தென்கரை கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
தென்கரை கைலாசநாதர் சிவன்கோயில்,
தென்கரை, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
கைலாசநாதர்
அறிமுகம்:
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ சென்றால் புத்தாறு ஓடுகிறது, அதன் தென் கரையில் கிழக்கு நோக்கி பயணித்தால் இரண்டு கிமீ தூரத்தில் தென்கரை உள்ளது. புத்தாற்றின் தென்கரை என்பதை தன் பெயராக கொண்டது இந்த கிராமம். இந்த ஆற்றின் கரையை ஒட்டியே சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயிலை ஒட்டி ஒரு பெரியதொரு குளம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். ஆயிரம் வருடங்கள் கடந்த இறைவன். இறைவன்- கைலாசநாதர் இறைவி – பெயர் தெரியவில்லை. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். அவரின் முன்னர் அர்த்தமண்டபம் மகா மண்டபம் என உள்ளது. அந்த மகாமண்டபத்தின் கிழக்கில் வாயிலுக்கு பதில் ஒரு சாளர மைப்பு உள்ளது, அதன் வழியே தான் இறைவனை தரிசிக்க வேண்டும், இப்படி சாளரதரிசனம் செய்தல் பல நன்மைகளை தரும். சாளரத்தின் வெளியில் நந்தியும், அடுத்து ஒரு அழகிய மேடையில் பலிபீடமும் உள்ளது. ஒரு பெருங்கோயில் தன்னிலை இழந்து இத்தகைய நிலைக்கு வந்துள்ளது என அறிய முடிகிறது.
இறைவி தென்புறம் நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இவரின் முன்னம் உள்ள மகாமண்டப வாயில் வழியே இறைவனை சென்று நாம் தரிசிக்க இயலும். தென் வாயிலின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். கருவறை மற்றும் விமான கட்டுமானம் சோழர் கால கட்டிடக்கலையை நினைவூட்டும் வண்ணம் உள்ளது, கருவறை கோஷ்டத்தில் அழகிய தக்ஷ்ணமூர்த்தி ஒரு கட்டுமலை மீது அமர்ந்து உள்ளார். அவரது காலடியை சுற்றி சனகாதியர் கரம் உயர்த்தி அந்த மலையை தாங்கிய வண்ணம் உள்ளமை பார்க்க சிறப்பாக உள்ளது. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் மற்றும் வள்ளிதெய்வானை சமேத முருகன் உள்ளனர். சண்டேசர் தன் வழமையான இடத்தில் உள்ளனர்.
கருவறை கோட்டமாக இல்லாமல் வடக்கு நோக்கி துர்க்கை ஒரு தனி மாடத்தில் உள்ளார். வடகிழக்கில் நவகிரகம் மற்றும் பைரவர் சூரியன் உள்ளனர். கிணற்றுக்கு பதில் ஒரு தொட்டி மட்டும் உள்ளது. கிராமத்தின் வட கிழக்கில் ஆலயம் மற்றும் குளம் உள்ளது. இது போன்ற கோயில்களை போற்றி வழிபட்டால் ஊர் சுபிட்சமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டுள்ளது. தென் புறம் கோயில் அழகை மறைக்கும் வண்ணம் பெரிய தகரகொட்டகை போடப்பட்டுள்ளது. அண்டவெளியில் இருந்து கோயில் சுற்றில் ஏற்படும் நேர் மின்னாற்றல் தடைபடும். ஒரு கால பூசை. பிரதோஷம் போன்றவை நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி