படப்பை தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி :
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,
படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 99414 37183
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
இறைவன்:
தழுவக்கொழுந்தீஸ்வரர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
காஞ்சியிலிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் சென்று, இடையில் படப்பை எனும் ஊர் நிறுத்தத்தில் இறங்கி திருக்கோயிலை அடையலாம்.கி.பி. 7ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவ மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்றாகும். கோயில் 3 நிலை ராஜகோபுரம் உடையது. மூலஸ்தானத்தில் சிவலிங்கம் மீது, செப்டம்பர் மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சூரியனின் ஒளி விழுகிறது.
புராண முக்கியத்துவம் :
கைலாயத்தில் ஒருசமயம் சிவனின் கண்களை, பார்வதி விளையாட்டாக மூடவே, உலக இயக்கம் நின்றது. இதனால் கோபம் கொண்ட சிவன், அம்பிகையை பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறக்கும்படி சபித்து விட்டார். வருந்திய அம்பிகை சிவனிடம், சாபத்திற்கு விமோசனம் கேட்டாள். பெருமானும் கருணையுடன், தென்திசையில் விளங்கும் காஞ்சி என்ற புண்ணிய பூமியில், கம்பா நதிக்கரையில் மாவடியில் தமது இருக்கையுள்ளது எனவும், அங்கு சென்று வழிபடுமாறும், அப்போது தாம் வெளிப்பட்டு அம்பிகையை ஆட்கொள்வதாகவும் அருளினார்.
அகிலாண்டநாயகியும் அவ்வாறே காஞ்சிக்குச் சென்று, அனுதினமும் கம்பா நதியில் திருமஞ்சன நீர் எடுத்து மெய்யன்புடன் சிவாகம முறைப்படி பூஜைகள் செய்தார். இதனைக் கண்ட ஸ்வாமி திருவுள்ளம் மகிழ்ந்து, தன்மீது அம்பாள் கொண்டுள்ள பக்தியை வெளியுலகுக்கு எடுத்துக்காட்ட, சிறு திருவிளையாடல் புரிந்தார். கம்பா நதியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அந்நேரம் பூஜைகள் செய்து அந்த நதிக்கரையில் உள்ள மாவடி சேவை மகாலிங்கனாரை வழிபட்டு கொண்டிருந்தார் அம்பிகை. வெள்ளம் கரை புரண்டு ஸ்வாமியை நோக்கி வருவதைக் கண்டு அம்பிகை அஞ்சி, பதைபதைத்து, வெள்ளம் சிவலிங்கத்தை நெருங்குமுன் விரைந்தோடி, ஸ்வாமியை ஆரத் தழுவி, வெள்ளப்பெருக்கிலிருந்து காத்தார். ஐயனும் உளம் உருகி குழைந்தருளி அன்னையை ஆட்கொண்டு மணக்கோலத்துடன் தம்பதி சமேதராய்க் காட்சி அளித்து அருள்புரிந்தான். கம்பா நதியும் வணங்கி விலகியது. தேவர்கள் மலர் தூவி, இறைவனின் திரு.மணக்கோலம் கண்டு மகிழ்ந்தனர். (திருத் தொண்டர் புராண வரலாறு இது). இப்புராண நாயகன் தழுவக் குழைந்தீஸ்வரர் மூலவராகவும், அம்பிகை காமாட்சியாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.
மூலவரின் திருநாமமான தழுவக் குழைந்தீஸ்வரர் என்பது காலப்போக்கில் மருவி தழுவக் கொழுந்தீஸ்வரர் என்ற திருநாமமாயிற்று.
சிறப்பு அம்சங்கள்:
சந்திரன், தட்சனின் மகள்களான கிருத்திகை, ரோகிணி முதலான 27 பெண்களை மணந்து கொண்டான். அவர்களில் ரோகிணியின் மீது மட்டும் கூடுதலாக அன்பு செலுத்தினான். இதனால் வருந்திய மற்ற மனைவியர், தந்தை தட்சனிடம் சந்திரன் தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினர். இதனால் கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் தேயும்படியாக சபித்து விட்டான். இந்த சாபத்திற்கு விமோசனம் வேண்டி, சந்திரன் பூலோகத்தில் பல தலங்களில் சிவனை பூஜித்து வழிபட்டான். அப்போது, இத்தலத்திலும் சிவனை வணங்கிச் சென்றான்.
அம்பாள் காமாட்சி, தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறாள். இவள் முகத்தை வலப்புறத்தை சற்றே சாய்த்து, சிவன் சொல்லைக் கேட்பதற்கு எப்போதும் தயாராக இருப்பது போன்ற அமைப்பில் காட்சி தருகிறாள். இவளிடம் வேண்டிக்கொள்ள, கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இவளது சன்னதி கோஷ்டத்தில் வைஷ்ணவி, மகாலட்சுமி, சரஸ்வதி என முத்தேவியர்களும் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் சிவன், அம்பாளுக்கு விசேஷ, அபிஷேக பூஜைகள் நடக்கிறது. திருமண தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள் பாதத்தில் தாலிக்கயிறு வைத்து பூஜித்து, பின்பு வளாகத்திலுள்ள மகிழ மரத்தில் கட்டி வைத்து வேண்டிச் செல்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. திருவொற்றியூர் தலத்தில் மகிழ மரத்தின் அடியில் சிவன், சுந்தரர், சங்கிலி நாச்சியாருக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு, மகிழ மரத்திற்கு தாலி கட்டி வழிபாடு நடப்பதாக சொல்கிறார்கள்.
“படப்பை” என்றால், “பூஞ்சோலை” என்று பொருள். பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு மத்தியில் சிவன் காட்சி தரும் தலமென்பதால் இவ்வூர், “படப்பை” என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் வழியாக விருத்தாச்சலம் சென்ற திருஞானசம்பந்தர், அத்தலத்து விருத்தகிரீஸ்வரரை வணங்கி பதிகம் பாடியபோது, இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். எனவே, இத்தலத்தை தேவார வைப்புத்தலமாகக் கருதுகின்றனர். இதை, “பொழில்சூழ் புனல் படப்பைதடத் தருகே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தலத்திலுள்ள விநாயகர், “வெற்றி விநாயகர்” என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தன்னிடம் வேண்டும் நியாயமான கோரிக்கைகளை, செவி சாய்த்துக் கேட்டு வெற்றி தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். இவருக்கு எதிரில் மூஞ்சூறு வாகனம் கிடையாது. மாறாக, யானை வாகனம் இருக்கிறது. கோயில் நுழைவு வாயிலில், சந்திரன் இருக்கிறார். திங்கள் கிழமைகளில் இவுருக்கு வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை நடக்கிறது.
பிரகாரத்தில் தனிச்சன்னதியிலுள்ள வீரபத்திரருக்கு சிவராத்திரியன்று, விசேஷ பூஜைகள் நடக்கிறது. அன்று இவருக்கு சந்தனம் மற்றும் வெற்றிலையால் அலங்கரித்து, விசேஷ பூஜை செய்கின்றனர்.
பைரவருக்கும் சன்னதி உண்டு. அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. இங்குள்ள சரபேஸ்வரர் மிக விசேஷமான மூர்த்தியாவார். மனக்குழப்பம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருநல்லழகி அம்பிகையுடன் கூடிய திருவாலீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோரும் இங்குள்ளனர்.
திருவிழாக்கள்:
வைகாசி மூலம் நட்சத்திரத்தில், திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடக்கிறது.
ஆடிப்பூரம், நவராத்திரி, மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
References: https://temple.dinamalar.com/new.php?id=228
காலம்
7 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சென்னை
இரயில் நிலையம் : ஊரப்பாக்கம்
படப்பை
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஊரப்பாக்கம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை