தொப்பலாக்கரை உய்யவந்த பெருமாள் கோயில், விருதுநகர்
முகவரி :
தொப்பலாக்கரை உய்யவந்த பெருமாள் கோயில்,
தொப்பலாக்கரை,
விருதுநகர் மாவட்டம் – 626114.
இறைவன்:
உய்யவந்த பெருமாள்
அறிமுகம்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை – சாயல்குடி நெடுஞ்சாலையில் 22 கிலோமீட்டரில் உள்ள க.விலக்கு என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ.யில் உள்ள தொப்பலாக்கரைக்கு செல்ல வேண்டும். பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் குளத்தூர் என அழைக்கப்பட்ட இவ்வூரில் சைவம், வைணவம் உள்ளிட்ட எல்லா சமயங்களிலும் எவ்வித பாகுபாடுமின்றி செழித்திருந்த பெருமையுடைய இவ்வூரின் மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்த வண்ணன் கி.பி.1229 ஆம் ஆண்டு முதல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் உய்யவந்த பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்டது.
புராண முக்கியத்துவம் :
கருவறை அர்த்த மண்டபம் என்ற அமைப்பில் கற்றளியாக பாண்டியர் கால கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தில் மூலவராக நின்ற கோலத்தில் உய்யவந்த பெருமாள் சேவை சாதிக்கிறார். உருவாக்கப்பட்ட வேளையில் பெருமாளின் இருபுறமும் பிராட்டிமார் இருந்ததை கல்வெட்டால் அறியலாம். ஆனால் தற்போது ஒரே உபய நாச்சியாரை மட்டும் பார்க்க முடிகிறது. அந்நியர் படையெடுப்பின் போது இங்குள்ள விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்ட செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன. தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது.
இவ்வூர் விவசாய தொழிலை முழுவதும் நம்பி இருந்ததால் ஆண்டுதோறும் சீராக மழை பொழிவது தானிய விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி பருவமழை துவங்கும் காலத்தில் கிராம மக்களை பெருமாளுக்கு பொங்கல் வைக்க கோரிக்கை வைத்ததும் அவர்கள் வேண்டியபடியே காலத்தில் போதிய மழை பெய்து உணவு பஞ்சம் வைக்காமல் காலந்தோறும் மக்களை காத்தருகிறார்.
நம்பிக்கைகள்:
கோவிலின் எதிரில் வடப்புறம் அக்கால மரபுப்படி மன்னன் பாண்டியன் கிணறு, அதற்கு தென்புறம் உயர்ந்த பீடத்தில் கலைநயத்துடன் விளக்குத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. இருபக்கமும் ஆஞ்சநேயர் கருடாழ்வார் சிற்பங்களும், பலிபீடமும் காணப்படுகிறது. இதன் அருகே அற்புத கலை வேலைபாட்டுடன் சிம்ம வாகனம் ஒன்றும் உள்ளது. இது இங்கு துர்க்கை அம்மன் கோவில் கி.பி.1298 இல் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் வீரன் சடைக்கன் என்பவனால் தானமளிக்கப்பட்டுள்ளது. துர்க்கை அம்மன் கோவில் தற்போது அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துவிட்ட நிலையில் இந்த சிம்ம வாகனம் பெருமாள் கோயிலில் உள்ளது.
கி.பி.1288-ல் முதலாம் மாறவர்மன் குணசேகரனின் ஆட்சிக் காலத்தில் நாட்டுக் குளத்தூரில் உள்ள உய்யவந்த விண்ணகரப் பெருமாள் கோயிலுக்கும், திருக்காட்டுப்பள்ளி என்ற சமண பள்ளிக்கும் நன்கொடையளிக்கப்பட்டதை அர்த்த மண்டப தென்புறத்தில் உள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி.பி.1294-ல் இப்பெருமானுக்கு குளத்தூர் நின்ற வாதிப்பிரான் அழகப்பெருமாள் என்பவர் செய்த நிவந்தகள் குறித்த கல்வெட்டு கருவறை மேற்கு அதிஷ்டானத்தில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
திருவமுது பழக்கமும் அதிலிருந்து பணிபுரிபவர்களுக்கு பிரசாதம் வழங்கவும் கொடுக்கப்பட்ட தானம் குறித்த கல்வெட்டு மேற்குப் புற கருவறை அதிஷ்டானத்தில் காணப்படுகிறது மேலும் இதே மன்னன் கிபி 1636 ஆம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் நித்திய பூஜை சபரிமலையில் தானமளித்த செய்தி குறித்த கல்வெட்டு அர்த்த மண்டபத்தின் தெற்கு அதிஷ்டான பகுதியில் காணப்படுகிறது
திருவிழாக்கள்:
சித்ரா பௌர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பெருமாளுக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு திருமஞ்சனமும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி என்றும் அதற்கு முன் பின் நாட்களிலும் பல ஊர்களிலிருந்து வரும் மக்களின் குல தெய்வ வழிபாடும் நடைபெறுகிறது.
காலம்
கி.பி.1229 ஆம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தொப்பலாக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை