பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கீழப்பரசலூர், திருப்பறியலூர் – 609 309. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4364- 205555,287 429
இறைவன்
இறைவன்: வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர் இறைவி: இளம்கொம்பனையாள்
அறிமுகம்
கீழ்ப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் (திருப்பறியலூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும்.கோயிலைச் சுற்றி பசுமையான வயல்கள் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலில் இறைவனும், இறைவியும் காளையில் அமர்ந்திருக்க வலப்புறம் விநாயரும், இடப்புறம் சுப்பிரமணியரும் சுதை வடிவில் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் கோயில் உள்ளது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. மூலவராக வீரட்டானேஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கோஷ்ட கணபதி உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறைச்சுவற்றில் தட்சன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் மகாகணபதி, செந்தில் ஆண்டவர், மகாலெட்சுமி உள்ளனர்.
புராண முக்கியத்துவம்
தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன். ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தை பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் திருப்பறியலூர் ஆனது. சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான். தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன் தக்கனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. சூரியனுக்கு தனி சன்னதி இங்கு உண்டு. எனவே நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை.தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும் தட்சனையும் அழித்த தலம் ஆகும். இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும். உள் பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது. வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. பழமையான கோயில். மேற்கு நோக்கியது. ராஜகோபுரம் இல்லை. முன்னால் இரும்புப்பந்தல் போடப்பட்டுள்ளது. கோயில் எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சன்னதிதெரிகின்றது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு தயிர்சாதம், சுத்தன்னம் நைவேத்யம் செய்கின்றனர்.
நம்பிக்கைகள்
சிவபெருமான் வீரம் புரிந்த தலம் என்பதால் அனைத்து வித தோஷ நிவர்த்திக்கும் இங்குவந்து வழிபடுதல் சிறப்பு.
சிறப்பு அம்சங்கள்
மேற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம், அதையடுத்துது 3 நிலை உள் கோபுரம். ஆலயம் இரண்டு பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். ஆனால் கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதி ஆகியவைகளைக் காணலாம். 2வது கோபுரம் கடந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுவரில் தக்கன் ஆட்டுத் தலையுடன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டு கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம். சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராசர் சபை உள்ளது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாக வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெரிய திருமேனியுடன் சதுர ஆவுடையார் மீது மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.
திருவிழாக்கள்
நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஸ்டி
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பறியலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி