Saturday Jan 18, 2025

நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம் – 636454.

இறைவன்

இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: செளந்தரவல்லி

அறிமுகம்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார். இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.

புராண முக்கியத்துவம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்த போது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது என கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் லட்சுமிவடிவ கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது.

நம்பிக்கைகள்

தீராத நோய்கள், திருமணத்தடை, அனைத்து வித பிரச்னைகளும் தீர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தொழில் வேலை வாய்ப்பு. நிலம், வீடு, வாகனம் வாங்க போன்ற காரியங்கள் ஈடேற இங்கு ராம வாக்கு (துளசி வாக்கு) கேட்டு அதன்படி செய்தால் காரியங்கள் வெற்றி அடைகின்றன என்று நம்பப்படுகிறது. புதிய வாகனங்களை இங்கு பூஜை செய்து எடுத்துச் செல்வதும் வழக்கம்.

சிறப்பு அம்சங்கள்

மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சிலைக்கு அக்காலத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டி, அடுத்து தயிர் அபிஷேகம் செய்வதற்குள் ஒரு அடி உயரத்திற்கு சாமி சிலைகளை புற்று மண் மூடி இருக்குமாம் ! புற்று மண்ணை அகற்றி விட்டு மீண்டும் அடுத்த அபிஷேகம் செய்வார்களாம். அதற்குள் சிலைகளைச் சுற்றி புற்றுமண் மூடிக்கொண்டே வருமாம். புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் புற்று நிரம்புவதில்லை. தற்போது, மூலஸ்தானத்தில் சாமிக்குப் பக்கத்தில் உள்ள பாம்புப் புற்று, தட்டு வைத்து மூடி வைக்கப்பட்டு இருக்கிறது. அமாவாசை, பவுர்ணமி காலங்களில் புற்றின் மேல் உள்ள தட்டு கீழே தள்ளப்பட்டுக் கிடக்கும். இந்தச் சமயங்களில் கோவிலுக்கு பாம்பு வந்து செல்கின்றது என்கிறார்கள். இத்தல விநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 75 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ராஜகோபுர வாயிலில் நுழைந்து சென்றால் இருபக்கமும் பெரியதிருவடி, சிறிய திருவடிகளான கருடாழ்வார், அனுமன் சிலைகள் உள்ளன. இதையடுத்து தெற்குப் பக்கமாக அரச மரத்து விநாயகர் உள்ளார். இதன் பக்கத்தில் சோமேஸ்வரர் ஆலய வன்னி மரத்து விநாயகர். இதைத் தொடர்ந்து நாகர் சிலைகள் வரிசையாகக் காட்சி தருகின்றன. கோவிலைச் சுற்றி கஜலட்சுமி, விஷ்வக்சேனர், சன்னதியும், இதனருகில் ஆண்டாள் சன்னதியும் உள்ளன. பக்கத்தில் சவுந்தரவல்லி சமேத சோமேஸ்வரர் ஆலயம். இதை அடுத்து நாகர் புற்றும், உள்ளன. வடக்குப் பக்கமாக விஷ்ணு துர்க்கை சன்னதியும், வடமேற்கில் வாகனங்களின் மண்டபமும், வடக்கில் சொர்க்க வாசல், வடக்கு மற்றும் வடகிழக்கில் நவகிரக சன்னதியும் உள்ளது. கொடிமரம், பலிபீடம். உள்ளன. தெற்கில் அஷ்டலட்சுமி, துளசிமடம் உள்ளது. உள்ளே சென்றால் கருடாழ்வார் சன்னதி உள்ளது. இதையொட்டி சபாமண்டபம் உள்ளது. சபாமண்டபத்தின் வெளியே மேல் பகுதியில் லட்சுமி நரசிம்மர், பிரகலாதன், சிவன், பிரம்மா, விஷ்ணு, முனிவர்களின் சுதைச் சிற்பங்களும் சபா மண்டபத்தின் உட்புறம் மேல் பகுதிகளில் சத்யநாராயணர், ஸ்ரீநிவாச கல்யாணம், ராதா கிருஷ்ணன் ருக்மணி, மகாவிஷ்ணு, நாரதர், அனந்தசயனம், பரதன் பாதுகை பெறுதல், ராமர் பட்டாபிஷேகம், அஷ்டலட்சுமி மற்றும் சிவன், பிரம்மா, விநாயகர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் உட்பட பல சுதைச் சிற்பங்கள் காட்சி மேடை உள்ளது. 16 கால் (கல்தூண்) நவராத்திரி மண்டபமான இங்குள்ள கல்தூண்களில், தச அவதாரமும், நாகர், விநாயகர், கருடர், ஆஞ்சநேயர், சுப்ரமண்யர், சிவலிங்கம், ஆழ்வார்கள், ஆமைமான், சிங்கம், அன்னம், கிளி, குதிரை, வேடன், கண்ணப்பர் சிவலிங்கத்திற்கு கண்களைத் தருதல், காளிங்கப்பாம்பின் மீது கண்ணன் நடனம் ஆடுதல், அனுமன் மரத்திலும் கீழே சீதையும், பூமாதேவி தாங்குதல், கருடாழ்வார். சங்கு, சக்கரம், நாமம், துவார பாலகர்கள், கூனி உட்பட பல சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பவுர்ணமி தோறும் சத்ய நாராயண பூஜையும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் ராகு காலத்தில் துர்க்கை பூஜையும், செவ்வாய் வெள்ளி நாட்களில் மாலை நேரத்தில் அஷ்டலட்சுமி (துளமி மடம்) பூஜையும், கருடாழ்வார், ஆண்டாள், விஷ்வக் சேனர், மற்றும் அரச மரத்து விநாயகருக்கு அபிஷேக வழிபாடும், திருவிளக்கு பூஜையும் 1008 சங்கு பூஜையும் (அபிஷேகம்) சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலைப் பூஜையும் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களில் சிறப்பு பூஜையும், உண்டு. பங்குனியில் தேர்த் திருவிழாவும் உண்டு.

திருவிழாக்கள்

தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு, கோகுலாஷ்டமி, தீபாவளி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கும். சனிக்கிழமை விசேஷ நாளாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆவணி சுவாதியில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விஜயதசமி அன்று சுவாமி வீதி உலா நடத்தப்படும். பிரதோஷ நாட்களில் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் நன்மை உண்டாகும். பங்குனி மாதத்தில் 19 நாள் பிரம்மோற்சவம் நடக்கும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நங்கவள்ளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top