பந்தளம் வலியகோயிக்கல் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், கேரளா
முகவரி
பந்தளம் வலியகோயிக்கல் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், தேசிய நெடுஞ்சாலை 220, பந்தளம், கேரளா மாநிலம் – 689501.
இறைவன்
இறைவன்: ஐயப்பன்
அறிமுகம்
சபரி மலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். செகனூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம் சென்றால் பந்தளத்தை அடைந்து விடலாம். ஐயப்பன் வளர்ந்த இடம்தான் இந்தப் பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது. பந்தளத்தில் அமைந்துள்ள சன்னிதியில், புலியுடன் நிற்பதுபோல் காட்சி தருகிறார் மணிகண்டன். பந்தள மகாராஜாவிடம் வளர்ந்தபோது, தாம் கடவுளின் அவதாரம் என்று தெரியமாலேயே , சுமார் 12 ஆண்டுகள் ஓடி ஆடி விளையாடி புனிதம் சேர்ந்த இடம் இது. மணிகண்டனாக வளர்ந்த அரண்மனையும், அவர் படித்துப் பயன்படுத்திய ஓலைகளும் இன்னும் அங்கு உள்ளன. அங்குள்ள குளமானது, ஐயப்பன் குளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாகும். அந்தக் குளத்தின் நீர் எப்போதுமே வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும் என்பது தனிச்சிறப்பு.
புராண முக்கியத்துவம்
புராணங்களின் படி மாலொருபாகனுக்குப் பிறந்தவர் அய்யப்பன். பந்தள நாட்டு மன்னர் இராஜசேகரன் காட்டில் வேட்டையாடச் செல்லும் போது பம்பை ஆற்றின் கரையில் கண்டெடுத்த அய்யப்பன் எனும் அக்குழந்தையை காட்டிலிருந்து அரண்மனைக்கு கொண்டு வந்து மணிகண்டன் எனப்பெயரிட்டு வளர்த்தார். குருகுலத்தில் கல்வி முடித்த மணிகண்டனுக்கு பட்டத்து இளவரசு சூட்டப்பட்டது. இதனை அறிந்த அமைச்சர் மற்றும் பட்டத்து ராணி, அய்யப்பனுக்கு மணி முடி சூடாதிருக்க திட்டம் தீட்டினர்கள். அதன்படி ராணிக்கு ஏற்பட்ட வயிற்று வலி நீங்க புலிப் பால் கொண்டு வர, அய்யப்பனுக்கு ஆனையிடப்பட்டது. புலிப்பால் தேடி காட்டிற்குச் சென்ற மணிகண்டன், காட்டில் திரிந்து கொண்டிருந்த மகிஷி எனும் அரக்கியைக் கொன்று, புலிகள் மற்றும் அதன் குட்டிகளுடன் அரண்மனை நோக்கி வந்தார். இக்காட்சியைக் கண்ட மக்களும், அரண்மனை குடும்பத்தினரும் மணிகண்டனை பார்த்து அய்யனே, அப்பனே எனத் துதித்தனர். இதனால் மணிகண்டனுக்கு அய்யப்பன் எனப் பெயராயிற்று. பின்னர் அரச வாழ்வை துறந்த அய்யப்பன் சபரிமலையில் பிரம்ம்ச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்தார். ஆண்டுதோறும் சபரிமலை மகர ஜோதி அன்று, பந்தளம் அரண்மனையிலிருந்து, அய்யப்பனுக்கு அணிவிக்க, தங்க நகைகளை மூன்று மரப்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படும்.
சிறப்பு அம்சங்கள்
சபரிமலையில் குடிகொண்டிருக்கின்ற ஐயப்பன் மண்ணுலகில் பந்தள மகாராஜாவின் மகனாகப் பிறந்து வளர்ந்திருக்கிறார் என்ற நம்பப்படுகிறது. அதனாலேயே சபரிமலைக்குப் பக்தர்கள் வரும் காலங்களில் இந்த பந்தளத்தில் உள்ள வலியக்கோயிக்கல் என்னும் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இது அச்சன் கோவில் ஆற்றங்கரைக்கு அருகில் தான் இருக்கிறது. இந்த கோவிலின் சிறப்பே, மகரவிளக்கு நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பாக ஐயப்பனின் புனித ஆபரணங்கள் அனைத்தும் திருவாபரணம் என்ற நிகழ்ச்சியின் பெயரில் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்குக் கொண்டு செல்லப்படும்.
காலம்
973 ஆம் ஆண்டு
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செங்கன்னூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்