Saturday Jan 18, 2025

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர் போஸ்ட்- 609808 மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-237 650.

இறைவன்

இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 38ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை வழிபடும் போது அதையறியாத மன்னன் வானவெளியில் செலுத்திய தேர் அழுந்திய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும் போது கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். கோயிலின் வலப்புறம் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் திருச்சுற்றில் சொர்ண பைரவர், கால பைரவர், சூரியன், நவக்கிரகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் துர்க்கா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர், கைலாசநாதர், பாபஹரேஸ்வரர் காணப்படுகின்றனர். மூலவர் சன்னதியின் வெளியில் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், அருகில் வலஞ்சுழி விநாயகர் சன்னதியும் உள்ளன.மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை பரமேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில், பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு ஆதரவாக சிவனை குறை கூறினார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால் தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே இவ்வூரிலுள்ள பெருமாளின் பெயர் “ஆமருவியப்பன்’ என்றானது. பசுவாக மாறிய பார்வதி பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு கடைசியில் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றாள். “சவுந்தர்ய நாயகி’ என இவளை அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம். பார்வதியை பசுவாக சபித்த சிவன் வருத்தமடைந்து இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் “வேதபுரீஸ்வரர்’ என்பதாகும்.

நம்பிக்கைகள்

தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாøல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 101 வது தேவாரத்தலம் ஆகும். அகத்திய முனிவர் இத்தல இறைவனை பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது இதை அறியாத ஊர்த்துவரதன் என்னும் அரசன் வான் வெளியில் தேரை செலுத்தினான். அந்த தேர் செல்லாது அழுந்திய காரணத்தால் இத்தலம் தேரழுந்தூர் ஆனது. சிறப்பம்சம்: இத்தல இறைவனை வேதங்கள், தேவர்கள், அஷ்ட திக் பாலகர்கள், முனிவர்கள் பூஜை செய்துள்ளனர். சிவனும், பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபம் இன்னமும் உள்ளது. சிவனும் சக்தியும் பிரிந்த காலத்தில், அவர்களை சந்திக்க இந்திரன் முதலான தேவர்கள் இங்கு வந்தனர். ஆனால் நந்தி அவர்களை சிவனை சந்திக்க அனுமதிக்கவில்லை. எனவே அஷ்டதிக் பாலகர்களும் இந்த ஊரைச்சுற்றி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த அஷ்ட லிங்கங்கள் இன்றும் உள்ளன. காவிரிக்கும், அகஸ்தியருக்கும் இங்கு சாபவிமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனித் தனி சன்னதி உள்ளது. ஞானசம்பந்தர் குழந்தையாக இந்த ஊருக்கு வந்தபோது இரண்டு திசையிலும் இரண்டு கோபுரங்கள் உயர்ந்து இருந்ததால் எது சிவன் கோயில் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது இத்தலத்தில் இருந்த பிள்ளையார் “அதோ ஈஸ்வரன் கோயில்’ என சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிள்ளையார் “ஞானசம்பந்த விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை அகத்தியர் வழிபட்டுள்ளார்.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமிக்கு பத்து நாள் முன்னதாக கொடியேற்றி தேர் திருவிழாவுடன் முடிகிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேரழுந்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top