Sunday Nov 24, 2024

பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் – – 631 502. போன்: +91- 44 – 2722 9540

இறைவன்

இறைவன்: பச்சைவண்ணப்பெருமாள் இறைவி: மரகதவல்லி

அறிமுகம்

ஸ்ரீ பச்சை வண்ணப் பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சென்னையிலிருந்து பெங்களூர் நெடுஞ்சாலைகள் வழியாக வரும் போது காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு முன்புறம் பிரதான சாலையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பச்சை வண்ணப் பெருமாள் கோயிலும் பவள வண்ணப் பெருமாள் கோயிலும் ஒரே தெருவில் எதிரெதிர் திசையில் அமைந்துள்ள இரண்டு தனித்தனி கோயில்கள். ஒருவர் ஒரு கோவிலுக்குச் சென்றால், மற்றொரு கோயிலுக்குச் செல்வது கட்டாயம் என்பது ஐதீகம். இந்த இரண்டு கோவில்களும் இணைந்து ஒரே திவ்ய தேசமாக அமைவது தனிச்சிறப்பு. பச்சை வண்ணன் ஆதிசேஷனின் மீது அமர்ந்த கோலத்தில், பரமபத நாதன் என்றும் அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம்

சப்தரிஷிகளில் ஒருவரான மகரிஷி மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவராக இருந்தார். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக ராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா? என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், “”நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா? எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள்? இது உங்களுக்கு தெரியாமல் நடக்குமா? அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா? அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா? என தனது சந்தேகங்களை பட்டியலிட்டார் மகரிஷி. அவரிடம், “”நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம் என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன். பிள்ளைகள் தங்கள் தந்தையின் சொல்லை மதித்து கேட்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகள் தனது புகுந்தவீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும், என சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காகவும் இந்த அவதாரம் அமைந்தது” என்று சொல்லி பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல மக்களுக்கும் அருள்புரிய வேண்டினார். மகாவிஷ்ணுவும் பச்சைநிறப் பெருமாளாகவே தங்கினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

திருமண, புத்திர, நாக தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். சந்தேகபுத்தி உள்ளவர்கள் தெளிவு பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். எனவே, இவரை “பச்சைவண்ணப் பெருமாள்’ என்கின்றனர். மகரிஷிக்காக தனியே காட்சி தந்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை. ராமராக காட்சி தந்தவர் என்பதால் இவரை ராமராகவும், தாயாரை சீதையாகவும் எண்ணி வழிபடுகின்றனர். புத கிரகத்தின் அபிமான நிறம் பச்சை, அவருக்குரிய அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே பச்சை நிறத்தில் இருக்கும் இவருக்கு பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தாயார் சிறப்பு: தாயார் மகாலட்சுமி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். பெரும்பாலும் தாயார் சன்னதிக்கு முன்புறம் அல்லது அருகில்தான் ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்படும். ஆனால், இங்கு தாயாரின் பீடத்திலேயே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுராமர் போல காட்சி தந்ததால் இவள்சீதாதேவியாகவும் கருதப்படுகிறாள். இதனால் தாயார் யந்திர ரூபிணி, மகாலட்சுமி, சீதை ஆகிய மூன்று தாயார்களின் அம்சமாக அருளுகிறாள். நாகதீபம்: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷனே, ராமாவதாரத்தில் லட்சுமணராகப் பிறந்தார். தன் மீது அன்பு கொண்டிருந்த ஆதிசேஷனை தன் தம்பியாக பிறக்க வைத்து மரியாதை செய்தார் ராமர். இத்தலத்தில் மகாவிஷ்ணுராமராக மகரிஷிக்கு காட்சி தந்தபோது, ஆதிசேஷனால் லட்சுமணனாக மாறமுடியவில்லை. எனவே தன் சுய வடிவத்திலேயே (நாக வடிவம்) இங்கு வந்தார். மகாவிஷ்ணுவிடம் அவரைத் தாங்க தனக்கு வாய்ப்புத் தரும்படி உரிமையுடன் கேட்டார். எனவே, நாகத்தின் தலையின் மீது, பெருமாள் ஜோதியாக காட்சி தந்தார். இதன் அடிப்படையில் தாயார் சன்னதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் நாகமாக இருக்க அதன் தலைக்குமேலே ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாக, புத்திர தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் நாகசன்னதியும் இருக்கிறது. பிரம்மா, சரஸ்வதியை அழைக்காமல் யாகம் செய்தபோது அவள் அசுரர்களை அனுப்பி யாகத்தை தடை செய்தாள். விஷ்ணு, ஜோதியாக நின்று பிரம்மாவின் யாகம் பூர்த்தியடைய உதவினார். அப்போது ஜோதி வடிவில் காட்சி தந்த மகாவிஷ்ணு, இத்தலத்திலும் ஜோதியாக காட்சி தந்திருக்கிறார் என்பது சிறப்பு.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top