Wednesday Dec 25, 2024

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி :

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி திருக்கோயில்,

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு -623 707

தொலைபேசி: +91- 4564 – 229 640

இறைவி:

முத்தால பரமேஸ்வரி

அறிமுகம்:

 முத்தால பரமேஸ்வரி கோயில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகரில் முத்தாலம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் தல விருட்சம் கடம்ப மரம். இக்கோயிலின் ஆகமம் சிவாகமமாகும். இக்கோயிலின் தீர்த்தம் வைகை ஆறு. கோவில் இருக்கும் மதுரையில் இருந்து 80 கி.மீ தொலைவில் பரமக்குடி உள்ளது. பரமக்குடியிலிருந்து வரும் பக்தர்கள் இளையங்குடி செல்லும் பேருந்துகளைப் பயன்படுத்தி வைகைப்பாலம் நிறுத்தத்தில் இறங்கலாம். இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. அருகிலுள்ள ரயில் நிலையம் பரமக்குடியிலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரையிலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி! அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான். அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன. சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணை பாராட்டி பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளை கட்டாயப்படுத்தினான். இதனால் மனம் வெறுத்த அப்பெண், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டினர். முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் “முத்தால பரமேஸ்வரி’ என்று பெயர் பெற்றாள்.

நம்பிக்கைகள்:

அம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இங்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

வைகை நதியின் தென்கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் முத்தால பரமேஸ்வரியம்மன், சாந்த சொரூபமாக தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இவளுக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. மதி நுட்பம் பெருகவும், அறிவார்ந்த செயல்களில் புலமை ஏற்படவும் இவளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவ விழா நடைபெறும்.

பூச்சொரிதல் சிறப்பு: அம்பிகை இங்கு உக்கிரமாக இருப்பதால், மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக மலர் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்க பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக தானே எழுந்தருளியவர் இவர். இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இந்த சிவன், இக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.

அம்பிகைக்கு பால்குடம்: முருகன் கோயில்களில் பக்தர்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால், அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.

திருவிழாக்கள்:

பங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசி பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரமக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பரமக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top