ‘பூரம் திருவிழா’, வடக்குநாதன் ஆலய வளாகத்தில்தான் நடந்தேறுகிறது. இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் பத்து ஆலயங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, திருவம்பாடி ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் கோயில். இன்னொன்று, பரமேக்காவு ஸ்ரீபகவதி கோயில். திருச்சூர் பூரம் திருவிழாவில் திருவம்பாடி கோயிலில் இருந்து ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் 15 யானைகளுடன் ஊர்வலமாகச் சென்று வடக்குநாதன் ஆலய வளாகத்தில் காட்சி கொடுப்பதைப் போல, பரமேக்காவு பகவதியும் 15 யானைகளுடன், வாண வேடிக்கைகள், வாத்திய முழக்கங்களுடன் அந்தத் திருவிழாவில் பங்கேற்கிறாள். பரமேக்காவு பகவதி கோயிலுக்கு தேவிதாசன், பத்மநாபன், நாராயணன், ராஜேந்திரன், காசிநாதன் என மொத்தம் ஐந்து ஆண் யானைகள் சொந்தமாக உள்ளன. திருவிழா நேரத்தில் வேறு கோயில்கள் அல்லது யானை வளர்ப்பவர்களிடம் இருந்து கூடுதலாகப் பத்து யானைகள் வாடகைக்குப் பெற்று, மொத்தம் 15 யானைகளை (15 யானைகள் வரைதான் அனுமதி!) பரமேக்காவு பகவதி ஆலய சார்பில் ஊர்வலமாக வடக்குநாதன் கோயில் வளாகத்துக்குக் கொண்டு போகிறார்கள். பரமேக்காவு, திருவம்பாடி ஆலயங்கள் தவிர, இன்னும் 8 சிறிய ஆலயங்கள் தங்கள் சார்பாக, பூரம் திருவிழாவில் தலா 3 முதல் 14 யானைகள் வரை பங்கேற்கச் செய்கின்றன. அவை: நெய்த்தலக்காவு பகவதி, கரமுக்கு பகவதி, அய்யன் தோள் பகவதி, லல்லூர் பகவதி, சூரக்கோட்டுக்காவு பகவதி, செம்புக்காவு பகவதி, பாணா முக்கும்பள்ளி சாஸ்தா, கணிமங்கலம் சாஸ்தா கோயில்கள். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 65-க்கும் மேலான யானைகள் அழகிய ஆபரணங்கள், அணிகலன்கள், வண்ணக் குடைகள் சகிதம் ஊர்வலமாகச் சென்று, வடக்குநாதன் ஆலய வளாகத்தில் வரிசையாக நின்று அற்புதமாகக் காட்சி தரும் அழகைப் பார்ப்பதற்கென்று உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து குவிவது வழக்கம். பூரம் திருவிழாவில் 200\க்கும் மேற்பட்ட தாள வாத்தியங்கள் ஸ்ரீவடக்குநாதன் கோயில் வளாகத்தில் முழங்கப்படுவது, பக்தர்களை மெய்ம்மறக்கச் செய்யும் நிகழ்வு ஆகும். விடியற்காலை தொடங்கி நான்கு மணி நேரத்துக்குக் குறையாமல் நடத்தப்படும் வாணவேடிக்கை, அதிர்வேட்டுகள் கண்களுக்கும் காதுகளுக்கும் அற்புத விருந்து!

திருவிழாக்கள்

இக்கோயில் தேவிக்குப் பல திருவிழாக்கள் இருந்தாலும், ‘வேலா திருவிழா’தான் மிக முக்கிய மாகக் கொண்டாடப்படுகிறது. இது ஜனவரி முதல் வாரம் தொடங்கி 41 தினங்கள் நடக்கும். மீன ராசியில், ரோஹிணி நட்சத்திரத்தில் பகவதியின் பிறந்த தினமே இந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடக்கும். பகவதிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் உண்டு. வெளிச்சப்பாடு என்பவர், பக்தர்களுக்கு நல்லது- கெட்டதை முன்னதாக அனுமானித்து ‘குறி’ சொல்கிறார். அதைக் கேட்க அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். குறி சொல்லும் நிகழ்ச்சி தினமும் நடக்கிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top