தேவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
தேவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
தேவூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
இறைவன்:
பசுபதீஸ்வரர்
இறைவி:
பர்வதவர்த்தினி
அறிமுகம்:
இவ்வூர் திருவாரூர்-நாகை சாலையில் உள்ள கீழ்வேளூர் என்ற திருத்தலத்தின் தெற்கில் மூன்று கிமீ தூரத்தில் தேவூர் உள்ளது, தேவர் வழிபட்டதால் தேவூர் எனப்படுகிறது, தென்காட்டூர் என ஒரு பெயரும் உள்ளது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. ஊரின் மத்தியில் கோச்செங்கட் சோழன் கட்டிய அழகிய மாடக்கோயில் மற்றொன்று ஊரின் தென்கிழக்கில் உள்ள பசுபதீஸ்வரர். பெரும்பாலோனோர் மாடக்கோயிலை மட்டும் தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். மாடக்கோயிலின் முகப்பில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் தென்பகுதியில் சிறிய தெரு செல்கிறது அதில் ½ கிமீ சென்றால் இந்த பசுபதீஸ்வரர் கோயிலை அடையலாம். இக்கோயில் ஆயிரம் ஆண்டு பழமையென கூறலாம்.
பெரிய வளாகம் சுற்றுசுவருடன் அமைந்துள்ளது அதில் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டு இறைவன் பசுபதீஸ்வரர் உள்ளார். அவரின் இடப்புறம் கிழக்கு நோக்கிய இறைவி பர்வதவர்த்தினி கோயில் கொண்டுள்ளார். இறைவனது கருவறை சோழர்கால கருங்கல் கட்டுமானம் கொண்டது விமானம் சேர்ந்த கருவறை இரண்டும் ஒரு தேர்போன்ற காட்சி தருகிறது. முகப்பில் கூம்பு வடிவ அர்த்தமண்டபம் உள்ளது. அதற்கு முன்னர் ஒரு மகாமண்டபம் இருந்திருக்கலாம், தற்போது தகர கொட்டகை போடப்பட்டுள்ளது. அதற்கு எதிரில் ஒரு சிறு மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறையில் இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார் கருவறை வாயிலில் விநாயகர் சுப்பிரமணியர் உள்ளனர்.
புராண கதை சொல்லும் சிற்பம் ஒன்றுள்ளது. இவ்வூரில் தேவ தம்பதியர் இருவர் பசுவாகவும் கன்றாகவும் பிறந்தனர். பசு ஒருநாள் பாம்பு தீண்டி இறந்துவிட கன்று பரிதவித்தது, அதனை பொறுக்கவொண்ணாமல் இறைவனே பசுவாக மாறி அக்கன்றை காத்ததால் இறைவன் இங்கே பசுபதீஸ்வரர் எனப்படுகிறார் என கூறுகின்றனர். அத்துடன் தேவ தம்பதிகளுக்கு ரிஷபாரூட காட்சியும் அளித்தார் இறைவன் என்கின்றனர். மேலும் கருடன் வழிபட்ட இறைவன் என்கின்றனர். கருவறை கோட்டங்களில் தென்முகன் மட்டும் உள்ளார். வடபுறம் சண்டேசர் உள்ளார். இறைவியின் கருவறை செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வடமேற்கில் சிறிய சன்னதியாக வலம்புரி விநாயகர் உள்ளார். இறைவனின் இடப்பாகம் கொண்ட இறைவியாக இங்கே காட்சியளிப்பதால் திருமணம் வேண்டி வருவோருக்கு உடனே நிறைவேறிடும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி