Saturday Nov 16, 2024

நாமக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம் – 637001. Phone: 04286 – 233999 Mobile: +91 – 97500 42615 / 97867 98837

இறைவன்

இறைவன்: நரசிம்மர் இறைவி: லட்சுமி

அறிமுகம்

நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரித்தாயார் ஆவார். நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம். முதலில் கோயிலுக்கு முன்னே அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார். நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.

புராண முக்கியத்துவம்

அசுரர்களின் தலைவரான இரணியன் தன் நாட்டு மக்களிடம் யாராவது நாராயண நம என்று சொன்னால் நாக்கை துண்டித்து விடுவேன். இரண்யாய நம என்றே சொல்ல வேண்டும். நானே கடவுள் என உத்தரவு போட்டு விட்டான். பெற்ற மகனான பிரகலாதனுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என சொல்லி விட்டான். ஆனால் மகன் மறுத்து விட்டான். விளைவு பிரகலாதன் சித்ரவதை செய்யப்பட்டான். எதற்கும் மசியாத பிரகலாதன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என் நாராயணன் என சொன்னதும், அருகிலிருந்த தூணை ஆவேசமாக உடைத்தான் இரண்யன். தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்தார் நாராயணர். உலகமே அஞ்சி நடுங்கியது. வீராவேசம் பேசிய இரண்யன் கலங்கிப் போனான். அவனது வீரம், கோபம் அடங்கிப் போனது. நாராயண மூர்த்தி அவனது உடலை கூறிய நகங்களால் கீறி கொன்று விட்டார். உக்கிரத்துடன் இருந்த நரசிம்மரின் கோபத்தை தணிப்பதற்காக அவரது மடியில் மகாலட்சுமி அமர்ந்தாள். இத்தலம் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற பல்லவ மன்னரால் அமைக்கப்பட்டது என்று கோயிலில் அமைந்திருக்கும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கண்டகி நதிக்கரையில் இருந்த நரசிம்ம மூர்த்தியின் திருக்கோலம் கண்டு வணங்கிய ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து வந்தார். வான்வழியில் வந்த அவர், வைகறையில் தவம் செய்ய வேண்டி, இங்குள்ள கமலாலய குளக்கரையில் மலையை இறக்கி வைத்தார். தவம் முடித்து, மீண்டும் மலையை தூக்க முயற்சித்த போது, முடியாமல் தவித்தார். அப்போது அன்னை மகாலட்சுமி, என் எண்ணப்படியே நீ நரசிம்ம மூர்த்தியை இங்கு கொண்டு வந்தாய். எனவே, நீ ராமனுக்கு செய்யும் கடமைகளை முடித்து, நரசிம்ம மூர்த்தியை வணங்கி வீடுபேறு பெறுக என்று உத்தரவிட்டார். அதன்படியே தொழுத கையுடன் நின்று நரசிம்ம மூர்த்தியை வணங்குகிறார் அனுமன்.

நம்பிக்கைகள்

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடைவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி. ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இக்கோயில், பிற்காலத்தில் சிற்பக் கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ மன்னர்களால் அழகுற புதுப்பிக்கப்பட்டது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜ முனிவர்களான சனக, சனந்தாக்கள் உள்ளனர். சூரிய, சந்திரர்கள் கவரி வீசுகின்றனர். வலதுபுறம் ஈஸ்வரரும், இடதுபுறம் நான்முகனும், இரண்யனை வதைத்த உக்கிரம் தணிவதற்கு வழிபடுகின்றனர். நரசிம்ம மூர்த்தியின் அபயமளிக்கும் வலது கையின் கூரிய நகங்களில் இரண்ய சம்ஹாரம் செய்த ரத்தக்கறை இன்னும் விளங்குகிறது. அன்னை மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். குடவரை கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு வலதுபுற சுவரில், கம்பத்தை பிளந்து கொண்டு, ஆக்ரோஷத்துடன் வெளிவந்து, இரண்யனை தன் மடி மீது இரு கைகளாலும் பிடித்து கிடத்திக் கொண்டு, அவன் மார்பை பிளந்தும், மற்ற நான்கு கைகளில் ஆயுதங்கள் தாங்கியும், குரூரமாக, உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி. நாமக்கல் நகரின் நடுவில் இருநூறடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் துவஜஸ்தம்பமும் பலிபீடமும் காணப்படுகின்றன. இடப்பக்கமுள்ள தனிச் சன்னிதிகளில் கிருஷ்ணர், ராமர், இராமானுஜர், போன்றோர், எழுந்தருளியுள்ளனர். எதிரே பிராகாரத்தின் மறுமுனையில் வேதாந்த தேசிகர் காணப்படுகிறார். பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடனை வணங்கியவாறு வாத்திய மண்டபம், மகா மண்டபம் கடந்து அர்த்த மண்டபத்திற்குச் செல்லலாம். மகா மண்டபத்திற்கு அருகே விஷ்வக்சேனர் தனி சன்னிதியில் காணப்படுகிறார். கருவறை மலையுடன் துவங்கி அர்த்த மண்டபத்துடன் இணைகிறது. மண்டபத் தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளைக் காண முடிகிறது. கருவறையில் அமர்ந்த நிலையில் நரசிம்மர் காட்சியளிக்கிறார். இரண்யனின் மார்பைப் பிளந்த அவரது வலது கரம் சிவப்பு வண்ணத்தைப் பெற்றுள்ளது. முன் இடது கை தொடை மீது படர்ந்துள்ளது. பின் வலது கரத்தில் சங்கும் பின் இடது கரத்தில் சக்கரமும், மேல் பகுதியில் உள்ளன. நரசிம்மரின் திருமார்பிலுள்ள மாலையில் மகாலக்ஷ்மியின் உருவம் காணப்படுகிறது. வாத்திய மண்டபத்தின் வடக்கு வாயில் வழியாக வெளியே வந்தால் லக்ஷ்மி நாராயணரையும் தெற்கு வாயில் வழி வந்தால் நாமகிரித் தாயாரையும் தரிசிக்கலாம். நரசிம்மர் சன்னிதிக்கு எதிரே சாளரத்தின் வழியாக ஆஞ்சநேயரைக் காணலாம். ஆஞ்சநேயர், நரசிம்மர் முகத்தை நேரிடையாகக் காண அஞ்சி அவரது திருவடிகளை மட்டும் தரிசனம் செய்யும்படியாக பதினெட்டடி உயரத்தில் கோயிலை நோக்கியவாறு விஸ்வரூபத் திருக்கோலத்துடன் கை கூப்பி எழுந்தருளியுள்ளார்.

திருவிழாக்கள்

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாமக்கல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top