Wednesday Dec 25, 2024

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேதே ரங்கமன்னார் திருக்கோயில், விருதுநகர்

முகவரி

வடபத்ரசாயி (ரங்கமன்னார்) மற்றும் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626 125, நிர்வாகஅதிகாரி : 04563-260254 ஸ்ரீஅஹோபிலமடம் – ஸ்ரீவெங்கடேசன், ஆராதகர் : 09245407764

இறைவன்

இறைவன்: வடபத்ரசாயி (ரங்கமன்னார்) இறைவி: ஆண்டாள்

அறிமுகம்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். கி.பி. 1536ம் ஆண்டு பாண்டிய மன்னர்களாலும் சோழ மன்னர்களாலும் விரிவுபடுத்தி கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம் : ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் “புத்தூர்’ என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து “ஸ்ரீவில்லிபுத்தூர்’ என பெயர் பெற்றது. தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாக கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதை கண்ணாடியிலே கண்டு களிப்பாள். மீண்டும் பூக்களை களைந்து பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார். ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதை தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு,’ என்றார். ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதையும் இறைவனையே நினைத்து ஏங்கி தொழுதபடியே இருந்தாள். இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கத்திற்கு வந்து சந்திக்க சொல்ல, கோதையும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள் . ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க இறைவனும் ஏற்று இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். வைணவர்களின் முக்கிய த்தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது.

நம்பிக்கைகள்

திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் , வியாபார விருத்தி, குடும்ப ஜஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

சிறப்பு அம்சங்கள்

மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் வடவிருசத்தினடியில் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடிவருட சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் கதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்பருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் உருவங்கள் இருக்கின்றன. விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபடதிறந்து வைக்கப்படுகின்றன.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 90 வது திவ்ய தேசம்.மூலவர் வடபத்ரசாயி (ரங்கமன்னார்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தினுடைய கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.

திருவிழாக்கள்

ஆடிப்பூரத் திருவிழா 10 நாள் புரட்டாசி பெரிய பெருமாள் உற்சவம் 10 நாள் பங்குனி திருக்கல்யாண உற்சவம் 10 நாள் மார்கழி எண்ணெய் காப்பு திருநாள் கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவில்லிபுத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதுநகர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top