Saturday Oct 05, 2024

தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில்,

நெல்லையப்பர் கோயில் அருகில்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 006.

போன்: +91-462- 256 1138

இறைவன்:

தொண்டர்கள் நயினார் சுவாமி

இறைவி:

கோமதி அம்மன்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள தொண்டர்கள் நயினார் சுவாமி கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் தொண்டர்கள் நயினார் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். உற்சவர் பக்தவத்சலேசர் என்று அழைக்கப்படுகிறார். அன்னை கோமதி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரம். இக்கோயிலின் தீர்த்தம் பஞ்ச தீர்த்தம். வரலாற்று ரீதியாக இந்த இடம் வேணுவனம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் நெல்லையப்பர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது.

இக்கோயில் நெல்லையப்பர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருநெல்வேலியிலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரை மற்றும் திருவனந்தபுரத்திலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் குற்றாலம் சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு வந்தார். நெல்லையப்பரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது அவருடன் வந்த அடியார்கள், இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டுமென விரும்பினர். தம் விருப்பத்தை சம்பந்தரிடம் தெரிவித்தனர். சம்பந்தருக்கு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆசை இருந்தது. ஆனாலும், லிங்கத்தை தனியே பிரதிஷ்டை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே அகத்தியரை மானசீகமாக எண்ணி அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினார். அவர் வில்வவனமாக இருந்த இப்பகுதியில் ஓரிடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக இருப்பதாக காட்டினார். சம்பந்தரும் இங்கு வந்தார். சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டார். பின் சம்பந்தர், அடியார்களுடன் சேர்ந்து லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். சிவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவன், “தொண்டர்கள்நயினார்” என்ற பெயரும் பெற்றார்.

நம்பிக்கைகள்:

திருமண, புத்திர, நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

ஜோதிவடிவ சிவன்: சிவபக்தரான கருவூர்சித்தர் நெல்லையப்பரை தரிசிக்க வந்தார். அவர் நெல்லையப்பரிடம் தனக்கு காட்சி தரும்படி அழைத்தார். ஆனால், சிவனோ அவருக்கு காட்சி தரவில்லை. எனவே கருவூரார், “ஈசன் இங்கில்லை, எருக்கு உண்டாகுக!” என்று கோபத்துடன் சாபமிட்டுவிட்டு திரும்பிச் சென்றார். சிறிது தூரம் சென்றபிறகு சிவன் அவருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். அவர் சிவனை வணங்கியபோது, ஜோதியானது நெல்லை தலத்தை நோக்கி வந்தது. கருவூராரும் பின்தொடர்ந்தார். ஜோதி இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்குள் ஐக்கியமானது. பின் கருவூராருக்கு சிவன் காட்சி தந்து, “பொறுமை அனைவருக்கும் அவசியம். பொறுமை இல்லாதவர்களால் எதையும் அடைய முடியாது,” என்று உபதேசித்து விட்டு மறைந்தார். கருவூராரும் உண்மையை உணர்ந்தார். பின், “ஈசன் இங்கிருக்கிறார், எருக்கு அற்றுக!” என்று சொல்லிவிட்டு தன் தலயாத்திரையை தொடர்ந்தார். கருவூர்சித்தருக்கு சிவன் காட்சி தந்த உற்சவம் ஆவணி மூலத்தில் நடக்கிறது.

முன்னும், பின்னும் திரும்பிய விநாயகர்: இத்தலத்து சிவனை திருஞானசம்பந்தர் வழிபட்டிருந்தாலும், என்ன காரணத்தாலோ அவர் பதிகம் பாடவில்லை. அம்பாள் கோமதி தனிச்சன்னதியில் சுவாமிக்கு இடதுபுறத்தில் கிழக்கு நோக்கியிருக்கிறாள். இவளுக்கு முன்புறம் மகாமண்டபத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதியில் அபிராமி அந்தாதி பாடி வழிபடுவது சிறப்பு. ஆடித்தபசு விழாவின்போது, அம்பாளுக்கு மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் இவளுக்கு தாலிப்பொட்டு, புடவை சாத்தி வேண்டிக்கொள்கிறார்கள். இவளது சன்னதி பிரகாரத்தில் அரசமரத்தின் கீழே வினை தீர்க்கும் விநாயகர், ஆவுடையார் மீது இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் மற்றோர் விநாயகர் மேற்கு நோக்கி அருளுகிறார். ஒரே இடத்தில் முன்னும், பின்னும் திரும்பிய விநாயகர்களை காண்பது விசேஷமான தரிசனம்.

திருவிழாக்கள்:

       சித்ராபவுர்ணமி, ஆனி உத்திரம், ஐப்பசியில் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெல்லையப்பர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top