Wednesday Dec 18, 2024

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44-2627 2430, 2627 2487.

இறைவன்

இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: பாலாம்பிகை

அறிமுகம்

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியருக்கு , இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார். இத்தலத்து அம்பிகையையும், திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர் , இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.இத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி , இத்தலத்து சிவபெருமானை வழிபட , நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது.

புராண முக்கியத்துவம்

சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர் முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன் நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம் என அருள்புரிந்து அனுப்பி வைத்தார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார். பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார். ரேணுகை கோயிலே புகழ்பெற்ற,”கருமாரியம்மன் கோயில்’ என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் “திருவேற்காடு’ என அழைக்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும். திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார். வழிபட்டோர்: பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு “விடந்தீண்டாப்பதி’ என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்கப்பட்டார். மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர். இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். மூர்க்கநாயனார்: இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவேற்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவேற்காடு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top