Thursday Jul 04, 2024

நைனாமலை வரதராஜ சுவாமி பெருமாள் திருக்கோயில், நாமக்கல்

முகவரி

நைனாமலை வரதராஜ சுவாமி பெருமாள் திருக்கோயில், நாமக்கல் பெருமாள் கோவில் தெரு, சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு – 637409 அலைபேசி: 9443499854 & 9442397876

இறைவன்

இறைவன்: வரதராஜ சுவாமி பெருமாள் இறைவி: குவலயவல்லி

அறிமுகம்

கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் உள்ள காளப்ப நாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர் . நாமக்கல் மாவட்டத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிகம் வாழ்வதாலும் , நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் , நைனா என்றால் தந்தை என்று தெலுங்கில் பொருள் படுகிறது , கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலையை நைனா மலை என்று அழைக்கிறார்கள் என்றும் , சிவ தலங்களைப் போல தொன்மை வாய்ந்த இம்மலையில் ரிஷிகள் தவமிருந்து, வரதராஜப் பெருமாளை தரிசித்து வந்ததாகவும், கன்மநையின மகரிஷி என்பவர் பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்து, மலை மீதே சமாதி ஆனதால் , இம்மலைக்கு நைனாமலை என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இக்கோயில் 1000-2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோவில். கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. 3500 படிகள் ஏறி மலை உச்சியை அடையலாம். இக்கோயிலின் தல விருச்சம் நெல்லி மரம். மலை அடிவாரத்தில் இருந்து கோயில் உச்சிக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள திருமஞ்சன தீபம் மிகவும் பிரபலமானது மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குத் தெரியும். பொலிகர் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இது நாமக்கல்லுக்கு வடகிழக்கே 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் இம்மலையின் உயரம் 3 கிலோ மீட்டர். ஆனால் மிகவும் செங்குத்தான, குறைந்த அகலமே கொண்ட சுமார் 3,700 படிகள் உள்ளன. மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில், உச்சி முழுவதையும் உள்ளடக்கி, கோவில் கட்டப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது கடும்பஞ்சத்திலும் என்றென்றும் வற்றாத அமையா தீர்த்தம், அரிவாள் பாழி, பெரிய பாழி என மூன்று தீர்த்தங்கள் மட்டும் உள்ளன. மலை முடியும் இடத்துக்குப் பத்துப் படிகள் கீழே நமக்கு அருள்தரும் வண்ணம் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வணங்கிய பின்பு சில படிகள் ஏறினாலே இறைவனின் சந்நதி வந்துவிடும். பெருமாளின் சந்நதிக்கு எதிரே கொடிமரத்துக்கு அருகில் பெரிய திருவடி கருடாழ்வார் இறைவனைக் கைகூப்பித் தொழுதவராகக் காட்சிகொடுக்கிறார். கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். அவரை கண்குளிர தரிசித்து வழிபட நாம் படிகளேறி வந்த களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெறும் அதிசயம் நிகழும். சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் உள்ள தூணில் நயன மகரிஷி தவம் செய்வதுபோன்ற சிற்பம் ஒன்றும் உள்ளது. பெருமாளை தரிசித்து வெளியே வர அன்னையின் சந்நிதி வரவேற்கிறது. குவலயவல்லித் தாயார் கருணையே உருவான திருவுருவம் கொண்டு அந்தச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அதே போல தமிழ் மறை பாடிப் பெருமாளைச் சேவித்த ஆண்டாளுக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. சுவாமி சந்நிதியை அடுத்த மகாமண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சமேதராகவும், நவநீதகிருஷ்ணரும், ராதா, ருக்மணி சமேதராகக் காட்சி கொடுக்கும் ஶ்ரீ வேணுகோபாலரும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். ஆலயத்துக்கு வெளியில் இருக்கும் கல்மண்டபமும் மிகப் பழைமையானது. மண்டபத்துத் தூண்களில் படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகை சித்தர், குரு லிங்க சித்தர் போன்ற சித்த புருஷர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இன்றளவும் இங்குச் சித்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்து இறைவனைச் சூரியன் வழிபட்டு வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப வருடத்தில் உத்ராயண புண்யகாலமான தை முதலான ஆனி மாதம் வரையிலான ஆறுமாதமும் சூரியனின் ஒளி மூலவரின் முகத்தில் படுவதுபோல் கோவிலின் அமைப்பு அமைந்துள்ளது. இதைக் காணும் பக்தர்களுக்குச் சூரிய நாராயணர், வரதராஜப் பெருமானை தன் கிரணங்களால் ஸ்பரிசித்து வழிபடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல இந்திரனும் இங்கு இடி ரூபமாக வந்து இறைவனை வழிபடுவதாகவும் ஐதீகம். நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது என்றும், தெலுங்கு பேசும் நாயக்கர்கள் இந்தத் தலத்து இறைவனைத் தங்கள் தந்தையாகப் பாவித்த காரணத்தினால் நைனாமலை என்று பெயர் பெற்றதாகவும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் இந்தத் தலம் சின்னத் திருப்பதி என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.

சிறப்பு அம்சங்கள்

வரதராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், புரட்டாசியில் (செப்டம்பர்-அக்டோபர்) சனிக்கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் மாவட்ட மக்களால் சிறப்பு வழிபாட்டுடன் கருதப்படுகிறது. “சகுந்தலா” என்ற நன்கு அறியப்பட்ட நாடகத்தின் கதாநாயகியான சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையான கன்வர் முனிவரின் வசிப்பிடமாக இந்த மலை இருப்பதாகக் கூறப்படுகிறது. மகா மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், வெண்ணெய் பாத்திரம் கொண்ட கிருஷ்ணன், நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், மன்மதன், ரதி, அய்யப்பன், தசாவதாரம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தமிழ் மாதமான ஆனி முதல் ஆடி 30 வரை சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுகின்றன. 3 நீர் ஓடைகள் உள்ளன. இங்குள்ள திருமஞ்சன தீபம் மிகவும் பிரபலமானது மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குத் தெரியும். நைனாமலை மலை அடிவாரத்தில் சேந்தமங்கலம் நகரம் உள்ளது. இங்கு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய கோவில் உள்ளது. முக்கிய தெய்வங்கள் ஸ்ரீ பெருந்தேவி சமேத லட்சுமி நாராயண சுவாமி.

திருவிழாக்கள்

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. சர்வபாவங்களையும் நீக்கி நற்கதியும், நல்வாழ்வும் அருளும் திருத்தலங்களுள் ஒன்றுதான் நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில். பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வது உகந்தது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செந்தமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

இராசிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top