Thursday Dec 26, 2024

நடுசத்திரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர்

முகவரி :

நடுசத்திரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,

நடுசத்திரம்,

விருதுநகர் மாவட்டம் –  626201.   

இறைவன்:

ஸ்ரீகாசிவிஸ்வநாதர்

இறைவி:

ஸ்ரீஅன்னபூரணி

அறிமுகம்:

 விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக்கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர் களால் கட்டப்பட்ட கோயில் இது. . தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

சாத்தூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம் பண்ணை வழியாகச் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். சிவகாசியிலிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது குகன்பாறை. அங்கிருந்து கிழக்குப்புறமாக 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

தற்போது கோயில் அமைந்துள்ள இடம்,  அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோயிலின் அருகிலேயே ஓர் அருமையான நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். இந்த வழியாகக் காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். 

பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன்னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம் ஆலய நிர்வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்துள்ளனர். அதன்பின், இந்த ஆலயம் செவல்பட்டி ஜமீன் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக, ஹரிச்சந்திர நாயுடு என்பவர் இந்தக் கோயிலின்  திருப்பணிகளைக் கவனித்து வந்ததாகச் சொல்கிறார்கள், இந்த ஊர்ப் பெரியவர்கள். தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

நம்பிக்கைகள்:

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணியம்மாளுக்குச் சூடி, சுவாமியை தரிசித்துவிட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்களுக்கு இங்கு வந்து, அன்னபூரணி அம்மைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். குழந்தை வரம் இல்லாதவர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

                இந்தத் திருத்தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலம் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்குச் சான்றாக, இங்குள்ள தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் தலவிருட்சம் வில்வ மரம்.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு… சிவனுக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலைசாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், இத்திருத்தலத்தின் கன்னி மூலையில் பிள்ளையாரும், வாயு மூலையில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகனும் அமைந்து உள்ளனர். மேலும், ஈசான்ய மூலையில் பைரவர் உள்ளார். அக்னி மூலையில் மடப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அமைந்துள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரைப் பூ போன்ற வடிவமைப்புடன் உள்ளது.

இத்திருத்தலத்தில், குபேர சனீஸ்வரர் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும்,  தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இவர் சந்நிதியின் அருகில், வற்றாத நூபுரகங்கை தீர்த்தக் கிணறும் உள்ளது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந் திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம்! 

ஆலயத்தைச் சுற்றியுள்ள கல்தூண்களில் பெருமாள், ஹனுமான், நாகம்மாள் எனப் பல தெய்வங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு தென் திசை நோக்கிய குருபகவானும், சிவனுக்கு நேர் எதிராக வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் சந்திரனும் அமைந்துள்ளார்கள்.

இத்திருத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

திருவிழாக்கள்:

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி பூஜை ஆகியவை இங்கு வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஒருகால பூஜை நடைபெறுகிறது.ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. 

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நடுசத்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதுநகர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top