தொட்டியனூர் அஜயகாளி தேவி திருக்கோயில், ஈரோடு
முகவரி :
தொட்டியனூர் அஜயகாளி தேவி திருக்கோயில்,
தொட்டியனூர்,
ஈரோடு மாவட்டம் – 638312.
இறைவன்:
அஜயராமன்
இறைவி:
அஜயகாளி தேவி
அறிமுகம்:
ராமபிரானும் காளி தேவியும் ஒரே வளாகத்தில் கோயில் கொண்டு அருளும் தலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள தொட்டியனூர். ஜய என்றால் வெற்றி என்று அர்த்தம். அஜய என்பதற்கு யாராலும் வெல்ல முடியாது என்று பொருள். இத்தளத்தில் ஸ்ரீராமர் காளி இருவரது பெயருக்கு முன்னால் அஜய என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சிறப்பு. ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து அந்தியூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் இரட்டை கரடு என்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொட்டியனூர் நிறுத்தம் உள்ளது. அதன் .பக்கத்திலேயே கோயில் உள்ளது
புராண முக்கியத்துவம் :
இங்கே இருவரும் சேர்ந்து இருக்க காரணமாக ராமாயண கால சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. இராவணனிடம் இருந்து சீதாபிராட்டியை மீட்க மகா காளியின் அருள் வேண்டி அவரை வழிபட்டார் ராமன். அப்போது மகாகாளி தோன்றி யாராலும் வெல்ல முடியாத அம்பினை ராமபிரானுக்கு வழங்கி அருள் செய்தாள். அந்த காளியின் அம்சமாகவே இத்தலத்தில் அதே காளியம்மன் அமைந்திருப்பதாகவும் இந்த அன்னை துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரு சேர அமைந்த அம்சம் என்றும் கூறப்படுகிறது. ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர் இத்தலத்தில் சீதை, லட்சுமணன், அனுமன் சமதே அஜயராமணராக தனிசன்னதியில் காட்சி அளிக்கிறார். மகாகாளி கோவில் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை நிறைந்த சுதையாலான விமானம் அமைந்துள்ளது. மண்டபத்தில் திரிசூலம், பலிபீடம், சிம்மவாகனம் காணப்படுகிறது. கருவறைக்கு வெளியே இருபுறமும் நான்கு திருக்கரங்களோடு காவல் தெய்வங்களும், முகப்பில் சுதை உருவமாக கஜலட்சுமி, விநாயகர், கலைமகள் மூவரும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். கருவறையில் சாந்த சொரூபியாக அஜயகாளி எழுந்தருளியுள்ளாள்.
நம்பிக்கைகள்:
மஞ்சள் கலந்த தண்ணீரை கோயிலில் மஞ்சள் பால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அம்மனுக்கு பிரசித்திபெற்ற செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் பால் அபிஷேகம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் கிடைக்கும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமையும் விசேஷமாக ஆனி ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிக சிறப்பானது.
காளியை வேண்டி பயன்பெற்றவர்கள் கரும்பச்சை வண்ணத்தில் 18 முழம் புடவை சாத்தி நன்றி கடன் செலுத்துகிறார்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிட்ட வறுமையிலும் பாடுபவர்களும் இந்த காளி அம்மனை வணங்கி கணிசமான நற்பலனை பெறுவதற்காக சொல்கிறார்கள். இங்குள்ள துர்க்கைக்கு ராகுகால வேளையில் பசு நெய் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் அனைத்து விதமான நன்மைகளையும் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அஜய காளி தேவிக்கு மிகவும் உகந்த ஜெயமதுராஷ்டகத்தை மகா மண்டபத்தில் அமர்ந்து படிப்பவர்களின் வாழ்வில் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
அந்தியூர்க்கு அருகில் உள்ள பிரம்மதேசத்தில் பெண்மணி ஒருவர் அஜயகாளியின் தீவிர பக்தை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடந்தே கோயிலுக்கு வந்து அம்மனை வணங்கி செல்வது வழக்கம் ஒரு நாள் வியாழக்கிழமை இரவில் அவரது கனவில் தோன்றி நாளை பலத்த மழை இருக்கிறது எனவே என்னைத் தரிசிக்க கஷ்டப்பட்டு இங்கே வர வேண்டாம். அதனால் இன்று முன்கூட்டியே வந்து உனக்கு தரிசனம் தருகிறேன் என்றாள். அவள் சொன்னது போலவே மறுநாள் பெருத்த மழை பெய்தது.
இக்கோயிலை சுற்றி உள்ள நந்தவனத்தில் உள்ள மலர்களை மட்டுமே பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பூ, பழம் பூஜைக்கு ஏற்றுக்கொள்வதில்லை. பசுநெய் மட்டுமே பெற்று கொள்கிறார்கள்.
இவ்வாலய முருகன் கிழக்கு பார்த்தவாறு நின்ற கோலத்தில் அருள்கிறார். அவரது வலது புறமாக இரட்டை பிள்ளையார் சன்னதி உள்ளது. ஸ்ரீராமரின் கருவறை தெற்கே வெட்ட வெளியில் நாராயணப் பெருமாளின் ஆறடி உயர கற்சிலை பேரழகோடு திகழ்கிறது. ராமேஸ்வரத்தில் கடலில் நவகிரக பிரதிஷ்டை செய்து இருப்பதை போன்று நவகிரகங்களாக ஒன்பது தூண்களை நீருக்குள் அமைத்து வழிபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள். தல விருட்சங்களாக வேம்பும், பன்னீர் மரமும் திகழ்கின்றன.
திருவிழாக்கள்:
தினமும் ஆறுகால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், மூல நட்சத்திரம் மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் ஆணி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, சங்கட சதுர்த்தி, தைப்பூசம், சித்திரை தமிழ் வருடபிறப்பு, ஆங்கில வருடபிறப்பு என அனைத்தும் நல்ல முறையில் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி தினங்களில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தொட்டியனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்