Friday Jan 24, 2025

திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி- 609 609. புதுச்சேரி. போன் +91- 4368 – 265 693, 265 691, 98940 51753.

இறைவன்

இறைவன்: திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி, சாந்தநாயகி

அறிமுகம்

சுந்தரேஸ்வரர் கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில் தேவதீர்த்தம் எனும் தீர்த்தமும், தலவிருட்சமாக புன்னை மரமும் உள்ளது. இப்பகுதியின் பெயர் கோயில் மேடு. இத்தலத்தின் இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி. வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம். திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் “புன்னைவனநாதராக’ அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

மகாபாரத போரின்போது பாண்டவர்கள், கவுரவர்கள் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனர் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனர் அவரிடம் பன்றியை தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “”ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?” என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “”அர்ஜுனன் “மஸ்யரேகை’ (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்,” என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.

நம்பிக்கைகள்

நல்ல நண்பர்கள் கிடைக்க, எதிரிகள் தொல்லை, ஆணவம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

மாப்பிள்ளை சிவன் ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், “”உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!” என்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று “மாப்பிள்ளை அழைப்பு’ கொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை, “மாப்பிள்ளை!’ என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை. கோயில் அமைப்பு சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் சிவன், லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது. அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை, “சாந்தநாயகி’ என அழைக்கின்றனர். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவளுக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்குகின்றனர். திருஞானசம்மந்தர் காரைக்கால் செல்லும் முன்பு, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்தார். அவர் படகில் இருந்து இறங்க முயன்றபோது, கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே, அவர் கடலில் நின்றே சுவாமி குறித்து பதிகம் பாடிவிட்டு சென்றுவிட்டாராம். சிவன், வேடன் வடிவில் வந்ததால் இவ்வூர் “வேட்டக்குடி’ என்றும், அம்பாள், மீனவப்பெண்ணாக பிறந்த தலம் என்பதால், “அம்பிகாபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கூடியது.

திருவிழாக்கள்

மாசிமகத்தில் 3 நாட்கள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வரிச்சக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்கால்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top