நீலப்பாடி நாகநாதசுவாமி சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நீலப்பாடி நாகநாதசுவாமி சிவன்கோயில்,
நீலப்பாடி, கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
இறைவன்:
நாகநாதசுவாமி
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் இடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது. நல்லப்பாடி என்பதே நீலப்பாடி ஆனது. இந்த தலத்தில் நாகங்கள் இறைவனை வணங்கி பயன் அடைந்தன, கொடிய விஷம் கொண்ட நாகங்களும், இறைவனை வணங்கியபின் சடையிலும் இடையிலும் சாதுவாக ஊர்கின்றன.
இங்குள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி சௌந்தரநாயகி. வசிஷ்டர், விசுவாமித்திரர், நாரதர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். அஷ்டபுஜ துர்க்கைசன்னதி இக்கோயிலில் உள்ளது. கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்று கூறப்பட்டாலும் இருவரும் ஒரே இடத்தில் இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற அதிசயத்தைப் பெற்ற பெருமையுடையது இக்கோயிலாகும்.
புராண முக்கியத்துவம் :
அஷ்ட நாகங்களில் ஒன்றான கார்கோடகன், கருடனிடம் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று யோசித்த கார்கோடகன், வெண்ணாறு வனத்துக்கு வந்து இறைவனை எண்ணித் தவம் செய்ய இறைவனும் காட்சி கொடுத்து ‘உனக்கு எவராலும் எந்தத் தீங்கும் நேராது’ என அருளினார். அதில் நெகிழ்ந்த கார்கோடகன், நான் வணங்கிய இத்தலத்தில் வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு சர்ப்ப தோஷங்கள் நீக்கி அருளுங்கள் எனக் கோரிக்கை விடுக்க, ‘அப்படியே ஆகட்டும்’ என்றார் சிவனார். அதன்படி, இங்கு வருவோரின் சர்ப்ப தோஷம் நீக்கி அருள்புரிகிறார் இறைவன். நாகம் வழிபட்டதால், சிவனாருக்கு ஸ்ரீநாகநாதர் என்ற பெயர்.
அழகான பெரிய கிழக்குப் பார்த்த கோயில் முகப்பு கோபுரம் இல்லை. உள்ளே கிழக்குப் பார்த்த நிலையில், தோஷங்களை நீக்கி அருளும் நாகநாதர் அழகிய லிங்கமாக தரிசனம் தருகிறார். வியாக்ரபாத முனிவர் இங்கே, இந்தத் தலத்து இறைவனை நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டு, அருள்பெற்ற தலம். ஏழரைச் சனியின் சோதனையில் அனைத்தையும் இழந்து தவித்த நள மகாராஜா, திருநள்ளாறு தலத்துக்குச் செல்வதற்கு முன், இங்கு வந்து நாகநாதரை வழிபட்டார்.
நம்பிக்கைகள்:
எட்டுக்கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீஜெயதுர்கையை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில், வஸ்திரம் மற்றும் எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட திருமண தோஷம் நீங்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கிய சிவன் கோயில் கோயிலின் தெற்கில் பெரிய குளம் ஒன்றுள்ளது. முகப்பில் ராஜகோபுரங்கள் இல்லை அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது அதில் நாகர் இறைவனை வழிபடுவது போல் சுதை உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் பெரிய வளாகமாக கோயில் உள்ளது. இறைவன் நாகநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். மிக அழகான சோழ கட்டுமானம், முன்னர் அர்த்தமண்டபம் மகாமண்டபம் என நீண்ட மண்டபங்கள் கொண்டு கருவறை விளங்குகிறது.. பிரஸ்தரம் வரை கருங்கல் வேலைப்பாடுகள் கொண்ட அழகிய தேரொன்று நிற்பது போல உள்ளது.
அர்த்தமண்டபத்தில் மாரியம்மன் சிலை ஒன்றும் சனிபகவான் சிலை ஒன்றும் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டு உள்ளன. சனியின் நேர் எதிரில் பைரவர் சூரியன் உள்ளனர். சிவாலயத்தில் பரிவார தேவதையான மாரியம்மன் வைப்பது சரியா என விளங்கவில்லை. நந்தி தனி மண்டபத்தில் இறைவனின் நேர் எதிரில் உள்ளார். கருவறை வாயிலில் விநாயகரும் ஒன்று லிங்க பாணன் ஒன்றும் உள்ளது அது அகத்தியர் வழிபட்டது என கூறுகின்றனர்.
இறைவி சௌந்தரவல்லி. பெயருக்கேற்ப அழகு. பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் அடுத்து வள்ளி- தெய்வானையுடன் காட்சி தரும் முருகனும் ஒரு சிற்றாலயம் கொண்டுள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். இவருக்கு முனனர் பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற இடைசெருகல்கள் பழமையை மாற்றிவிடும் பின்னர் நம் வரலாறும் சரியான தரவுகளுடன் இருக்காது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நீலப்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி