Thursday Dec 26, 2024

நத்தம் பரமேஸ்வர மங்கலம் செண்பகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு செண்பகேஸ்வரர் திருக்கோயில், நத்தம் பரமேஸ்வர மங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603305. மொபைல்: +91 – 99945 87182 / 94430 67193 / 97900 70473 மொபைல்: +91 – 9443620460 / 9994587182 / 8883776521

இறைவன்

இறைவன்: செண்பகரேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி

அறிமுகம்

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரத்தில் இருந்து தென்மேற்கில் 14 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்திற்கு அடுத்துள்ள பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, இந்தத் தலம். பாலாற்று பாலத்தைக் கடந்தவுடன், காத்தான்கடை என்னும் ஊர் வரும். அங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் நத்தம் பரமேஸ்வரமங்கலம் இருக்கிறது.

புராண முக்கியத்துவம்

அசுரர்களும், தேவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இதனால் இரண்டு பக்கமும் நிறைய இழப்புகள். தேவர்கள், தங்கள் பக்க இறப்புகளை சரிசெய்வது குறித்து பிரம்மனிடம் கேட்டனர். அவர் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் திருப்பாற்கடலைக் கடைய நிறையபேர் வேண்டும். தேவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். அவர்கள் தங்களோடு, அசுரர்களையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தனா். அமிர்தத்தில் பங்கு தருவதாக கூறியதும் அசுரர்களும் ஒப்புக்கொண்டனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். இருபக்கமும் கடுமையாக இழுத்ததால் மலை சரிய ஆரம்பித்தது. அப்போது பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த திருமால், கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, கடலுக்கடியில் சென்று மலையை தாங்கிப்பிடித்தார். இதை அடுத்து மீண்டும் பாற்கடலை அனைவரும் கடையத் தொடங்கினர். இந்த நிலையில் வாசுகி வலி தாளாமல் கடலில் நஞ்சை உமிழ்ந்தது. அதே நேரத்தில் கடலில் இருந்தும் விஷம் ஒன்று தோன்றியது. இரண்டு விஷமும் ஒன்றாக இணைந்து உலக உயிர்களை அழித்து விடும் சக்தி பெற்றவையாக இருந்தன. சிவபெருமான் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த விஷத்தை சுந்தரர் மூலம் கொண்டு வரச் செய்து அருந்தினார். அந்த விஷத்தால் சிவனுக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்று பார்வதி தேவி அவருடைய கழுத்தைப் பிடிக்க, விஷம் ஈசனின் தொண்டையோடு நின்றது. அதேசமயம் மலையின் கீழ் அதனைச் சரியாமல் ஆமை வடிவில் தாங்கி இருந்த மகாவிஷ்ணுவின் உடல் முழுவதும் நீலமாகிப் போனது. உடலில் விஷ முடிச்சுகள் தோன்றின. பாற்கடலில் இருந்து வெளிவந்த லட்சுமி இதைக்கண்டு பயந்து போனாள். அவள் திருக்கயிலாயம் சென்று கயிலாசநாதரிடம் முறையிட்டாள். சிவபெருமான், “லட்சுமிதேவியே.. பூலோகத்தில் பாலாற்றின் தென்கரையில் உள்ள செண்பக வனம் சென்று அங்கு உறையும் சிவலிங்கத்தை வணங்கி தவம் இயற்று, அப்போது யாம் பார்வதி, பரமேஸ்வரனாய் காட்சி தந்து உந்தன் குறை களைவோம்” எனக் கூறி அருளினார். அதன்படி லட்சுமிதேவி, குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, செண்பகமரத்தின் அடியில் சுயம்புவாய் எழுந்தருளி அருளும் சிவலிங்கத்தை, நறுமண மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள். இவ்வாறு மகாலட்சுமி, ஈஸ்வரனை வழிபட்ட தலமே, ‘நத்தம் பரமேஸ்வர மங்கலம்.’ இங்குள்ள ஈசன் ‘சம்பகேஸ்வரர்’ எனப் போற்றப்படுகிறார். அம்பாளின் திருநாமம் ‘சவுந்திர நாயகி.’ அன்னையின் திருக்கரங்களில் பாசம், அங்குசம் இல்லாமல் மகாலட்சுமியைப் போல தாமரையும் நீலோற்பலமும் ஏந்தியிருக்கிறார். மகாலட்சுமியின் வேண்டுதலால், திருமாலின் உடலில் இருந்த விஷ முடிச்சுகள் நீங்கின. அவ்வாறு திருமாலின் விஷ முடிச்சுகள் நீங்கியது ஒரு சிவராத்திரி தினமாகும். எனவே சிவராத்திரி விழா இத்தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

நம்பிக்கைகள்

மகா சிவராத்திரி, மாதாந்திர சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுவதோடு, கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து வணங்கினால், வாழ்வில் வரும் கொடிய துன்பங்களும் அடியோடு விலகும் என்பது ஐதீகம். விஷக்கடி பாதிப்பு உள்ளவர்கள் இத்தலத்தில் முறைப்படி வழிபட்டால் நலம் அடையலாம். சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை செண்பகப்பூ, கொன்றை பூ, வில்வம் ஆகியவற்றால் வழிபட்டால் வறுமை, தரித்திரம், உடல் உபாதைகள் அகன்று வாழ்வில் நலம், வளம் வந்தடையும். மகாலட்சுமி இத்தலத்தில் ஈசனை தரிசிக்கும் முன்பாக, இத்தல அம்பிகை சவுந்தர்ய நாயகியைதான் வழிபட்டாராம். எனவே இங்கு முதலில் அன்னை சவுந்தர்ய நாயகிக்கே பூஜைகள் நடைபெறுகிறது. அதன் பின்பே செண்பகரேஸ்வரருக்கு வழிபாடு நடக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

செண்பகரேஸ்வரர் ஆலயக் கருவறைக் கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, அரி கரன் உள்ளனர். ஆலயத்தில் முருகர், வீரபத்திரர், பைரவர், சூரியன், சனி ஆகியோர் தனிச் சன்னிதிகளில் அருள்புரிகின்றனர். இத்தல பைரவருக்கு முழுமதி நாளில் வெற்றிலை மாலை சூட்டு வதும், ராகு காலம், அஷ்டமி நாட்களில் சிவப்பு மலர்மாலை சூட்டி வழிபடுவதும் பெரும் நற்பலன்களை அள்ளித் தரும் என்கிறார்கள். மகாலட்சுமி இங்கு ஈசனிடம் திருக்கயிலாய காட்சி அருளும்படி சொல்ல, உடனே பரமேஸ்வரன் அன்னை உமையவளுடன் அருகில் உள்ளக் குன்றில் கயிலாசநாதராய் காட்சி கொடுத்து மகாலட்சுமிக்காக கயிலாசநாதராய் சிறுகுன்றில் எழுந்தருளிய திருத்தலம், அருகில் உள்ளது. கனகாம்பிகை சமேத கயிலாசநாதர் திருக் கோவில் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் குன்றின் மீது ஈஸ்வரன் அருள்கிறார். செண்பகரேஸ்வரர் அருளும் திருத்தலம் ‘நத்தம்’ என்றும், கயிலாசநாதர் அருளும் திருத்தலம் ‘பரமேஸ்வர மங்கலம்’ என்றும் அழைக்கப் படுகிறது. இவ்விரண்டு திருத்தலங்களும் மிக அருகில் உள்ளதாலும், இவ்விரு திருத்தலங்களின் வரலாறும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளதாலும் இவ்விரு திருத்தலங்களும் உள்ள தலத்தை ‘நத்தம் பரமேஸ்வரமங்கலம்’ என்று இணைத்தே அழைக்கிறார்கள். சிறப்பு பெற்ற இத்திருத்தலம் பாலாற்றின் கரையில் உள்ளது. அமாவாசை நாட்களில் செண்பகரேஸ்வரர் மற்றும் கயிலாசநாதர் திருக்கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது நம் முன்னோர் களின் நற்கதிக்கு உதவும். இதனால் பித்ரு சாபங்கள், பித்ரு தோஷங்கள் அகன்று நம் வாழ்விலும், நம் சந்ததிகள் வாழ்விலும் வளம் பிறக்கும். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் திருப்பணிகள் நடந்து உள்ளதை இத்தல கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. செண்பகரேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே தனிச் சன்னிதியில் சீதாதேவி, லட்சுமணன் சமேத ராமபிரான் எழுந்தருளியுள்ளார்.

காலம்

869- 880 ஆம் ஆண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நத்தம் பரமேஸ்வர மங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கல்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top