பத்தினியாள்புரம் ஜம்புகாரண்யேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
பத்தினியாள்புரம் ஜம்புகாரண்யேஸ்வரர் சிவன்கோயில் பத்தினியாள்புரம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610105.
இறைவன்
இறைவன்: ஜம்புகாரண்யேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
திருவாரூரிலிருந்து செல்வபுரம் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் ஆனைக்குப்பம், அல்லது தட்டாத்திமூலையில் இறங்கி அருகில் உள்ள ஆற்றினை கடந்தால் பத்தினியாள்புரம் அடையலாம். அல்லது நன்னிலத்தில் இருந்து சலிப்பேரி வந்து இந்த பத்தினியாள்புரம் அடையலாம்.சிவன்கோயில் எதிரில் ஒரு பெரிய குளம் உள்ளது. சின்ன கோயில்தானே என நினைக்க வேண்டாம், பல சிறப்புக்கள் கொண்டது இந்த கோயில். இந்த ஊர் நாவற்கனி குலுங்கும் தோப்பாக இருந்தமையால் இங்குள்ள இறைவனுக்கு ஜம்புகாரண்யேஸ்வரர் என பெயர். இறைவனின் பாதியாக இருந்து இந்த அகிலத்தினை ஆட்சி புரிவதால் அகிலாண்டேஸ்வரி என பெயர். பிராண சக்தியாக விளங்கும் இந்த அம்பிகையை இன்று வழிபடத்தான் ஆளில்லை. காரணம் இவ்வம்பிகையின் மகத்துவம் வெளியுலகு அறியாமலிருப்பது தான். பிரகாரத்தின் தென்மேற்கில் சிறிய அழகிய விநாயகர் உள்ளார்.முருகன் தன் துணைவியாருடன் உள்ளார், மற்றபடி பிரகாரத்திலோ, கருவறை கோட்டத்திலோ மூர்த்திகள் இல்லை. இறைவன் எதிரில் உள்ள நந்தி முகப்பு மண்டபத்தின் வெளியில் உள்ளது. கோயில் குடமுழுக்கு கண்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. இக்கோவில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இக்காலத்தில் நல்ல குணங்கள் கொண்ட மனிதர்களை காண்பதரிது, நல்ல எண்ணங்களுக்கு அவ்வப்போது செயல் வடிவம் கொடுக்காது விட்டால் அவை மங்கி செயலிழந்துவிடும். அதனால் தினசரி வாழ்வில் சில நற்காரியங்களை செய்து கொண்டே இருத்தல் வேண்டும். தன்னொத்த குணம் கொண்டோரை சேர்த்து கொண்டு நற்காரியங்கள் செய்து கொண்டே இருத்தல் வேண்டும். இதற்கு ஊக்கமளிக்கும் மனோசக்தியை தரவல்ல அம்பிகை தான் இங்கே குடியிருக்கிறாள். அவள் தான் அகிலாண்டேஸ்வரி. மேலும் இல்லறத்தில் ஒழுக்கமாக இருக்கும் பெண்களுக்கு தீர்க்கசுமங்கலித்துவத்தை வழங்கிடும் தன்மை கொண்ட அம்பிகை இவளே. சிவன் விருத்தசுரனை விற்குடியில் சக்கராயுதத்தால் சம்ஹாரம் செய்தார், இந்த ஊர் பத்தினியாள் புரத்தில் இருந்து பக்கம் தான். இந்த, ஜலந்தரனின் மனைவி பிருந்தா மிகுந்த பக்தியும், ஒழுக்கமான பெண் ஆவார். அவரின் இந்த பக்தி, ஒழுக்கம் காரணமாக ஜலந்தாசுரன் உயிரை பறிக்க முடியவில்லை. உயிருக்கும் மரணத்திற்கும் இடையே ஜலந்தரன் உயிர் ஊசலாடியது. எனவே, மஹாவிஷ்ணு அவனது உயிரை எடுக்க ஓர் தந்திரம் செய்து அவனது உயிரை பறித்தார். இது கண்ட பிருந்தா மனவேதனை அடைந்தாள். தன் கணவனைப் பிரிந்த போது, , ஏற்ப்பட்ட அந்த மன வலியை விஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று அவள் சபித்தாள். எனவே மகாவிஷ்ணுவும் ராம அவதாரம் எடுத்து, சாபம் காரணமாக மனைவியிடமிருந்து பிரிந்து செல்ல வேண்டி வந்தது,. நாடு விட்டு காடு செல்ல வேண்டிய காலத்தில் ராம அவதாரத்தில் சீதையைப் பிரிந்து ராமரும் துன்பப்பட்டார். இவ்வாறு பக்தி, ஒழுக்க நெறி கொண்ட பெண்ணாக பிருந்தா வாழ்ந்த இடத்தையே இன்று பத்தினியாள்புரம் என்று அழைக்கப்பட்டுவருகிறது.. ஜலந்தாசுரன் மனைவி பிருந்தா வழிபட்ட தல லிங்கம் இதுவாகும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
சிறப்பு அம்சங்கள்
இங்குள்ள அம்பிகையின் மூக்கின் மேல் சிறிய துவாரம் உள்ளது, இதில் மூக்குத்தி பொருத்தமுடியும் என்பது சிறப்பு. இதனால் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள அம்பிகையை வேண்டி குணமாகியதும் மூக்குத்தி அணிவிக்கின்றனர் என கிராமத்தினர் கூறுகின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பத்தினியாள்புரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி