தெற்காலத்தூர் நாகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ராதாமங்கலம் (தெற்காலத்தூர்) நாகநாதர் சிவன்கோயில்,
தெற்காலத்தூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
இறைவன்:
நாகநாதர்
இறைவி:
சாந்தநாயகி
அறிமுகம்:
ராகுகேதுமங்கலம் எனப்படும் ராதாமங்கலம், தற்போது தெற்காலத்தூர் எனப்படுகிறது. கீழ்வேளூரிலிருந்து தேவூர் செல்லும் சாலையில் கடுவையாறு செல்கிறது அதன் வடகரையில் 2 கி.மீ. சென்றால் ராதாமங்கலம் எனப்படும் தெற்காலத்தூர் உள்ளது. சாலையோர கிராமம் தான், இங்கு பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது நாகநாதர் கோயில். இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். நீண்ட முகப்பு மண்டபம் உள்ளது, அதில் நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளார். கருவறை ஒட்டி தென்புறம் நாகராஜா நாகராணி இருவருக்கும் சிலை வடித்து வைத்து வழிபடுகின்றனர். கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் அடுத்து தான்யலட்சுமி உள்ளார் இது ஏனென்று அறியக்கூடவில்லை. அடுத்து முருகன் சன்னதி உள்ளது. வடபுறம் தெற்கு நோக்கிய பைரவர் சிற்றாலயம் அமைந்துள்ளது. வடகிழக்கில் நவகிரகம் உள்ளது. காலை மாலை பூஜை நடக்கிறது. பூஜை முடிந்தவுடன் சென்றுவிடுகிறார்.
பல நூறாண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் காலப்போக்கில் சிதைந்து இருந்ததினால் இதை முற்றிலும் புதிதாக கட்டியுள்ளனர். இந்த ஆலய மூலவர் நாகநாதஸ்வாமியை இன்றும் நாகலோகத்தை சேர்ந்த நாகராஜா மற்றும் நாகராணியினால் பூஜை செய்யப்பட்டு வருவதாக ஐதீகம்.
நம்பிக்கைகள்:
இங்கு உள்ள இறைவன் பெயர் நாகநாதஸ்வாமி. இந்த ஆலயத்தில் உள்ள தேவியான சாந்தநாயகியை அங்கு புற்றில் வாழ்ந்து வரும் நாகலோகத்தை சேர்ந்த நாகராணி இன்றும் பூஜித்து வழிபடுவதாக ஐதீகம். சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கேது கிரக தோஷம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நாகநாதஸ்வாமி மற்றும் தேவி சாந்தநாயகியை பூஜித்தப் பின் நாகராணியையும் பூஜித்து வணங்கினால் சர்ப்பதோஷங்கள் விலகும், வேண்டியவைக் கைகூடும் என்பது நம்பிக்கை. மஹா சிவராத்திரி அன்று நாகராஜர் நாகூரில் நாகநாதஸ்வாமியை பூஜிக்கும் போது தலைப் பகுதி நாகூர் ஆலயத்திலும், வால் பகுதி தெற்காலத்தூர் ஆலயம் வரையும் நீண்டு கிடப்பதாக ஐதீகம் உள்ளது. மகாசிவராத்திரிக்குப் பிறகு அடுத்த அமாவாசை வரை அங்கு தங்கி இறைவனை பூஜை செய்து வரும் இரு நாகங்களும், அமாவாசை அன்று அருகில் உள்ள நாக தீர்த்தத்தில் நீராடிய பின் பூஜையை நிறைவு செய்து இறைவனின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டு செல்வார்களாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெற்காலத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி