Saturday Jan 18, 2025

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம். போன்:+91-4151- 257057, 94432 40127.

இறைவன்

இறைவன்: சொர்ணபுரீஸ்வரர் இறைவி: உமையாள், சொர்ணாம்பிகை

அறிமுகம்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில் என்பது விழுப்புரம்மாவட்டம் தென்பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சொர்ணபுரீசுவரர் என்றும், அம்பிகை உமையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானதாகும். இச்சிவாலயத்தின் மூலவரான சொர்ணபுரீசுவரர் லிங்க வடிவில் காட்சிதருகிறார். இந்த லிங்கம் சோடச லிங்கம் எனப்படும் 16 பட்டைகளுடன் கூடியதாகும். ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தன்று காலையில் பாலநந்தியின் இரண்டு கொம்புகளிடையே சூரிய ஒளியானது சென்று சிவலிங்கத்தின் மீது படுகிறது. இந்த லிங்கம் நவபாசாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை உடையது. மேலும் 5.5 அடி உயரம் கொண்டது. காகபுஜண்டரின் சமாதி இக்கோயிலுக்கு அருகே உள்ளது.

புராண முக்கியத்துவம்

1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனம் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு. இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது. காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. “பால நந்தி’ என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார். இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது. முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. குருபகவான் சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது. இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளது.

நம்பிக்கைகள்

விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், ராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று ராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால், சந்தனம், தேன் அபிஷேகம் செய்தால் இளம் நீலநிறமாக மாறுவதை காணலாம்.

சிறப்பு அம்சங்கள்

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று. காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது. ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.

திருவிழாக்கள்

ஆவணி பவுர்ணமி, பங்குனி உத்திரம், பிரதோஷம், சிவராத்திரி

காலம்

1300 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தென்பொன்பரப்பி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கள்ளக்குறிச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top