நன்செய் இடையாறு எயிலிநாதர் (திருவேலிநாதர்) திருக்கோயில், நாமக்கல்
முகவரி
அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம் – 638182.
இறைவன்
இறைவன்: எயிலிநாதர் ( திருவேலிநாதர்) இறைவி: சுந்தரவல்லி
அறிமுகம்
எயிலிநாதர் கோயில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். பஞ்ச பாண்டவ பீமன் வழிபட்ட மணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுயம்பு லிங்கம் கொண்ட ஐந்து கோவில்களில் இதுவும் ஒன்று. காவிரி ஆறுக்கும், திருமணிமுத்தாறுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் “நன்செய் இடையாறு’ என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது.
புராண முக்கியத்துவம்
பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் புருஷாமிருகம் என்ற ஒன்றை ஏவினார். இது மனித உடலும், மிருக தலையும் கொண்டது. அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, “கோவிந்தா, கோபாலா’ என கதறிக்கொண்டே ஓடினான். சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுநாதர், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்திபீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை.
நம்பிக்கைகள்
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
சிறப்பு அம்சங்கள்
சுயம்புலிங்கம் எனப்படுவது தானாகவே தோன்றுவதாகும். இறைவன் தானாகவே விரும்பி அமர்ந்த இடங்கள் சில உண்டு. இவ்வகையில் ஐந்து சுயம்பு லிங்க தலங்களை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தரிசிக்கலாம். இவற்றில் முக்கியமானது பரமத்திவேலூர் அருகிலுள்ள நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில் ஆகும். காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணி முத்தாற்றுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் “நன்செய் இடையாறு’ என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது. ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும். இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில் கி.பி.10ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது.
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நன்செய் இடையாறு
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்