நெடுங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
நெடுங்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
நெடுங்குடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611101.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
ஆனந்தவள்ளி
அறிமுகம்:
திருவாரூர் – கீவளூர் சாலையில் உள்ள அடியக்கமங்கலம் வந்து ரயிலடி தெருவில் சென்று ரயில் பாதையை கடந்து இரண்டு கிமீ சென்றால் நெடுங்குடி கிராமம். நெடுங்காலமாக இறைவன் குடிகொண்டிருக்கும் தலம் என்பதால் நெடுங்குடி என பெயர். கைலாசநாதர் பெயர் கொண்ட கோயில்கள் என்றாலே ஆயிரம் ஆண்டுகட்கு மேல் பழமையானவை என கூறலாம் அதனால் நெடுங்குடி பொருத்தமானதே ஆகும். இங்கு ஊரின் மையத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய சிவன் கோயிலாக உள்ளது, இறைவன்- கைலாசநாதர் இறைவி – ஆனந்தவள்ளி
இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பெரிய பரப்பில் கோயில் வளாகம் அமைந்து உள்ளது. முகப்பு வாயிலில் மீனாட்சி கல்யாண சுதை அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான செங்கல் திருப்பணி, பார்ப்பதற்கு கருங்கல் அதிட்டானம் போல வேலைகள் செய்துள்ளனர். கருவறையின் முன்னர் அர்த்த மண்டபம் உள்ளது, அதில் கருவறை வாயிலில் இரு பெரிய சுதையாலான துவாரபாலகர்கள் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் சிறிய நந்தி ஒன்றும் பலிபீடம் ஒன்றும் உள்ளது இறைவன் பெரிய அளவிலான ஆவுடையாருடன் நடுவில் மிக சிறிய பாணம் கொண்டுள்ளார்; பார்க்க வியப்பான ஒன்றாக உள்ளது.
இந்த அர்த்தமண்டபத்தின் முன்னர் நீண்ட கூம்பு வடிவ கூரை கொண்ட நாயக்கர் கால மண்டபம். மண்டபத்தை அகன்ற உயரமான தூண்கள் தாங்குகின்றன. மகா மண்டபத்தின் முன்னர் தனி மண்டபத்தில் நந்தியும் அதன் பின் ஒரு அழகிய பீடத்தில் பலிபீடமும் உள்ளது. அழகிய நந்தியை வணங்கி முகப்பு மண்டபத்தில் நுழைந்தால் இடதுபுறம் பெரிய அளவிலான ஒரே கல்லில் திருவாசியுடன் வடிக்கப்பட்ட அழகிய விநாயகர் கம்பீரமாக உள்ளார். அங்குசம் பாசம் தந்தம் மோதகம் ஏந்தி விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார். இங்கு மோதகத்தை ருசிப்பது போன்ற மோதக விநாயகர் உள்ளது சிறப்பு. இவரை சதூர்த்தி தினத்தில் வணங்குவோருக்கு வாழ்வின் துன்பங்கள் உடனடியாக விலகி இனிப்பான வாழ்க்கை அமையும்.
விநாயகரின் இடதுபுறத்தில் நால்வர் சிலைகள் சிமெண்ட்டால் செய்யப்பட்டு கிழக்கு நோக்கி உள்ளனர். நுழைவாயில் மறுபுறம் சிறிய அளவிலான வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். முருகனை ஒட்டியவாறு ஒரு குறுகிய சன்னதி ஒன்றுள்ளது அதில் ஒரு லிங்க மூர்த்தி கிழக்கு நோக்கிய வண்ணம் உள்ளார். மகாமண்டபத்தின் வடபுறம் அம்பிகை சன்னதி உள்ளது அழகிய வடிவுடன் தெற்கு நோக்கி உள்ளார். சன்னதியின் ஓரம் பைரவரும், சூரியனும் உள்ளார்கள். கருவறையின் வெளிப்புறம் கும்ப பஞ்சரங்களுடன் அதிட்டான அங்கங்களுடன் அழகாக வடிக்கப்பட்டு உள்ளது தெற்கில் தக்ஷ்ணமூர்த்தி அழகான வடிவில் உள்ளார்.
கோஷ்டங்களில் வேறு தெய்வங்கள் இல்லை. துர்க்கைக்கு தனியாக ஒரு மாடம் கட்டப்பட்டு அதில் உள்ளார். சண்டேசர் அழகிய தனி சிற்றாலயம் கொண்டுள்ளார்; இரு தூண்கள் கொண்ட முகப்புமண்டபமும் உள்ளது. கருவறை ஒட்டி நாகர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது ஏன்? தென்மேற்கு பகுதியில் விநாயகரை வைக்க வேண்டிய இடத்தில் சனி பகவானை வைத்துள்ளது ஏன்? சண்டேசர் சன்னதியில் இரு நாகர்கள் உள்ளது ஏன்? என பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. சரியான பராமரிப்பின்றி கோயில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெடுங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி