தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்
முகவரி :
தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்,
சிவன் கோவில் தெரு,
தூத்துக்குடி மாவட்டம் – 628002.
இறைவன்:
சங்கரராமேஸ்வரர்
இறைவி:
பாகம்பிரியாள்
அறிமுகம்:
தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கர ராமேஸ்வரர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றனர். இறைவன் – சங்கரராமேஸ்வரர் இறைவி – பாகம்பிரியாள்
தற்போது நாம் காணும் திருக்கோயில் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயிலாகும். பலரால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது, இத்திருக்கோயிலில் தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமி தூரம் தான், அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் சத்திரம் எனப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
பாண்டிய மன்னராட்சியின் பிற்கால பாண்டிய மரபில் குறுநில மன்னரான சந்திரசேகர பாண்டியனின் புதல்வரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். பரம்பரை வளர மக்கள்செல்வம் இல்லையே என வருந்திய மன்னனை, பெரியோர்கள் காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வருமாறு பணித்தனர். மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது இறைவனது குரல் அசரீயாக “பாண்டியா திருமந்திர நகரில் உள்ள, காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா என ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோயில் ஒன்றை எழுப்பினார். நித்திய பூஜை செலவினங்களுக்காக சங்கரராமேஸ்வரருக்கு நிலங்களும் அளித்தான். கோயிலுக்கு சொந்தமாக நூறு ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நம்பிக்கைகள்:
இத்திருக்கோயிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற கிணற்று தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் தரும் அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோவிலில் சுவடி இருப்புக் குறித்து நடத்தப்பட்ட கள ஆய்வில் கிடைத்த 13 சுவடிக்கட்டுகளில் உள்ள 3 ஆயிரத்து 127 ஏடுகள் இருந்தன. இந்த சுவடிகள் பெரும்பாலும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரம் என்று அழைக்கப்படும் ஏழு திருமுறைகளும் மற்றொரு சுவடியில் பெரியபுராணமும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும் உள்ளது. மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவை நானூறு அகத்தியர் தேவாரத்திரட்டு, திருமுருகாற்றுப்படை நூலும் திருமந்திரம் நூல் சுவடியும் முழுமையாக இருந்தது. மேலும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி என்ற சுவடியும், பாகம்பிரியாள் இரட்டைமணிமாலை என்ற சுவடியும் இருந்தன.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டு நான்கு ஏக்கர் பரப்பில் உள்ளது திருக்கோயில். இரண்டு பிரகாரங்கள் உள்ளது. இக்கோயிலை ஒட்டி பெருமாள் கோயிலும் உள்ளது. கோயில் கட்டுமானம் பெரும்பகுதி கருங்கல் கொண்டு அமைந்துள்ளது, பெரும்பகுதி செட்டியார்கள் திருப்பணியாக உள்ளது. இறைவன் முன்னர் அர்த்தமண்டபம், மகாமண்டபம் என உள்ளது
இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு கரங்களில் ஒரு கரத்தில் தாமரை கொண்டும் மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடி பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் உள்ளார். இறைவன் எதிரில் உயர்ந்த கொடிமரம் நந்தி உள்ளது. அதனை கடந்தவுடன் வாயிலின் இருபுறமும் சூரியன் சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாயிலில் அழகிய விநாயகர் தனி சன்னதியில் உள்ளார்.
கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரகார சன்னதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர் அடுத்து புறச்சுவற்றில் மாடம்போல் ஏற்படுத்தி கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன. வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார் அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனி முருகன் சன்னதியும் உள்ளது. வடபுற சுவற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுவற்றில் சற்று தள்ளி தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னதி உள்ளது.
வடகிழக்கில் தீர்த்த கிணறும் உள்ளது. வடகிழக்கில் அழகிய சன்னதியில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னதி அழகிய மண்டபத்தில் உள்ளார்கள். அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார்.மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர். இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர் முருகன், ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.
திருவிழாக்கள்:
காலை 6.00 – 12.00 மணி வரை மாலை 4.00 மணி நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு பள்ளியறை புஜையுடன் நடை சாத்தப்படும் சித்திரை தேரோட்டம் வைகாசி சண்முகருக்கு புஷ்பாஞ்சலி புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை இதற்காககோயிலின் பின்புறம் பெரிய பாரிவேட்டை மைதானம் உள்ளது. ஐப்பசியில் திருக்கல்யாணம் கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல் மார்கழி திருப்பள்ளி எழுச்சி தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா மாசியில் மகா சிவாரத்திரி பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தூத்துக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி
ஜூலை 1, 2024 at 5:09 மணி
அருமையான கோவில் மன அமைதி கிடைக்கும் இடம்
ஜூலை 3, 2024 at 2:18 மணி
நன்றி
மே 23, 2024 at 12:04 மணி
மகிழ்ச்சி